டல்லஸ் தமிழர் திருவிழா 2005
பல ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு அறக்கட்டளையும் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் (FETNA) மீண்டும் இணைந்து வட அமெரிக்கத் தமிழ் இளைஞர் சங்கம், டல்லஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் ஆகியோருடன் ஒருங்கிணைந்து ஜுலை 2, 3, 4 அன்று தமிழர் திருவிழா 2005 மாநாடு நடத்தின.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் இலங்கை வானொலி நிலைய முன்னணி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது அவர்கள். வானொலியில் அவரது செந்தமிழைக் கேட்டு ரசித்தவர்கள் மேடையில் நிகழ்ச்சியை நடத்திய அவரது பாங்கைக் கண்டு வியந்தார்கள். நிகழ்ச்சிகளைச் சுவையாக அறிமுகப்படுத்துவதிலிருந்து, பொறுமை இழந்து சீழ்க்கை அளித்த பார்வையாளர்களை 'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்தகுடிக்கும் மூத்தவர்களாக' நடந்து கொள்ள வேண்டாம் என்று நகைச்சுவையோடு வேண்டிக்கொள்வது வரை, அவரது நாகரீகமான பேச்சு விழாவுக்கு மெருகூட்டியது.

அவ்வப்போது அவர் உதித்த முத்துக்களில் சில: 'தமிழைத் தேட வேண்டியிருக்கிறது தமிழ் ஊடகங்களில்.' '1967 இல் வானொலிப் பயிற்சியின்போது வளரும் தலைமுறைக்குத் தமிழைத் தெளிவாகப் பேசக் கற்பிக்கும் ஆசிரியன் நீ என்றார்கள்.' 'தனியார் ஊடகங்கள் பெரும்பாலும் தமிழுணர்வு இல்லாதவர்கள். முதலீடு செய்தவர்கள் தமிழரல்லாதவர்கள். சின்னத்திரையிலும் கூட.' 'இளைய சமுதாயத்தின் சிந்தனையில் ஒரு கலப்படமான மொழி நிலவி வருகிறது.'

வழக்கமாக ஜூலை 4 தமிழ்ச்சங்கப் பேரவை மாநாடு தேசிய மாநாடு என்பதால் நாடெங்கிலும் இருந்து பார்வையாளர்கள் வருவது மட்டுமல்லாமல், வெவ்வேறு மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் தங்கள் சிறப்பான கலைநிகழ்ச்சிகளைத் தேசியப் பார்வையாளர்கள் முன்னால் நடத்தித் தங்கள் திறமையை வெளிக்காட்ட முடிந்திருக்கிறது. இம்முறை மற்ற தோழமை அமைப்புகளுக்கும் வாய்ப்பளிக்க வேண்டியதாலோ அல்லது டல்லஸின் தொலைவு காரணமாகவோ, ஓக்லஹோமா, டெக்சாஸ் மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் மட்டுமே கலைநிகழ்ச்சிகள் நடத்தின. இருந்தாலும், இங்கேயும் இவ்வளவு திறமையான கலைஞர்கள் இருக்கிறார்களா என்று மூக்கில் விரலை வைக்க வைத்து விட்டார்கள்.

நகைச்சுவைப் பேச்சாளர் பேரா. ஞான சம்பந்தன், நியூ ஜெர்சியில் 2003 இல் நடந்த பேரவை மாநாட்டில் யார் மனத்தையும் புண்படுத்தாத பண்பான நகைச்சுவை மூலம் எல்லோர் மனத்தையும் கவர்ந்தார். அதனால் அவரது வருகையை இந்த ஆண்டு ஆவலோடு எதிர்பார்த்தனர், மக்களை அவர் ஏமாற்றவில்லை. தான் தலைமை தாங்கிய 'தமிழ்ப் பண்பாடு வளர்வது தாய் நாட்டிலா? அயல் நாட்டிலா?' என்ற பட்டிமன்றத்தில் நகைச்சுவை ததும்ப நடத்தி மக்களை மகிழ்வித்தார். தென்றல் வாசகர்களுக்கு அறிமுகமான ஸ்மைல் பரமசிவம் தமிழ்நாட்டில் பொதுநலச் சேவை பற்றிப் பேசினார். இளைய தலைமுறையினர் அவரைத் தேடிப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தது அடுத்த தலைமுறைக்கு அவர் நல்ல வித்திட்டு வருகிறார் என்பதற்கு அடையாளம்.

