ஸ்ரீ சத்யநாராயணர் கதை
ஜூன் 10, 2018 அன்று ஆசார்யா பெர்ஃபார்மிங் அகடமி மற்றும் நூபுர கீதா அமைப்புகள் இணைந்து 'ஸ்ரீ சத்ய நாராயணர் கதை' என்ற நாட்டிய நாடகத்தை, எல்ஜின் சமுதாயக் கல்லூரி அரங்கத்தில் வழங்கின. இதில் சித்திரிக்கப்பட்ட ஐந்து கதைகளும் பௌர்ணமியன்று நடக்கும் சத்தியநாராயண பூஜையின்போது விவரிக்கப்படுவனதாம் என்றாலும், ஒரு நாட்டிய நாடகமாகப் பார்ப்பது புதுமையான அனுபவம்.

அகடமி நிறுவனர் திருமதி ஆஷா ஆசார்யா அடிகா நாடகத்தின் நடனங்களை வடிவமைத்ததோடு இயக்கியுமிருந்தார். அவர் பல முக்கியப் பாத்திரங்களையும் ஏற்று நடித்தார். பங்களூரு திரு எஸ்.வி. பாலகிருஷ்ணா அவர்கள் இசை, டாக்டர் கே. வசந்தா பரத்வாஜ் மேடைக்கதை ஆகியவற்றுக்குப் பொறுப்பேற்றிருந்தனர். இந்தியாவிலிருந்து வந்திருந்த இசைக்குழுவினரான திருமதி தீப்தி ஸ்ரீநாத் (குரலிசை), திரு எஸ்.வி. பாலகிருஷ்ணா (மிருதங்கம்), ரகுநந்தன் ராமகிருஷ்ணா (புல்லாங்குழல்), பிரத்யும்னா சொரபா (ரிதம்) ஆகியோர் சிறப்பாகப் பின்னணி வழங்கினர்.

அகடமியின் மாணவர்கள் பாடிய கணேச துதியுடன் நிகழ்ச்சி தொடங்கியது. அடுத்து ஆஷா ஆசார்யா கணேசர் துதி ஒன்றிற்கு நடனமாடினார். பின்னர் ஒரு சிவ நடனத்தை அவரோடு இணைந்து முதுநிலை மாணாக்கர்கள் வழங்கினர். பிறகு ஸ்ரீ சத்யநாராயணர் கதைகள் அரங்கேறின. அன்னப்படகு, ஆதிசேஷன் போன்றவற்றை மேடைக்குக் கொணர்ந்த அழகும், சிறந்த ஒளி, ஒலி அமைப்புகளும் வெகு நேர்த்தி. இடையே வந்த மீனவர் நடனம் அற்புதம். கதையின் அங்கமாக நடந்த சத்யநாராயண பூஜையுடன் நாடகம் நிறைவடைந்தது.

சந்திரா பப்புதேசு,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com