'கொஞ்சம் கொஞ்சம்' எப்படி குடிகார கணவருடன் 'அட்ஜஸ்ட்' செய்து...
அன்புள்ள சிநேகிதியே,

நீங்கள் போன இதழில் 'கொஞ்சம் கொஞ்சம்' எப்படி குடிகார கணவருடன் 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டு வாழ்க்கையை தொடருவது என்பது பற்றி அறிவுரை கூறியிருந்தீர்கள். எனக்கு அது சரியாகப்படவில்லை. கணவர்கள் எப்படி வேண்டுமானாலும் இருப்பார்கள். திருந்த மாட்டார்கள். திருத்துவதும் கஷ்டம். ஆகவே பெண்கள்தான் அனுசரித்துக் கொண்டு போக வேண்டும் என்று ஏன் ஆண்களை ஆதரிக்கிறீர்கள். அந்தக் காலத்தில் தான் அடிமை வாழ்வு வாழ்ந்தோம் என்றால், இன்றைக்கும் இங்கேயும் இப்படித்தானா? நியாய மேயில்லை 'மேடம்'.

இப்படிக்கு
..........


அன்புள்ள சிநேகிதியே,

இது கேள்வியா, குற்றச்சாட்டா, தர்க்கமா என்று புரியவில்லை. 'அன்புள்ள சிநேகிதியே' மூலம் ஏதேனும் பதிலை எதிர்பார்க்கிறீர்களா என்றும் தெரியவில்லை. இருந்தாலும் என் கருத்துக்களை தெரிவிக்க இந்தப் பகுதியை பயன்படுத்துகிறேன்.

முதலில் இந்தப் பகுதியில் நான் எந்த அறிவுரையும் கூறவில்லை. ஆலோசனையும் என்னுடைய அபிப்பிராயங்களையும் தான் சொல்லி வருகிறேன். இரண்டாவது நான் ஆண், பெண் என்ற வித்தியாசம் பார்ப்பதில்லை. எனக்கு முக்கியம் 'உறவுகளின் மேம்பாடு'தான். சிநேகிதி, நீங்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்பதை மனப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்த சில குடும்பங்களில் ஆண்கள் தங்கள் குடும்பத் தினருக்குச் செலவு செய்வதைப் போல, மனைவிகளுக்கு அந்த உரிமையை கொடுப்பதில்லை. பண விவகாரங்களைத் தாங்களே கையாளுவதைத்தான் விரும்பு கிறார்கள். நன்கு படித்த, சம்பாதிக்கும் பெண்களுக்கும் இந்த கதிதான்.

அதே போல, சில சமயங்களில் அதிகம் படிக்காத, வேலைக்குப் போகாத பெண்களும் தங்கள் உரிமையை நிலைநாட்டி, கணவர் உறவினர், தங்கள் உறவினர் என்ற பாகுபாட்டைக் காட்டி பேதத்திலும், வாதத்திலும் தங்கள் வாழ்க்கையைக் கழித்து விடுவார்கள். சிலருக்குப் பொதுநலம் சிறிது அதிகமாக இருக்கும். சிலருக்குச் சுயநலம் தூக்கி இருக்கும். ஆணோ, பெண்ணோ எங்கே 'Double standards' இருக்கிறதோ அங்கே ஆரம்பித்து விடுகிறது உறவுகளின் உரிமைப் போராட்டம்.

காதல் திருமணமோ, இல்லை ஜாதகத் திருமணமோ, எப்படியிருந்தாலும் கணவன் மனைவி உறவுகளில் நெருடல் இல்லாமல் இருப்பது இல்லை. நாம் எல்லோரும் பொதுவில் ஒரு இலட்சிய கணவன்/மனைவியைத் தான் எதிர்பார்க்கிறோம். நாம் இலட்சிய கணவனாகவோ/மனைவியாகவோ இருந்தால் மட்டும் வாழ்க்கை சீராக அமைந்துவிடுவதில்லை. நம் இலட்சியத்தை, மற்றவர் அலட்சியம் செய்யும் போது உறவிலே ஒரு சிறு விரிசல் தெரியும். அதை அப்படியே விட்டுவிட்டால், functional disabilityல் தான் கொண்டு விடும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை எல்லா புத்தகங்களிலும் படிக்கிறோம். புரிந்து கொண்டு விட்டால் மட்டும் போதாது. அதற்கேற்பத் தங்கள் போக்கையும் சிறிது மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கிறது.