மாலையில் சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி இசைக்கலைஞர் முகுந்த்தும், கோர்னல் பல்கலைக்கழகத்தின் முனைவர் அருள் செங்குட்டுவனும் இணைந்து தயாரித்த 'இதயப்பூக்கள்' என்ற இசைத் தட்டை 'அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே' என்ற இசைப்படத்தோடு அமெரிக்காவில் வெளியிட்டார் முனைவர் நாக. கணேசன்.

ஈழத்து மலையகத் தமிழ் மக்களின் அல்லலைப் பற்றியும், ஈழத்தமிழர் போராட்டங்கள் பற்றியும் பேச வந்த இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர் பேச்சு நேரத்தைத் தாண்டிக் கலைநிகழ்ச்சி தொடங்க வேண்டிய கட்டத்தையும் வெகுவாகக் கடந்தார். பொறுமையிழந்த பார்வையாளர்களின் சலசலப்பும், சீழ்க்கை ஒலியும் மிஞ்ச மேடை விளக்குகளை அணைத்துச் சைகை காட்டினாலும், அவர் இறங்குவதாக இல்லை. இதனால் அவர் சொல்ல வந்தது அடிபட்டுப் போயிற்று. தமிழ் ஈழப்பகுதி என்னும் இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் தமிழர்கள் வலிமையோடு இருந்தால் தான் இலங்கையின் மலையகத்தில் வாழும் தோட்டத் தொழிலாளித் தமிழர்களுக்குப் பாதுகாப்பு என்பதுதான் அவர் செய்தி. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கலை எளிதல்ல.

அடுத்து வந்தது 'கலக்கல்' என்ற ஓர் அற்புதமான கலைநிகழ்ச்சி. எக்ஸ்பிரஷன்ஸ் நாடகக் குழு தயாரித்த இந்த நிகழ்ச்சியை நாட்டியத்தை வடிவமைப்பது போலவே அமைத்தவர்கள் ராதிகாவும் மாலதியும். கே. கே. ஸ்ரீனிவாசன் எழுதி நடித்த இந்த நாட்டிய, இசை, நாடகக் கதம்ப நிகழ்ச்சி இந்த மாநாட்டின் முத்திரை நிகழ்ச்சி என்றே சொல்லலாம். திரை விலகும்போதே தூத்துக்குடி ஜங்ஷனை மேடைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். பிரம்மாண்டமான ரயில் நிலையத்தைப் பின்னணித் திரையில் கொண்டு வந்து, ரயில் வண்டி நிலையத்தின் மேடைகளில் நடக்கும் கூக்குரல்கள், உரையாடல்கள், அறிவுப்புகள், எல்லாவற்றிற்கும் மேலாய், நிஜமாகவே மேடையில் ஒரு ரயில் வண்டி வருவது போல் தோற்றமளிக்கும் அட்டை வண்டி ஒன்றையும் திறம்படக் கொண்டு வந்து நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே ஒரு கலக்கு கலக்கி விட்டார்கள்!

பின்னர் டல்லஸ் தம்பதியர் ஒரு வழிகாட்டியுடன் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்று கலைநிகழ்ச்சிகளைக் கண்டு அமெரிக்காவுக்கு அவர்களை அழைப்பது போல் காட்டி ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, பரதம், பொம்மலாட்டம், என்று பல ஆட்டங்களையும் காட்டினார்கள். இதற்குப் பின்னணியாக பழைய தமிழ்ப் படப் பாடல்களையும் நேரடியாகப் பாடியது ஒரு பின்னணிக் குழு. முத்தாய்ப்பாய் ஒரு தேர்த்திருவிழா. தேரும், அலைமோதும் கூட்டமும், பொய்க்கால் குதிரை ஆட்டமும், ஒரே அமர்க்களம் போங்கள். இது போன்ற நிகழ்ச்சிக்காகவாவது இந்த மாநாட்டுக்கு வரவேண்டும்.

இதைத் தொடர்ந்து இசைஞானி இளையராஜாவின் சிம்·பொனியில் திருவாசகம் இசைத்தட்டு வெளியீட்டு விழா நடந்தது. அருள்திரு காஸ்பர் ராஜ் அவர்கள் அற்புதமாகப் பேசி இசைத்தட்டை வெளியிட்டார். பின்னர் நடன ஆசிரியர் சினிமா புகழ் ரகுராம் சுந்தரம் வடிவமைத்த நாட்டியங்களில் அவரது பெண்கள் திரைப் பட நடிகை காயத்ரி ரகுராம், சின்னத் திரை நடிகை சுஜா ரகுராம், திரைப்பட நடிகர் சிம்பு ஆகியோருடன் உள்ளூர் இந்திய இளைஞர்களும் ஆடினார்கள்.

