வெ. ஸ்ரீராம்
ஒரு மொழியின் விரிவாக்கத்தில் பிறமொழியிலிருந்து வந்த நூல்களுக்கு முக்கிய இடமுண்டு. கொடுப்பதும் கொள்வதும் மொழியின் இயல்பு. கா.ஸ்ரீ.ஸ்ரீ., கு.ப. ராஜகோபாலன், த.நா. குமாரசுவாமி, க.நா.சு., சரஸ்வதி ராம்நாத், சு. கிருஷ்ணமூர்த்தி, நா. தர்மராஜன், பிரம்மராஜன் தொடங்கி பலரும் பல்வேறு மொழி இலக்கியங்களைத் தமிழுக்குக் கொணர்ந்துள்ளனர். இந்த வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர் வெ. ஸ்ரீராம். நாற்பதாண்டுகளாக இப்பணிகளைச் செய்துவரும் இவர், தனது கலை, இலக்கிய முயற்சிகளுக்காகப் பிரெஞ்சு அரசாங்கத்தின் மிக உயரிய அங்கீகாரமான செவாலியே விருதை இருமுறை பெற்றவர். இவரது சிறப்பு மூலமொழியான பிரெஞ்சிலிருந்து நேரடியாகப் படைப்புகளை தமிழுக்கு அறிமுகம் செய்வது. இவர், செப்டம்பர் 1, 1944 அன்று, ஈரோட்டில் வெங்கட்ராமன் - கௌரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஈரோடு மகாஜன உயர்நிலைப்பள்ளியிலும், கரூர் முனிசிபல் பள்ளியிலும் பயின்றார். இளவயது முதலே தமிழார்வம் கொண்டிருந்த இவர், விருப்பப்பாடமாக சமஸ்கிருதத்தை எடுத்துப் படித்தார்.

தந்தை பள்ளி ஆசிரியர். அவர்மூலம் சார்லஸ் டிக்கன்ஸ், வால்டர் ஸ்காட், விக்டர் ஹ்யூகோ, டூமா போன்றோரின் படைப்புகள் அறிமுகமாகின. மொழிபெயர்ப்பாக அறிமுகமான பிரெஞ்சு இலக்கியங்கள் இவருள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தின. பிரெஞ்சைக் கற்கும் ஆர்வம் மேம்பட்டது. செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பிரெஞ்சை ஒரு மொழியாகப் பயில விரும்ப, ஆசிரியராக இருந்த எர்ஹார்ட் பாதிரியார், "பிரெஞ்சை எப்போது வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். நீ சம்ஸ்கிருதத்தையே படி. அதுதான் நல்லது" என்று அறிவுறுத்தினார். அதனால் தமிழ், ஆங்கிலம் இவற்றுடன் சம்ஸ்கிருதத்தையும் நன்கு பயின்று தேர்ந்தார். தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, பி.எஸ். ராமையா, நா. பார்த்தசாரதி, அகிலன், மு.வ., ஜெயகாந்தன் போன்றோரது எழுத்துக்கள் இவரது வாசிப்பார்வத்தைத் தீவிரமாக்கின.

இளங்கலை முடித்தவுடன் சென்னையில் ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார். அலையான்ஸ் பிரான்சேஸ் (Alliance Francaise) அமைப்பில் பிரெஞ்சு சொல்லித் தருவதை அறிந்த இவர், அங்கு ஆரம்பநிலை வகுப்பில் சேர்ந்து பயிலத் துவங்கினார். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தாலும் தொடர்ந்து பயின்று சில ஆண்டுகளிலேயே பிரெஞ்சு மொழியை சிறப்பாகக் கற்றுத் தேர்ந்தார். அக்காலகட்டத்தில் சி.சு. செல்லப்பா, சி. மணி. ந. முத்துச்சாமி, நா. பார்த்தசாரதி போன்ற எழுத்தாளர்களின் அறிமுகம் ஏற்பட்டது. அதுவரை வாசகனாக இருந்தவருக்கு எழுத்தார்வம் சுடர்விடத் துவங்கியது. பிரக்ஞை இலக்கிய இதழின் குழுவினருடன் இணைந்து அவ்விதழ் வெளியீட்டில் உதவினார். பிரெஞ்சு இலக்கியங்கள் பற்றி அடிக்கடி நடக்கும் இலக்கிய வாதங்களில் பங்கேற்று இவர் முன்வைத்த கருத்துக்கள் பலரையும் கவர்ந்தன. 'க்ரியா' ராமகிருஷ்ணன், ந. முத்துச்சாமி போன்றோர் இவர் பிரெஞ்சு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்க ஊக்குவித்தனர்.

