NETS: சித்திரைத் திருவிழா
ஏப்ரல் 28, 2018 அன்று பாஸ்டன் அருகிலுள்ள லான்காஸ்டர் நகரத்தில் நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சித்திரைத் திருவிழாவைக் கொண்டாடியது.

இதில் கலைமாமணி திரு புஷ்பவனம் குப்புசாமியும் அவரது மனைவி திருமதி அனிதா குப்புசாமியும் இசைக்குழுவினருடன் வந்திருந்து இசைவிருந்து வழங்கினர். அரங்கத்தின் அமைப்பு தமிழ்க் கிராமங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அமைந்து இருந்தது.

திருமதி. பாலா, திருமதி. மயில்வாகனம் புகைப்படக் கலைஞர் கிரிஷ், சுரேஷ், குரு ஆகியோரின் கைவண்ணம் அரங்கத்துக்கு அணி சேர்த்தன.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது. தமிழ்ச் சங்கத் தலைவர் திரு மனோகரன் கணபதி வரவேற்புரை வழங்கினார். சிசுபாரதி பள்ளிக் குழந்தைகள் திருக்குறள் பாடல்களை இனிதாக வழங்கினர். நெட்ஸ் நிர்வாகக் குழு உறுப்பினர் திருமதி சரிதா வெங்கட் குப்புசாமி தம்பதியரை அறிமுகப்படுத்தினார். திருமதி சரிதா வெங்கட் மற்றும் திரு கார்த்தி அருணாசலம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான 'சூப்பர் சிங்கர்' பாட்டுப் போட்டிகள் விமர்சையாக நடந்தேறின. நடுவர்களாக குப்புசாமி தம்பதிகள் செயலாற்றி, போட்டியாளர்களுக்குப் பரிசு வழங்கினர்.

இசை நிகழ்ச்சி 'தமிழே உயிரே வணக்கம்' என்ற வாழ்த்துப் பாடலுடன் தொடங்கியது. கும்மி, காதல், தத்துவம், தமிழிசை, தெய்வம், செவ்விசை, திரையிசை, வாழ்வியல் என்று பலவகைப் பாடல்களும் மகிழ்வூட்டின. நியூ இங்கிலாந்து மாகாணத்தில் முதன்முறையாக ஒரே நாளில் குப்புசாமி இணையரின் பயிற்சிப் பட்டறையில் பயின்று மேடையேறிய 40 குழந்தைகளின் மக்களிசைப் பாடல்களைக் கேட்ட அனைவரும் மெய்சிலிர்த்தனர்.

இந்தியாவில் இருந்து வந்திருந்த திரு ராமச்சந்திர பிரகாஷ் (கீபோர்டு), திரு பிரதீப் பண்டிட்(தபலா), கருப்பன் கிணத்தடியான் (தவில்) ஆகியோரும், உள்ளுர் தபலாக் கலைஞர் ராஜேஷ் பாய் மற்றும் நெட்ஸ் உறுப்பினரின் குழந்தை ராஜின் மேளம் எல்லாம் மேடையைக் கலகலக்கச் செய்தன.

நெட்ஸ் செயலாளர் திருமதி சாந்தி சுந்தரமூர்த்தி, இசைக் கலைஞர்களை அறிமுகப்படுத்தியதோடு நன்றியுரையும் வழங்கினார். நெட்ஸ் குழு உறுப்பினர்கள் பிரபு ராம், பாலா சங்கர்ராஜ், சுரேஷ் கிருஷ்ணன், கிருஷ் வேல்முருகன், குரு கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திகேயன் கிருஷ்ணமூர்த்தி விழாவின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றினர்.

மனோஹரன் கணபதி,
பாஸ்டன், மாசசூஸட்ஸ்

© TamilOnline.com