திடீர் விருந்தினர் என்று 'குஷி' பட இயக்குநர், நடிகர் எஸ். ஜே. சூர்யா தோன்றுவார் என்ற அறிவிப்பு வரவே 'வேண்டாம்! வேண்டாம்' என்ற எதிர்ப்புக்குரல் எழுந்தது. அதையும் மீறி ஒரு நடனம் ஆடிய சூர்யாவை, கூக்குரல் தொடரவே ஏற்பாட்டாளர்கள் அமைதியாக மேடையிலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு போனார்கள். 'நியூ' என்ற திரைப்படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைக்க மாட்டேன் என்று தமிழ்நாட்டில் சலசலப்பு ஏற்படுத்திய இவரை, பெண்களைத் தரக்குறைவாய்ப் படங்களில் சித்தரிக்கும் இவரைத் தமிழ் மாநாட்டுக்கு அழைத்து வருவது இளைய தலைமுறைக்குத் தவறான எடுத்துக்காட்டல்லவா என்று கொதித்தார் தமிழ்ச்சங்கப் பேரவையின் சாக்ரடீஸ். 'அரங்கத்தில் பாதிப்பேர் எதிர்த்தால் உண்மையான எதிர்ப்பு. ஓரிருவர் எதிர்த்தல் அது தனி மனிதப் பிரச்சினை' என்றார் டல்லஸ் தமிழ்ச்சங்கத் தலைவியின் கணவர் ராஜன். யார் என்று அடையாளம் கூடத் தெரியாத குட்டி நடிகர்களை அழைத்து வம்பை விலை கொடுத்து வாங்குவானேன்?

மறுநாள் நிகழ்ச்சியில் முனைவர் சு. பழனியப்பன் நடத்திய 'செம்மொழித் திட்டத்தில் தமிழின் வருங்காலம்' என்ற கலந்துரையாடல் குறிப்பிடத்தக்கது. இதில் கலந்து கொண்ட பேராசிரியர்கள் வா.செ. குழந்தைசாமி, சாமுயெல் சுதானந்தா, அனந்தகிருஷ்ணன் ஆகியோர் செம்மொழி தமிழ் குறித்த விளக்கங்களையும் தகுதி களையும் இனி தமிழர் ஆற்ற வேண்டிய கடமைகள் பற்றியும் பல சிறந்த கருத்துகளை முன் வைத்தனர்.

ஆறாயிரம் உலக மொழிகளில் ஆறு மொழிகள் மட்டுமே செம்மொழிகள் எனப் போற்றப்படுகின்றன. அந்த ஆறில் ஒன்று தமிழ். பழம்பெருமை இரவல் வாங்கியதல்ல அது நம் பரம்பரைச் சொத்து. இந்திய வரலாற்றில் தமிழின் கொடை மிகப் பெரிது. தமிழுக்குச் செம்மொழி என்ற அங்கீகாரம் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்து வந்திருக்கும் பனிப்போருக்கு முடிவுகட்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார் பேரா. குழந்தைசாமி. இந்திய அரசு சமஸ்கிருதத்துக்கு ஒவ்வோராண்டும் செலவிடும் 150 மில்லியன் ரூபாய் அளவுக்குச் செம்மொழி தமிழுக்கும் செலவிட வேண்டும். ஒவ்வோரு மத்திய அரசுப் பல்கலையிலும் சமஸ்கிருதத்துடன் தமிழ்த்துறையும் இருக்க வேண்டும். கீதையைத் தெரியும் அளவுக்குக் குறள் பற்றியும் தெரிய வேண்டும். ராமாயண, மகாபாரதம் தெரியும் அளவுக்கு சிலப்பதிகாரமும், மணிமேகலையும் தெரிய வேண்டும். காளிதாசன் அளவுக்குக் கம்பன் தெரிய வேண்டும். இதற்கெல்லாம், சமஸ்கிருத நூல்கள் ஏனைய இந்திய மொழிகளுக்குப் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அளவுக்குத் தமிழ் நூல்களும் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று அளவுகோல்கள் வைத்தார் பேரா. குழந்தைசாமி.