ஆசை, ஆசையாக பணம் சேமித்து, கடன் வாங்கி, ஒரு வீடு வாங்குகிறோம்/கட்டுகிறோம். சுவரில் ஒரு விரிசல் தெரியும். சாக்கடை அடைத்துக் கொள்ளும். ஒரு இடத்தில் நீர் கசியும். வேதனைப்பட்டாலும் அந்தக் குறைகளை நிவர்த்திக்கத்தான் முயற்சி செய்கிறோம். (வாழ்க்கைத் துணையின் இழப்பு அல்லது மாற்றல் போன்ற காரணங்கள் இல்லாமல்) அதை விற்றுவிடப் போவதில்லை. நாம் தங்கும் இடத்தையே அவ்வப்போது பழுது பார்த்து வாழ நினைக்கும் போது, ஒரு வாழ்நாள் பந்தமான திருமண வாழ்க்கையில் ஏன் செய்யக் கூடாது? வீட்டைச் சரி செய்யப் பணவசதி இருந்தால் போதும். ஆனால் திருமணத்தில் உடல், உணர்வு, சமூகம், பொருளாதாரம் போன்று எவ்வளவோ பரிமாணங்கள் இருக்கின்றன. ஆகவே தினம் ஏதேனும் ஒரு கசிவு, தடுப்பு அல்லது பூட்டு இருந்து கொண்டுதான் இருக்கும். அவ்வப்போது, அதை சரிப்படுத்திக் கொண்டுதான் போக வேண்டியிருக்கிறது. ஆயிரம் குடும்பங்களில் ஏதோ ஒன்று, இரண்டு பேருக்குத்தான் லாட்டரிச் சீட்டு போல அருமையான தாம்பத்தியம் அமைகிறது. மற்றவர்களுக்கெல்லாம் வாழ்நாள் முழுவதும் அனுசரிப்பு, சவால், நாளுக்கு நாள் பேணி வளர்த்தல் என்பதுதான் யதார்த்தம். இருந்தாலும் இது சுவையானது, வாழ்க்கைக்கு வேண்டியது என்பது போன்ற நினைப்புகளில் தான், மனதை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியை உண்டு பண்ணிக் கொள்கிறோம்.

விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருவருக்குமே இருக்கும் போது அங்கே அமைதி நிலவுகிறது. ஒருவரின் செயலுக்கு மற்றவர் துணை போகும்போது அங்கே தோழமை உண்டாகிறது. ஒருவரின் விருப்பத்தை மற்றவர் நேரிடையாகவோ, அல்லது ரகசியமாகவோ பூர்த்தி செய்யும் போது அங்கே மகிழ்ச்சி மலர்கிறது. ஒருவரின் குறைபாடுகளை மற்றவர் ஈடு செய்யும் போது அங்கே நன்றி தெரிகிறது. ஒருவரின் கஷ்டத்தை மற்றவர் தாங்கும் போது அங்கே பாதுகாப்பு இருக்கிறது. வாக்குவாதம் இருந்தாலும் நகைச்சுவையால் தாக்கும்போது, அங்கே சிருங்காரம், சிங்கார ஒலி கேட்கிறது. ஒருவரின் உணர்ச்சிகளை மற்றவர் புரிந்து கொள்ளும் போது அங்கே காதல் பிறக்கிறது. இது soul mating relationship இது இலட்சியமாகத் தோன்றினாலும், நம்மாலும் செய்ய முடியும் என்று கொஞ்சம் யோசித்தாலே stale mate ஆக இருப்பவர் (மனைவியோ/கணவரோ) soul mate ஆக வாய்ப்புகள் அதிகரிக்கும்.


வாழ்த்துக்கள்
மறுபடியும் சந்திப்போம்

சித்ரா வைதீஸ்வரன்

© TamilOnline.com