பணத்தால் கட்டப்பட்டது வீடு, உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம்
அன்புள்ள சிநேகிதியே,

கடந்த ஆறு மாதங்களாக உங்களை எழுத்தின்மூலம் சந்திக்க முடியாமல் போனதற்காக முதலில் உங்களிடம் மன்னிப்பைக் கோருகிறேன். சிலர் பிரச்சனைகளுக்கு என் கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத நிலையில் இருந்ததற்கும் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பல மாதங்களுக்கு முன்பு ஒரு திருமண விருந்தில் என்னை அடையாளம் கண்டுகொண்டு தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஓர் அன்பர் கேட்டார். "உறவுதான் முக்கியம் என்பது போல எப்போதும் எழுதுகிறீர்களே! பணம், பதவி, செல்வாக்கு என்று இருந்தால்தானே மனிதர்கள் நம்மிடம் ஒட்டிக் கொள்கிறார்கள். பாகப்பிரிவினையில் எத்தனை சகோதர, சகோதரிகள் சண்டை போட்டுக் குடும்பங்கள் பிரிந்து போயிருக்கின்றன. நானும் அதில் அடிபட்டவன். என் அப்பா இறந்தபோது என் சகோதரிகள், "ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை வந்து ஏதோ வெகேஷன் போல இருந்துவிட்டுப் போகிறாய். நாங்கள்தானே பார்த்துக்கொண்டோம். இப்போது வீட்டை விற்கும்போது வந்து நிற்கிறாய். அமெரிக்காவில் அப்படிச் சம்பாதிக்கிறாய். எங்களுக்கு விட்டுக்கொடுத்தால் என்ன" என்று என்னைக் குதறி எடுத்துவிட்டார்கள்.

நான் எதிலும் கையெழுத்துப் போடாமல் அன்றிரவே ஃப்ளைட் பிடித்துத் திரும்பி வந்துவிட்டேன். அப்புறம் பல மின்னஞ்சல்கள் அனுப்பினார்கள். நான் பதில் போடவில்லை. இங்கே எனக்குச் சில மாதங்கள் வேலை போய் நான் அனுபவித்த க‌ஷ்டங்கள் அவர்களுக்குத் தெரியாது. அப்பா இறந்து ஓராண்டு முடிந்ததற்குப் போயிருந்தேன். அப்போதே இந்த விஷயத்தையும் முடித்துவிடலாம், குடும்பங்களுடன் சேர்ந்து இருக்கலாம் என்ற நல்ல எண்ணத்துடன்தான் போனேன். அவர்களை ஏமாற்றும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. ஆனால், அப்பா இருந்த வீடு, நான் அவருக்கு மாதாமாதம் அனுப்பிய பணத்தில் கட்டிய வீடு. எனக்கு அம்மாவும் இல்லை. தற்போது அப்பாவும் இல்லை. இப்போது இரண்டு சகோதரிகளும் இருந்தும் இல்லாமல் ஆகிவிட்டார்கள்" என்று வருத்தத்துடன் பேசினார். இன்னும் நிறையப் பேசினார். சம்பவங்கள் சொன்னார். சுருக்கமாக அவர் சொன்னதை எழுதியிருக்கிறேன்.

இப்போது என்னுடைய கருத்துக்களை எழுதுகிறேன்
1. உடலாலும், பணத்தாலும் கட்டப்பட்டது வீடு. உறவுகளால் கட்டப்பட்டது குடும்பம். கூரை வீட்டில் குடித்துக்கொண்டு கும்மாளமாக இருக்கும் குடும்பங்களும் உண்டு. பார்த்திருக்கிறேன். 5 கார் கராஜ் வைத்துக்கொண்டு, 15 அறைகள் கொண்ட மேன்ஷனில் கணவனும், மனைவியும் பேசாமல் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு, குழந்தைகள் வெளியில் தங்கிக்கொண்டு, நாய்களைத் துணையாக வைத்துக்கொண்டு இருக்கும் குடும்பங்களையும் பார்த்திருக்கிறேன். என்னுடைய கருத்தில், நம் மனம் நிம்மதியாக இருந்தால் உறவுகள் அறுந்துபோவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எப்போது நம் மனம் பாதிக்கப்படுகிறதோ, அப்போதுதான் நினைக்கவேண்டும், "We took relationships for granted" என்று.

