சிகாகோ தமிழ்ச் சங்கம்: முத்தமிழ் விழா
ஏப்ரல் 29, 2018 அன்று சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் முத்தமிழ் விழா, லெமோன்ட் கோவில் கலையரங்கில் நடந்தேறியது. அதன் ஒரு பகுதியாக 'ஆட்டோகிராப்' திரைப்படப் புகழ் கோமகனின் 'ராகப்ரியா' இசைக்குழு' இன்னிசை நிகழ்ச்சி ஒன்றை வழங்கியது. "ஒவ்வொரு பூக்களுமே" என்ற தன்னம்பிக்கையை சிலிர்த்தெழச் செய்யும் பாடலை பார்வையிழந்த மாற்றுத்திறானளிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்க் கலைஞர்களும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளோடு கவியரங்கமும் நடத்தி மகிழ்வித்தனர்.

மற்றொரு நிகழ்ச்சியாக, உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை 2019ம் ஆண்டு சிகாகோ பெருநகரில் சிறப்போடு நடத்துவதற்கான தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. உலகத் தமிழ் ஆய்வு மன்றம், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கம் இணைந்து இந்த மாநாட்டை சிறப்புற நடத்திட அனைவருடைய ஒத்துழைப்பும் கோரப்பட்டது. 'பேலியோ உணவுமுறை'பற்றித் திரு நியாண்டர் செல்வன் விளக்கவுரை நிகழ்த்தினார். அவரோடு பின்னர் நிகழ்த்திய கலந்துரையாடல் பயனுள்ளதாக இருந்தது.

விழா தொடங்கு முன்னர் தமிழ்ச் சங்க முன்னோடிகள், ஆர்வலர்கள், மற்றும் 'நம்பிக்கை விழுதுகள்' தன்னார்வக் குழுவினர் இணைந்து இந்திய உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்புக்கிணங்க, காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைத்திடவும், காவிரி நீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைந்திடவும் வேண்டி மனிதச்சங்கிலிப் போராட்டம் நடத்தினர்.

செய்தித்தொடர்புக் குழு,
சிகாகோ தமிழ்ச் சங்கம்

© TamilOnline.com