Click Here Enlargeஆல்பெர் காம்யுவின் 'அந்நியன்' ஸ்ரீராமை மிகவும் கவர்ந்த நாவல். வெவ்வேறு காலகட்டங்களில் வாசித்தபோது வெவ்வேறு அனுபவங்களை அப்படைப்பு தந்தது. அவர் அதனைத் தமிழில் மொழிபெயர்க்க விரும்பினார். 'க்ரியா' ராமகிருஷ்ணன். அதனை 'க்ரியா' வெளியீடாக மிகச் சிறப்பாகக் கொண்டு வந்தார். அந்நூலுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. அசோகமித்திரன், சுந்தரராமாமி, ந.முத்துசாமி, திலீப்குமார் உள்ளிட்ட பலர் அந்நூலைப் பாராட்டினர். அடுத்ததாக இவர் மொழிபெயர்த்த அந்த்வான்-து-செந்த் எக்சுபெரியின் 'குட்டி இளவரசன்' பரவலாகப் பேசப்பட்டது. அந்நூல் உலகமுழுவதும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒன்று. 300 மொழிகளில் 14 கோடிக்கும் மேல் விற்பனை ஆனது. அதனையே தனது இரண்டாவது நூலாகத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்தார் ஸ்ரீராம். குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் வாசிக்கத் தகுந்த அந்த நூலுக்கு மிகச்சிறந்த வரவேற்புக் கிடைத்தது. தமிழில் அதிகம் வாசிக்கபட்ட மொழிபெயர்ப்பு நாவல்களில் குட்டி இளவரசனும் ஒன்று. தொடர்ந்து 'மீள முடியுமா?' என்ற சார்த்தரின் நாடகத்தை மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்தார். அக்காலகட்டத்தில் பிரெஞ்சு அரசாங்கத்தின் வரவேற்பின் பேரில் அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கு சில மாதங்கள் தங்கினார். நாடகத்தைப் பலமுறை பார்த்து அனுபவம் பெற்றார். பின் தமிழகம் திரும்பியவர் 'மீளமுடியுமா?' நூலை மொழிபெயர்த்து வெளியிட்டார். கூத்துப்பட்டறை குழுவினர் அதனை நாடகமாக நடித்தனர்.

ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பு நேரடியானது. மூலநூலை நேரடியாக வாசிக்கும் உணர்வை வாசகருக்கு அளிப்பது. பிரெஞ்சு - தமிழ் என இரு மொழிகளிலும் தேர்ந்த அவரது மொழிபெயர்ப்புககளில் அந்நியத்தன்மை எதுவும் தெரியாது. மொழிகளின் எல்லைகளைத் தாண்டி வாசகர்களின் நெஞ்சில் இடம்பிடிக்கும் தன்மையே அவரது மொழிபெயர்ப்பின் சிறப்பம்சம். பிரெஞ்சு - ஆங்கிலம் - தமிழ் என்ற வழிமுறையில் தமிழாக்கப்படும்போது, மூலமொழியின் அழகும் செறிவும் காணாமல் போய்விடவோ, குறைவுபடவோ வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு மாறாக பிரெஞ்சு மூலத்திலிருந்தே அதை நன்கறிந்த ஒருவர் பெயர்க்கும்போது அது சிறந்த படைப்பாகப் பரிணமிக்கிறது.

மொழிபெயர்ப்பு பற்றி ஸ்ரீராம், "நன்கு பரிச்சயமில்லாத ஒரு வரலாற்றுப் பின்னணியிலிருந்து வரும் மொழி, பண்பாடு சார்ந்த படைப்பை எடுத்துக்கொள்ளும்போது, அந்தப் பின்னணிகளை சரிவரப் புரிந்துகொள்ள வேண்டியது மொழிபெயர்ப்பாளருக்கு ஒரு முக்கியமான கடமை. மொழிபெயர்ப்பாளர் அதைப் புரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய மொழியை, நடையைப் பற்றி கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடைய வாசகத்தன்மை கெடாமல் இருக்கவேண்டும். வாசக நன்மை கருதி மூலக்கதையை மாற்றமுடியாது" என்கிறார். மேலும், "மொழிக்கு இருப்பதைப் போலவே, மொழிபெயர்ப்புக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் ஒரு பரிணாம வளர்ச்சி இருக்கிறது. அந்த அடிப்படையில் சில மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 'அந்நியன்' நாவலின் இறுதியில், சிறைச்சாலைப் பாதிரியாரிடம் பொறிந்து தள்ளிய மேர்சோ சொல்கிறான்: "எல்லாம் நான் இவ்வளவு நாட்களாக, ஏதோ இந்த நிமிடத்திற்காக, எனக்கு 'நியாயம்' வழங்கப்படும் இந்த ஒரு அற்ப விடியலுக்காகக் காத்திருப்பது போல ஆயிற்று. இங்கே, 'சிறிய' 'PETIT' என்றிருந்தது 'அற்ப' என்று மாற்றப்பட்டவுடன்தான், மூலத்திலிருக்கும் அதே 'தொனி'யைத் தமிழில் கொண்டுவர முடிந்தது. இதுபோன்ற பல திருத்தங்களைச் செய்திருக்கிறோம். சில சமயங்களில் வாக்கிய அமைப்பைத் திருத்தி அமைத்திருக்கிறோம். திருத்தங்களில் சிறியவை, பெரியவை என்று எதுவும் கிடையாது. தேவையான எந்தவொரு திருத்தமும் இறுதி வடிவத்தில் பொருளையும் தொனியையும் சீராக்கி மொழிபெயர்ப்பின் தன்மையை வளப்படுத்துகிறது" என்று சொல்லியிருப்பது முக்கியமானது.