ஓர் அழகான வீட்டைப் பார்த்துப் பார்த்துக் கட்டுகிறோம் அல்லது வாங்குகிறோம். திடீரென்று சுவரில் ஒரு விரிசல், அடுப்பு எரியவில்லை. ஏதோ சூறாவளிக் காற்று அடித்து ஜன்னல் அடிபட்டுப் போகிறது. மனம் வேதனைப்படுகிறது. நாம் அந்த வீட்டை உடனே விற்றுவிடுவதில்லை. அவ்வப்போதே சரி செய்யப் பார்க்கிறோம். காரணம், என் வீடு, என் உடைமை, என் சொத்து. ஆனால், அதே முடிவை நாம் உறவுகளில் உரசல், விரிசல் ஏற்படும்போது எடுப்பதில்லை. முறித்துவிடத்தான் தோன்றுகிறது. அப்புறம் அந்த நாட்களை நினைத்து ஏங்குகிறோம்; கோபம் அல்லது ரோஷம் அல்லது துக்கம்தான் நினைவில் தங்குகிறது. அவர்கள் அப்படிப் பேசிவிட்டார்களே, இப்படி ஏமாற்றி விட்டார்களே, மனம் நோகச் செய்துவிட்டார்களே என்று மனது அதையே அலசி அலசி அழுதுகொண்டு சுய பச்சாதபத்தில் முழுகிவிடுகிறது.

வீட்டை எப்படித் துடைத்துப் பெருக்கி அழகாக வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறோமோ அப்படியே உறவுகளையும் மனதில் வைத்துக்கொண்டால் மனதில் நிச்சயம் நிம்மதி கிடைக்கும்.

2. "அப்படி அவர்கள் பேசினார்கள். இனிமேல் ஜன்மத்தில் அவர்கள் முகத்தில் விழிக்கமாட்டேன்" என்று சபதம் செய்தவர்கள் உண்டு. அவர்கள் சொன்ன வார்த்தைகளையே மனதில் உருப்போட்டு உருப்போட்டுப் பல வருடங்கள் அவர்களைப்பற்றியே நினைத்துக் கொண்டிருப்போம். இருப்பதோ ஒரு சின்ன மூளை. அது எத்தனையோ வருடங்களின் சம்பவங்களை இருத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. அழுக்குத் துணிகளையே ஒரு சின்ன சூட்கேஸில் அதிகம் அடைத்துவைத்து, புதுத்துணிகளையும் கலந்து வைத்தால் வெளியில் உடனே வருவது நாற்றம்தான்.

அதேபோலத்தான் நல்ல எண்ணங்களையும் கெட்ட எண்ணங்களையும் அடக்கி அடக்கி வைக்கும்போது, ஏதேனும் எண்ணங்கள் தோன்றும்போது, கெட்டதுதான் முதலில் வெளிப்படுகிறது. அவ்வளவுதான், நமக்குள்ளேயே நாம் negative vibrations ஏற்படுத்திக் கொள்கிறோம். அது நம்மையே பாதிக்கும்.

விருந்தில் சந்தித்த அந்த மனிதர் இன்னொரு கேள்வியும் என்னைக் கேட்டார். "உங்களுக்கும் பிறருக்கும் வேற்றுக் கருத்துக்களே இருந்ததில்லையா? நீங்கள் சந்திக்கும் மனிதர்களுடன் சண்டையே இருந்ததில்லையோ?" என்று கேட்டிருந்தார்.

அதற்கும் பதில் சொல்லிவிடுகிறேன்:
* பணத்தால் உறவு முறியும் என்றால் அதை விட்டுக் கொடுத்துவிடுவேன். என்னுடைய கருத்தில் It is not that you feel rich with what you have, you are rich with what you feel.

* என்னை விரும்புபவர்களும் இருக்கிறார்கள். வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். கண்டிப்பாக. வெறுப்பவர்களுக்கு என்னைப் புரியாது. அதனால் அவர்களது வெறுப்பைப் பொருட்படுத்துவதில்லை. விரும்புபவர்கள் வெறுப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்த வாய்ப்பைத் தவிர்க்க முயல்வேன்.

* செல்வாக்கு என்ற பெயரில் பிறர் என் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய ஈகோ பாதிக்காது.

இப்படியெல்லாம்தான் முயற்சித்துப் பார்க்கிறேன்.

உண்மையான உறவுகளில் இருக்கும் ஒரு பாதுகாப்பு, நிம்மதி, மகிழ்ச்சி, எனக்குப் பணத்தில், செல்வாக்கில் கிடைப்பதில்லை. அந்தப் பாதுகாப்பையும், சேவை உணர்வையும், கடந்த ஆறு மாதங்களில் எவ்வளவு பலமாக இருந்தது என்பதையும் நான் அனுபவபூர்வமாகக் கண்டும் இருக்கிறேன். I am really overwhelmed, I am fortunate. I feel blessed.

இன்னும் நிறைய எழுத ஆசைப்படுகிறேன். மனம் கனத்துப் போகிறது.

மீண்டும் சந்திப்போம்

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com