மின்சாரப் புன்னகை
"காலங்கார்த்தாலே எவ்ளோ ட்ராபிக் பாரு?" ஒரு கையில் காஃபிக் கோப்பையும், மறுகையில் ஸ்டியரிங்குமாக தீபக் போக்குவரத்தில் கலக்க, "திங்கட்கிழமைல.. அதான்" பக்கத்திலிருந்த சுஷ்மா காம்பேக்ட்டை ஒற்றிக்கொண்டாள். "ஓ மைகாட். எட்டு இரண்டு ஆச்சு. எட்டேகால் ட்ரெய்ன் போயிடும். சீக்கிரம் போங்களேன்" நேரத்தைக் கவனித்தவள் அவசரமாக லிப்ஸ்டிக்கை சரிசெய்ய, "போயிடலாம், டோன்ட் வொர்ரி" தீபக் ஆக்சிலேட்டரை அழுத்தினான்.

அடுத்த நான்காம் நிமிடம், பின்னால் மஞ்சள் சிகப்பு ஒளி. "ஏன்? என்னாச்சு? ஓரங்கட்டுறீங்க?" குழப்பமாய்த் திரும்பிய சுஷ்மா, பின்வந்த போக்குவரத்துக் காவலரின் வண்டியைப் பார்த்து "ஓஹ்.. புல் ஓவரா?" சீட் பெல்ட்டை அணிந்தபடியே அலறினாள்.

இவர்கள் வண்டியை ஓரங்கட்டவும் அருகே வந்து குனிந்து பார்த்த காவலர், "குட்மார்னிங் ஜென்டில்மேன். நாற்பதில் போக வேண்டியது. ஐம்பத்தி நான்கில் போயிருக்கிறீர்கள். உங்கள் பேப்பர்ஸைக் கொடுக்க முடியுமா?" முறுவலுடன் வினவ, மனதுக்குள் புலம்பியபடியே தீபக் எடுத்துக் கொடுத்தான்.

"இரண்டு நிமிடம் காத்திருங்கள்" அவர் தன்னுடைய வண்டிக்குச் சென்றுவிட, இங்கோ இருவருக்குமிடையே கனத்த அமைதி!

"நான் லிமிட்டுக்குள்ளதான் போனேன்" நெற்றி வியர்வையைத் துடைத்தபடி சொன்ன தீபக்கை 'நிறுத்து' என்பதுபோலக் கையை மறித்தாள் சுஷ்மா. "எனக்கு அப்பயே தெரியும். பேய்கணக்கா ஓட்டவேண்டியது. ஸ்பீட்-லிமிட் பார்த்து போகத்தெரியாது? எப்பப்பாரு இதே வேலை" அவள் முறைக்க, தீபக்கின் முகத்தில் எள்ளும் கொள்ளும்.

"எல்லாம் உன்னாலதான். யாரு சீக்கிரம் போ சீக்கிரம் போன்னு துரத்தினது?"

"யாரு நானா? லேட்டா எந்திரிச்சு லேட்டா கிளம்புனது யாரு?"

"நைட் முழுக்க வேலை பார்த்திருக்கேன். உன்னை மாதிரி குறட்டைவிட்டு தூங்கல. போனதும் கேள்விமேல கேள்வி கேட்பான். உங்கப்பாவா வந்து பதில் சொல்லுவாரு?"

"அனாவசியமா எங்கப்பாவையெல்லாம் இழுத்தீங்க... அப்புறம் அவ்ளோதான் பாத்துக்குங்க..." பேச்சு தடித்துக்கொண்டே போனதில் சுற்றிலும் வீசிய ஜூலைமாதக் காற்று மேலும் அனலடித்தது.

© TamilOnline.com