அரங்கேற்றம்: அனன்யா குண்டலப்பள்ளி
ஜூன் 9, 2018 அன்று ஃப்ரீமான்ட் லலித கான வித்யாலயாவின் மாணவி குமாரி அனன்யா குண்டலப்பள்ளியின் அரங்கேற்றம் ஓலோனி கல்லூரி அரங்கில் நடைபெற்றது. சக்ரவாஹ வர்ணத்துடன் தொடங்கி, அடாணா ராகத்தில் ஜெயசாம ராஜேந்திர உடையார் இயற்றிய ஸ்ரீ மஹாகணபதிம் பஜேஹம், எந்தரோ மஹானுபாவுலு என்ற ஸ்ரீராக பஞ்சரத்னக் கீர்த்தனை என்று நிகழ்ச்சி தொடர்ந்தது.

"சீதம்ம மாயம்மா" என்ற வசந்தா ராக தியாகராஜ கிருதியை கல்பனா ஸ்வரத்துடன் அற்புதமாகப் பாடினார். முத்துஸ்வாமி தீக்ஷிதரின் த்விஜாவந்தி ராகத்தில் அமைந்த அகிலாண்டேஸ்வரி கிருதி, அன்னமாச்சார்யாவின் "எந்த மாத்ரமுன"வை (ராகமாலிகா) அடுத்து "என்ன கானு" என்ற பத்ராசல ராமதாஸரின் பந்துவராளி கிருதியை ராக ஆலாபனை, நிரவல் மற்றும் கல்பனா ஸ்வரங்களுடன் பாடியது சிறப்பாக இருந்தது. மிருதங்கத்தில் திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரனும், வயலினில் திரு. விக்ரம் ரகுகுமாரும் அருமையாக வாசித்தனர்.

தஞ்சாவூர் சங்கர ஐயரின் "மஹாதேவ சிவ சம்போ" (ரேவதி), "கமலாப்த குல" (தியாகராஜர், பிருந்தாவன சாரங்கா) என்ற பாடல்களையும், சந்த் துக்காராமின் "சாவலே சுந்தர" என்ற அபங்கையும் பாடினார். "கமலாப்தகுல" மற்றும் அடுத்துப் பாடிய "பாயோ பாயோஜி" (பஹாடி ராக பஜன்) இரண்டுக்கும் அனன்யாவின் மூத்த சகோதரர் அன்வேஷ் தபலா வாசித்தார். "பராசக்தி" (பாகேஸ்ரீ, திரு. R. ராஜகோபாலன்), Dr. பாலமுரளி கிருஷ்ணாவின் கதனகுதூஹல தில்லானா என நிகழ்ச்சி களைகட்டியது. அருணகிரிநாதரின் "விறல் மாறனைந்து" (மாண்டு) மற்றும் "நகுமோமு" (மத்தியமாவதி, தியாகராஜர்) முதலான பாடல்களுடன் நிகழ்ச்சி முடிவுற்றது.

அனன்யாவின் அரங்கேற்றத்தை அங்கீகரித்துப் பள்ளியின் சார்பாகப் பெயர் பதித்த வெள்ளித்தட்டை திருமதி. லதா ஸ்ரீராம் (பள்ளி நிறுவனர் மற்றும் இயக்குனர்) அளித்தார்.

ரமாதேவி கேசவன்,
ஃப்ரீமான்ட்

© TamilOnline.com