லட்சுமி தமிழ்பயிலும் மையம் ஆண்டுவிழா
மார்ச் 24, 2018 அன்று, அட்லாண்டாவில் 31 வருடங்களாக இயங்கிவரும் லட்சுமி தமிழ்பயிலும் மையத்தின் ஆண்டுவிழா சின்மயா நிகேதனில் கொண்டாடப்பட்டது.

மாணவிகள் ஷ்ருதி மற்றும் சோபனா சுவாரசியமான தகவல்களோடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினர். வரவேற்புரை அளித்த ஆசிரியர் திரு. ராஜப்பாமனோகர், பள்ளியின் நிறுவனரும் முதல்வருமான திருமதி. லக்ஷ்மி ஷங்கரின் திறனையும், பள்ளி ஆசிரியர்கள் ஆற்றிவரும் தொண்டையும் குறிப்பிட்டார். நிகழ்ச்சிக்குத் தலைமையேற்றுச் சிறப்புரை ஆற்றிய கணினி வல்லுநர் திரு. சுரேஷ் கணேசபாண்டியன், "மொழி ஒரு தேசத்தின் வழி" என்று தொடங்கி, தமிழின் சிறப்பையும், அது எவ்வாறு நம் வாழ்வின் அடையாளமாகத் திகழ்கிறது என்பதையும் விவரித்தார்.

நான்கு தொடங்கிப் பதினேழு வயதுவரை உள்ள 40 மாணவர்கள் பலவிதமான தமிழ்சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கினர். இவற்றில் பாலர் நடனம், பரதநாட்டியம், பாடல், வாத்திய இசை, கவிதை, குறள், பேச்சு, மாறுவேடம், ரூபிக்ஸ் கனசதுர வித்தை, அம்மா-மகள் நகைச்சுவை உரையாடல் போன்றவை இடம்பெற்றன.

முன்னாள் மாணவி சந்தியா, தான் இப்பள்ளியில் கற்ற தமிழ் எவ்வாறு பலவழிகளில் இன்றும் தனக்கு உதவுகிறது என்று சுவைபட விவரித்தார். விடுகதை நிகழ்ச்சியை நடத்திய இரு மாணவிகள் அவையோரைத் திக்குமுக்காடச் செய்தனர்.

'தமிழ் வளர்த்த வீரமாமுனிவர்' என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்துரையாடினர். விழாவின் சிகரமாக அமைந்தது "தமிழ்மொழி கற்பது எதற்கு? பேச, படிக்க மட்டுமா அல்லது தமிழ் இலக்கியம், வரலாறு, கலாசாரங்களை அறியவா?" என்ற காரசாரமான பட்டிமன்றம்.

விழாவின் இறுதியில், தேர்ச்சியுற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும், போட்டிகளில் வென்றோருக்குக் கேடயங்களும் வழங்கப்பட்டன. ஆசிரியை திருமதி. மஞ்சுபாஷிணி மோகனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவேறியது.

ராஜப்பாமனோகர்,
அட்லாண்டா

© TamilOnline.com