தென்றல் பேசுகிறது...
'ராஜ்பத்' என்றால் ராஜபாட்டை என்று பொருள். 2015ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி புதுதில்லியின் ராஜ்பத்தில் 35,000 பேர் கூடினர். நோக்கம் ஒன்றே ஒன்றுதான்: பன்னாட்டு யோகதினத்தைக் கொண்டாடுவது. இதில் 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அதில் முன்னின்று பங்கேற்ற பிரதமர் மோதி கூறினார், "இன்றைக்கு ராஜபாதை, யோகப்பாதை ஆகிவிட்டது!" ஆமாம், 2014ல் அவர் அந்த நாளை International Yoga Day ஆகக் கொண்டாட முன்மொழிந்தார். பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 177 நாடுகள் முன்னெப்போதுமில்லாத ஒற்றுமை உணர்வோடு ஒருசேர அதனை வரவேற்றன. 'யோகம்' என்ற சொல்லுக்கே சேர்தல், பிணைதல் என்பதுதானே பொருள். உடல், மனம், ஆன்மீகம் இம்மூன்றுக்கும் ஒருசேர வலிவும், பொலிவும் ஊட்டி முழுமையான வளர்ச்சியைத் தருகின்ற யோகக்கலை, உலகத்துக்குப் பாரதத் திருநாடு அளித்த பெருங்கொடை.

பன்னாட்டு யோகதினம் அறிவிக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே சான் ஃபிரான்சிஸ்கோவின் மெரீனா கிரீன்பார்க்கில் 5,000 பேர் சேர்ந்து யோகப்பயிற்சி செய்தனர். 2017ல் சைனாவின் வூஸீ (Wu Xi) நகரத்தில் 10,000 பேரும், நியூ யார்க்கின் டைம்ஸ் ஸ்கொயரில் பல்லாயிரக்கணக்கான பேரும் கூடி யோகத்தின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றினர். மனிதனாக உண்டாக்கிக்கொண்ட எல்லாவகைப் பிரிவினைகளையும் தாண்டி முழுமையான நலவாழ்வைத் (holistic well being) தருவதாகிய யோகத்தை உலகோர் அனைவரும் கற்று, பயிற்சி செய்து, பூமியை ஒரு மகிழ்ச்சிக் கோளமாக மாற்றுவதில் நம் பங்கை ஆற்றுவோம்.

*****


ஜூன் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை National Cancer Survivors Day ஆக அமெரிக்காவில் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோயால் தாக்கப்பட்டோரும், பின்னர் சிகிச்சையால் பிழைத்திருப்போரும் பொதுவாகவே ஓர் அச்சமிக்க, வலுக்குறைந்த மனமும் உடலும் கொண்டிருப்பதைக் காணமுடியும். ஆனால், தனது தொழில்வாழ்க்கையின் உச்சத்திலிருந்தபோது, மூன்றாம்நிலை கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் யோகப்பயிற்சிகளால் தனது வாழ்க்கையை மட்டுமல்லாமல், எண்ணற்ற பிற புற்றுநோயாளிகளின் வாழ்க்கையையும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் கொண்டதாக மாற்றிய வல்லமையாளர் எஸ். வேதவல்லி. ஆக, இந்த மாதத்தின் பன்னாட்டு யோகதினம் ஆனாலும் சரி, கேன்சர் கண்டு பிழைத்தோர் நாள் ஆனாலும் சரி, இரண்டுமே இவருக்கு மிகச்சரியாகப் பொருந்தி வருகிறது. இவரது நேர்காணல் ஒரு ஃபீனிக்ஸ் பறவையின் மீளெழுச்சியை நினைவூட்டுவதாக அமைகிறது.

திருப்புகழின் உ.வே.சா.வாக, திருப்புகழ்ப் பாடல்களைத் தேடித்தேடிக் கண்டெடுத்து பதிப்பித்தவர் வ.த. சுப்பிரமணிய பிள்ளை. அவரைப்பற்றிய 'முன்னோடி' கட்டுரை, சிறுதானிய தோசை மற்றும் கட்லெட் சமையல் குறிப்பு, மகான் ஸ்ரீ நாராயணகுரு அவர்களின் வாழ்க்கை, சிறுகதைகள் என கருத்துக்களஞ்சியமாக வடிவெடுத்துள்ளது இம்மாதத் தென்றல்.

வாசகர்களுக்குப் பன்னாட்டு யோகதினம், குரு பூர்ணிமா, ஈகைத்திருநாள் மற்றும் தந்தையர் நாள் வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜூன் 2018

© TamilOnline.com