வயலூர் கோபுரமும் வாரியாரும்
கிருபானந்த வாரியார் அவர்களை அன்பர்கள் அனைவரும் திருமுருக கிருபானந்த வாரியார் என்றே அழைப்பர். மிகப் பொருத்தமான அடைமொழி. ஜூன் மாத இதழில் முன்னரே குறிப்பிட்டுள்ளது போல் 'நாள்தோறும் நான் வழிபடும் என்னப்பன் வயலூர் முருகனை வணங்கி என் உரையைத் தொடங்குகின்றேன்' என்று தம்முடைய சொற்பொழிவைத் தொடங்குவது அவர் வழக்கம். வாரியார் சுவாமிகளுக்கும் வயலூருக்கும் இடையே அப்படிப்பட்ட நெருக்கம் எப்படி ஏற்பட்டது? அது ஒரு சுவையான வரலாறு.

1934ல் பெற்றோருடன் தலயாத்திரையாக முருகன் குடிகொண்டிருக்கும் தலங்களைத் தரிசித்துக் கொண்டே வந்த வாரியார் திருச்சி அருகே வயலூரை வந்தடைந்தார். கோயில் அர்ச்சகர் ஜகந்நாத சிவாச்சாரியார் என்ற இளைஞரின் இனிமையான குரலில் அழகான உச்சரிப்பில் செய்த சண்முக அர்ச்சனையில் மெய்மறந்தார் வாரியார். அர்ச்சனைத் தட்டில் எட்டணாக்காசைக் காணிக்கையாக அளித்தார். கோயிலின் பார்வையாளர் புத்தகத்தை நிர்வாகிகள் நீட்டிய போது அதில் தன் பெயரையும், முகவரியையும் குறித்து விட்டுத் திரும்பினார்.

அன்றிரவே சந்நியாசியைப் போல் ஒருவர் கோயில் தர்மகர்த்தா கனவில் வந்து, 'கோயில் பெயரில் எட்டணாவைக் காணிக்கையாகப் பெற்ற உன்னால் கோயிலுக்கு கோபுரமா கட்டமுடியும்?' என்று கேட்டார். கனவில் வந்தவர் தான் வணங்கும் வயலூர் முருகனே என்று உறுதியாக நம்பினார் தருமகர்த்தா. மறுநாள் பொழுது விடிந்தவுடன் நேராக கோயிலுக்குச் சென்றார் தர்மகர்த்தா. அர்ச்சகரிடம் முதல்நாள் கோயிலுக்கு வந்தவர்களில் எட்டணா காணிக்கை அளித்தவர் யார் என்று கேட்டபோது அவரும் பார்வையாளர் புத்தகத்திலிருந்து வாரியார் முகவரியைக் கொடுத்தார். உடனடியாக தருமகர்த்தா, 'தாங்கள் காணிக்கையாக அளித்த தொகையை இறைவன் ஏற்க மறுத்து விட்டதால் அது இப்போது திருப்பி அனுப்பப்படுகிறது' என்று எழுதி மணியார்டரில் எட்டணாவை வாரியார் முகவரிக்குத் திருப்பி அனுப்பிவிட்டார்.

எந்தக் கோயில் வரலாற்றிலும் கண்டிராத அதிசயம் இது. வாரியாரிடம் அவர் காணிக்கையைத் திருப்பி அனுப்பச் செய்த வயலூர் முருகன் அவர் மூலமாகவே பல இலட்சங்களைத் திரட்டச்செய்து கோபுரம், மண்டபம் என்று கோயிலை பன்மடங்கு விரிவுபடுத்திக் கொண்டான் என்பதுதான் அதிசயிக்க வைக்கும் மற்றொரு செய்தி. காரணம் வயலூர் கோயிலை எழுப்பிய சோழ மன்னன் அதை மேலும் விரிவுபடுத்த விரும்பியபோது வயலூர் முருகன் அதை ஏற்கவில்லை. பின்னாளில் வாரியார் வாயிலாக அதை ஏற்க திருவுளங்கொண்டது நம்மைப் போன்றவர்கள் வாரியாரின் மேன்மையை அறியச் செய்வதற்காகத்தான் போலும்!.