மத்திய அரசின் செம்மொழி அங்கீகாரம் முதல் அடி. அடுத்த அடி, யுனெஸ்கோவின் உறுப்பு நாடுகள் தமிழைச் செம்மொழியென அங்கீகரிப்பது என்றார் பேரா. அனந்த கிருஷ்ணன். அப்போதுதான் உலக நாடுகள் எங்கும், குறிப்பாக, உலகத் தரப் பள்ளிகளில், தமிழ் கற்பிக்க ஏதுவாகும் என்றார் அவர். அதே நேரத்தில், நாலு பேருக்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே படிக்க வருவதால், ஆந்திரப் பிரதேசத்தின் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகம் தமிழ்த் துறையை மூட எண்ணியிருக்கிறது என்று வருந்தினார் அவர். மதிக்கப்படும் பல்கலைக் கழகங்கள் தமிழ்த்துறையை மூடுவது தமிழின் மதிப்பைக் குறைக்கிறது என்று கவலைப்பட்டார் அவர்.

இந்தியக் கல்வெட்டுகளில் பாதிக்கு மேல் தமிழில் இருந்தாலும், இருக்கும் தமிழ்க் கல்வெட்டுகளில் கால் பகுதி கூடப் பதிக்கப்படவில்லை. தமிழின் தொடர்ச்சியும் வளர்ச்சியும், வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்பச் செயல்படுவதில் இருக்கிறது. ஒவ்வோராண்டும் தமிழ்நாடு கல்லூரிகளில் சேரும் 680,000 மாணவர் களில் 45.6% பேர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள். இவர்களுக்குத் தமிழும் தமிழ் இலக்கியமும் கற்பிப்பது அவசியம் என்றார் அவர். அது மட்டுமல்லாமல் பிறமொழியினருக்கும் தமிழ் இலக்கியம், மரபு பற்றிய பாடங்களை உருவாக்க வேண்டும் என்றார் அவர். சிந்தனையைத் தூண்டிய பல செய்திகளை அளித்தது இந்த நிகழ்ச்சி.

கலைஞர் கருணாநிதியின் மகள் கவிஞர் கனிமொழியின் தலைமையில் நடந்த கவியரங்கம் கணவனின் பார்வையில் மனைவி, மனைவியின் பார்வையில் கணவன் என்ற சுவையான பட்டிமன்றக் கவியரங்கம். இரவு 9 மணிக்கு 'லஷ்மண் ஸ்ருதி' குழுவின் மெல்லிசை விருந்து திரைப்படப் பாடல்களைக் கொண்டு தொகுத்த நிகழ்ச்சி. உன்னிகிருஷ்ணன் அவர்களும் இதில் பங்கு கொண்டதால் நேரங்கடந்து நிகழ்ச்சி ஆரம்பித்த போதும் பார்வையாளர்கள் உற்சாகம் குறையவில்லை. ஆனால் சின்ன வூடு பெரிய வூடு போன்ற சர்ச்சைக்கு உள்ளான சில பாடல்களைத் தவிர்த்திருக்கலாம். ரசனைக் குறைவைப் பற்றிப் பார்வையாளர்கள் தங்களுக்குள் உரையாடிக் கொண்டது காதில் விழத்தான் செய்தது. தமிழ் மொழிக்கு 'செம்மொழி' அங்கீகாரம் கிடைத்திருக்கும் இந்த நேரத்தில் அதைக் கொச்சைப் படுத்துவது கலைஞர்களுக்கு இழுக்கு.

அறக்கட்டளையும் பேரவையும் சேர்ந்து நடத்தியதால் ஒரே மாநாட்டுக்கு இரண்டு அமைப்புகளின் உறுப்பினர்களும் வர முடிந்தது. ஆனால், நிகழ்ச்சிகளைப் பங்கு பிரித்த விதம் என்னவோ போல் இருந்தது. ஸ்மைல் பரமசிவம் பேசிய ஒரு நிகழ்ச்சி தவிர அறக்கட்டளை நடத்திய மற்ற எல்லா நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் இருந்தது மிகவும் உறுத்தியது. அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு மட்டுமே பயன்படக்கூடிய பல நிகழ்ச்சிகளை, தமிழ் இளைஞர் சங்க நிகழ்ச்சிகள் போல் தனித்தடத்தில் வைத்திருக்கலாம். கூட்டம் ஆவலோடு எதிர்பார்க்கும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு முன்னால் வைத்த அறக்கட்டளை நிகழ்ச்சிகள் அலுப்புத் தட்டின. தமிழர் திருவிழாவின் கலைநிகழ்ச்சிகளையும், சிறப்பு விருந்தினர் நிகழ்ச்சிகளையும் மட்டும் பொதுத் தடத்தில் வைத்து, தனித்தடத்தில் மற்ற அமைப்புகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் வைத்தால் எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தொகுப்பு: மணி மு. மணிவண்ணன்
உதவி: டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com