ஸ்ரீராமின் மொழிபெயர்ப்புகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்று, ழாக் ப்ரெவரின் 'சொற்கள்' என்னும் கவிதைத் தொகுப்பாகும். 'தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம்' என்பது கட்டுரை நூல். பியர் பூர்த்யு 'கொலெஜ்-த-பிரான்ஸ்' நிறுவனத்தில் ஆற்றிய சிறப்புச் சொற்பொழிவின் அச்சு வடிவம் இந்த நூல். கதை, கவிதை, நாடகம், நாவல்களிலிருந்து மாறுபட்டுப் புதிதாக இக்கட்டுரை நூலை மொழிபெயர்த்திருந்தார் ஸ்ரீராம். க்னோக் அல்லது மருத்துவத்தின் வெற்றி (மூல ஆசிரியர்: ழூல் ரோமென்), கீழைநாட்டுக் கதைகள் (மூல ஆசிரியர்: மார்கெரித் யூர்ஸ்னார்), சின்னச்சின்ன வாக்கியங்கள் (மூல ஆசிரியர்: பியரெத் ஃப்லுசியோ), முதல் மனிதன் (மூல ஆசிரியர்: ஆல்பெர் காம்யு), ஃபாரென்ஹீட் 451 (மூல ஆசிரியர்: ரே பிராட்பெரி), காற்று, மணல், நட்சத்திரங்கள் (மூல ஆசிரியர்: அந்த்வான் து செந்த் எக்சுபெரி), மெர்சோ: மறுவிசாரணை (மூல ஆசிரியர்: காமெல் தாவுத்) போன்ற இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தகுந்தவை. ப்ரான்ஸ்வா த்ரூஃபோ, ரோபெர் ப்ரெஸ்ஸோன், லூயிமால் ஆகியோரைப் பற்றிய அறிமுக நூல்களையும் இவர் எழுதியிருக்கிறார்.

பிரெஞ்சுத் திரைப்படங்களைப் பற்றி இவர் முதன்முதலாக எழுதிய கட்டுரைத் தொடர் 'த்ரூஃபோவும் திரைப்படக் கலையும்'. இது மதுரையிலிருந்து வெளிவரும் 'வைகை' இதழில் வெளியானது. சென்னை ஃபிலிம் சொஸைட்டி வெளியிட்டு வந்த 'சலனம்' என்ற திரைப்பட மாத இதழிலும் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். 'பேசாமொழி' இதழில் உலக சினிமா சாதனையாளர்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பிரெஞ்சு 'LE MONDE' நாளிதழிலிருந்து 'ஹிந்து' நாளிதழுக்குப் பல கட்டுரைகளை மொழிபெயர்த்திருக்கிறார். 'திசையெட்டும்' காலாண்டிதழிலும் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளியாகியுள்ளன. 'தமிழ் இந்து' இதழுக்காகவும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் யூகிசேது வழங்கிய 'நையாண்டி தர்பார்' நிகழ்ச்சிக்கு ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். 'சின்னச் சின்ன வாக்கியங்கள்' நூலுக்காக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராயம் 'ஜி.யு. போப் மொழிபெயர்ப்பு விருது' வழங்கி இவரைக் கௌரவித்திருக்கிறது. 'புதிய அலை' இயக்குநர்கள் நூல் உலகின் மிகச்சிறந்த இயக்குநர்களை அறிமுகம் செய்யும் நூலாகும்.

அலையான்ஸ் பிரான்சேயின் நிர்வாகக் குழுத் தலைவராகப் பணியாற்றிய ஸ்ரீராம், ஃபிரெஞ்சு இலக்கிய, திரைப்பட ரசிகர் மையம் என்ற அமைப்பை உருவாக்கி அதன்மூலம் நல்ல திரைப்படங்கள், இலக்கியங்கள் குறித்த விழிப்புணர்ச்சியை ஆர்வலர்களிடம் ஏற்படுத்தியவர். பிரெஞ்சிலிருந்து தமிழுக்கு மட்டுமல்ல; தமிழிலிருந்து பிரெஞ்சிற்கும் சில படைப்புகளைத் தந்திருக்கிறார். ஞானக்கூத்தன், கனிமொழி போன்றோரின் கவிதைகளை ஃபிரெஞ்சில் பெயர்த்திருக்கிறார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்ற பாரதி வாக்கை தனக்கான முன்மாதிரியாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீராம், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு கர்மயோகியாக தவம்போல் இப்பணியைச் செய்து வருகிறார். ஃபிரெஞ்சு மொழியில் தோன்றிய பல அரிய படைப்புகளைத் தமிழில் மலரச் செய்திருக்கும் இவரது மொழி ஆற்றலையும், மொழிபெயர்ப்புத் திறனையும் தமிழ் இலக்கிய உலகம் இன்னும் நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். இலக்கிய உலகம் மிகவும் கடமைப்பட்டிருக்கிற, என்றுமே மறக்கக்கூடாத ஓர் எழுத்தாளர் வெ. ஸ்ரீராம்.

அரவிந்த்

© TamilOnline.com