மணியார்டரில் திருப்பி அனுப்பப்பட்ட காணிக்கையைக் கண்டு கலங்கிப் போனார் வாரியார். இதுபற்றி அறிய, திருச்சியில் உள்ளாட்சி அலுவலகத்தில் மேலாளராகப் பணிப்புரியும் நண்பரைச் சந்தித்துக் காரணம் தெரிந்து வரப் புறப்பட்டுப் போனார். வாரியார் திருச்சி வந்திருப்பதை அறிந்த கோயில் தருமகர்த்தா அவரைத் தேடி வந்து தம் கனவைப் பற்றிக் கூறினார். இது கேட்டு கோயில் கோபுரம் எழுப்பும் திருப்பணியை முருகன் தம்மிடம் எதிர் பார்ப்பது போல் உணர்ந்தார் வாரியார். இத்தகையதொரு கட்டுமானப் பணிக்கான தொகையைத் தான் எப்படித் திரட்ட முடியுமென்று திகைத்தார். சென்னையில் தந்தையாருடன் உபந்நியாசங்கள் செய்து வந்த வாரியார், அது போன்று உபந்நியாசங்களைச் செய்தாலும் வசூலாகும் தொகையால் கோபுரம் எழுப்ப முடியுமா? என்று யோசித்தார். இதற்குள் அவரது நண்பர்களும் முருகனது அன்பர்களும், செல்வந்தர்களும் தாங்களும் இத்திருப்பணியில் இணைந்து உதவ முன்வந்தனர்.

திருச்சியில் மாதந்தவறாமல் வாரியார் சொற்பொழிவு நிகழலாயிற்று. மூன்றே ஆண்டுகளில் பல்லோரின் உறுதுணையுடன் திருப்பணிக்குழுத் தலைவராக இருந்து முயன்று நிதிதிரட்டிய கிருபானந்தவாரியார் கோபுரப்பணியைச் செம்மையாக முடித்து கும்பாபிஷேகமும் நடத்தி முடித்தார்.

வயலூர் முருகன் தன் குறிக்கோளை வாரியார் மூலம் நிறைவேற்றிக்கொண்டான். வயலூர்ப் பதிதனில் உறையும் முருகனை வாழ்த்திப் பதினெட்டு திருப்புகழ் பாடல்கள் (பதினெட்டுப் பாடல்களுமே அடிகளால் மிகவும் நீளமானவை) பாடியுள்ள அருணகிரியார் ஒரு பாடலில் 'என்னால் பிறக்கவும் என்னால் இறக்கவும் என்னால் துதிக்கவும்... என்னால் தரிக்கவும் இங்கு நானார்' என்று கூறுவதுபோல், 'எல்லாம் என்னப்பன் முருகன் திருவுளப்படி நடந்தது' என்று கூறி மகிழ்ந்தார் வாரியார்.

கோபுரம் கட்டுமானத் திருப்பணியுடன் திருப்பணிக்குழுவின் பணி நின்று விடவில்லை. வாரியார் தலைமையில் கோயிலுக்கு முன்னால் ஒரு அழகான மண்டபமும், அதற்கொரு கோபுரமும், கோயிலினுள் அலுவலகக் கட்டிடம், தியானமண்டபம் என்று மேன்மேலும் கோயிலின் வளர்ச்சி விரிவுற்றது. அன்பர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே திருப்பணிக் குழு முருகனைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்காக அவர்கள் தங்குவதற்கான விடுதிகளும் கட்டிக் கொடுத்தது. மீண்டும் 1969ல் கோயிலிலுள்ள மூர்த்திகள் யாவருக்கும் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வாரியார் கருத்தில் வயலூர் முருகனும், வாக்கில் அருணகிரியும் நிலைத் திருந்தமையே இச்சிறப்புக்களுக்கெல்லாம் காரணம். வயலூருக்குப் பெருமை சேர்ப்பதற் கென்றே வாரியார் அவதரித்தார் போலும்!

அன்பர்களின் கொடைகளை ஏற்றுக் கொண்ட முருகன் அன்பர்களின் நன்மைகளையும் கருத்தில் கொண்டது போல் இக்கோயிலில் அறப்பணிகள் பல நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் இக்கோயிலில் 'அன்பு இல்லம்' என்ற பெயரில் 50 பெண் குழந்தைகள் கல்வி அறிவு பெற, தங்க இடமும் உணவும், உடையும், கல்வியும் இலவசமாக அளித்து வருகிறது. இராமலிங்க வள்ளலார் பெயரில், அநாதை வித்யாலம் ஒன்றும் நடைபெற்று வருகிறது. இன்னும் பல நற்பணிகளுக்கான திட்டங்கள் செயல்பட விருக்கின்றன என்பதை அறியும் போது கோயில்களை எழுப்பி இறைவழிபாட்டிலும், அறப்பணிகளிலும் மக்களை நாட்டங் கொள்ளச் செய்த சான்றோர்களை உண்மையிலும் பாராட்ட வேண்டும்.

முனைவர் அலர்மேலு ரிஷி

© TamilOnline.com