மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பதின்மூன்று தேவ தினங்கள்!
சகுனி வெல்கின்ற ஒவ்வொரு முறையும் வியாசர் 'சகுனி மோசமான முறைகளைக் கையாண்டு வென்றான்' என்ற சொற்றொடரைத் தவறாமல் பயன்படுத்தியிருப்பதைப் பல சமயங்களில் சொல்லியிருக்கிறோம். திருதராஷ்டிரனுக்கு அச்சத்தை உண்டாக்கி அவனை மறுசூதுக்குச் சம்மதிக்க வைக்கின்ற சமயத்தில் இந்த உண்மை துரியோதனனுடைய வாயிலிருந்தே வெளிவருகிறது: "துரியோதனன், 'கௌரவரே! சூதாட்டத்தில் தர்மராஜனுக்குக் கபடமாகத் தோல்வி உண்டாக்கப்பட்டது. பிதாவே! அதனாலேதான் நமக்கு ஜயம். வேறு உபாயத்தினால் நமக்கு ஜயம் வராது' என்று சொன்னான்." (அனுத்யூத பர்வம் அத்: 97, பக். 319). 'சகுனி கபடமான முறைகளைக் கையாண்ட காரணத்தால் மட்டும்தான் நமக்கு வெற்றி உண்டாகியிருக்கிறது. கபடத்தைத் தவிர்த்த மற்ற எந்த முறையாலும் பாண்டவர்களை வெற்றிகொள்ள முடியாது' என்று துரியோதனனே வாக்குமூலம் கொடுக்கிறான். சூதாட்டத்தில் தருமபுத்திரன் சகுனியளவுக்குத் தேர்ச்சியடைந்தவன் இல்லை என்றபோதிலும், அந்தச் சகுனியேகூட 'கபடமான முறைகளைக் கைக்கொண்டுதான் பாண்டவர்களை வென்றிருக்கிறான்' என்பது துரியோதனனே சொல்கின்ற, ஒப்புக்கொள்கின்ற உண்மை. இத்தனைத் தீமைகளைச் செய்து அவர்களை வென்றபோதிலும், சபையில் நடந்த பயங்கரமான சம்பவங்களையும், திரெளபதிக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாகப் பாண்டவர்கள் ஏற்ற சபதங்களையும் கேட்டபிறகு திருதராஷ்டிரன் நாட்டை அவர்களிடமே திரும்ப ஒப்படைத்து 'நீங்கள் உங்கள் ராஜ்ஜியத்தை ஆண்டுகொள்ளுங்கள்' என்று அனுப்பிவைத்ததையும், துரியோதனன் திருதராஷ்டிரனை அச்சுறுத்தி அவர்களை மறுசூதுக்கு வருமாறு சொல்லச் சொன்னதையும் பார்த்தோம்.

இந்தச் சமயத்தில்தான் துரியோதனன் மீண்டும் சொல்கிறான்: "புருஷ சிரேஷ்டரே! பாண்டவர்கள் வனம் போவதைப் பந்தயமாக வைத்து மறுபடியும் ஆடுவோம். உமக்கு நன்மை உண்டாகும். இப்படித்தான் நாம் அவர்களை வசப்படுத்த முடியும். தோற்றவர்கள் அவராயினும் நாமாயினும் தோல் உடுத்துப் பன்னிரண்டு வருடகாலம் வனவாசத்தில் இருக்கவேண்டும். பதின்மூன்றாவது வருஷம் சுற்றத்தாருக்குத் தெரியாமல் இருக்கவேண்டும். தெரிந்தால் திரும்பவும் பன்னிரண்டு வருஷகாலம் வனத்தில் வசிக்கவேண்டும். நாமாவது வசிப்போம். அல்லது அவர்களாவது வசிக்கட்டும். அந்த நிச்சயத்தோடு சூது நடக்கட்டும். பாண்டவர்கள் மறுபடியும் காய்களை உருட்டி இந்தச் சூதை ஆடட்டும். பாரத சிரேஷ்டரான ராஜாவே! இதுதான் நமக்கு முதன்மையான காரியம். இந்தச் சகுனி காய்களை அனுகூலமாக வருவதென்னும் வித்தையை அறிந்தவன்." (மேற்படி, பக். 32).

'சகுனி கபடமான முறைகளால் காய்களை நமக்கு அனுகூலமாக விழும்படிச் செய்கின்ற வித்தையை அறிந்தவன்' என்பது மட்டும்தான் இதற்குப் பொருளேயொழிய, சகுனி ஏதோ எலும்புத்துண்டுகளை மந்திரித்து தாயக்கட்டைகளாக வைத்திருந்தான்; அந்த எலும்புத் துண்டுகள் அவன் சொன்படியெல்லாம் கேட்டன' என்றெல்லாம் சொல்லப்படும் பரவலான நம்பிக்கைக்கு வியாச பாரதத்தில் அடிப்படை இல்லை. அது வாய்மொழியாகச் சொல்லப்படுவது. வியாசபாரதப்படி உண்மையற்றது. துரியோதனன் இவ்வாறு சொல்லக்கேட்ட திருதராஷ்டிரன் பாண்டவர்களைத் திரும்ப அழைத்துவர ஆளனுப்பினான். அப்போது சபையிலிருந்த அத்தனை பேரும் இதைத் தடுத்தார்கள். "அப்போது துரோணர், ஸோமதத்ததன், பாஹ்லீகன், கிருபர், விதுரர், அசுவத்தாமா, வைசிய புத்திரனும் வீரனுமாகிய யுயுத்ஸு (காந்தாரியின் கர்ப்ப காலத்தில் வேறொரு பெண்ணிடத்தில் திருதிராஷ்டிரனுக்குப் பிறந்தவன்) பீஷ்மர், மகாரதனாகிய விகர்ணன் இவர்களெல்லோரும், 'சூது வேண்டாம்; சமாதானமிருக்கட்டும் என்று கூறினார்கள்" என்கிறார் வியாசர். (மேற்படி, பக்கம் 320). திருதராஷ்டிரன் யார் சொல்லியும் கேட்பதாக இல்லை.

இதை அருகிலிருந்து கேட்ட காந்தாரியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. துரியோதனன் தன்னுடைய மூத்தமகன் என்பதையும் மறந்தாள். அவள் சொல்வதைக் கேளுங்கள்: "மகா புத்திசாலியான விதுரர், துரியோதனன் பிறந்தபோதே 'குலத்தைக் கெடுப்பவனாகிய இவனைப் பரலோகத்துக்கு அனுப்புவது (கொன்றுவிடுவது) நலம்' என்று சொன்னார். பாரதரே! இவன் பிறந்தவுடன் நரிபோல ஊளையிட்டானன்றோ? கௌரவர்களே! இந்தக் குலத்திற்கு இவன்தான் முடிவு என்பதை அறியுங்கள். பிரபுவே! பாரதரே நீர் உம்முடைய பிழையினால் அகாதமான (ஆழம்காண முடியாத) ஜலத்தில் அமிழாதீர்கள். விவேகமில்லாத சிறுபிள்ளைகளுடைய புத்தியை ஏற்றுக்கொள்ளாதீர். கொடியதாகிய வம்சக்ஷயத்துக்கு (குலநாசத்துக்கு) நீர் காரணமாக வேண்டாம்" என்று தொடங்கிப் பலவகையினாலும் அறத்தை எடுத்துச் சொல்லி, 'மறுசூதுக்குச் சம்மதிப்பதைவிட, துரியோதனனைக் கொன்றுவிடுவது நல்லது' என்று மிகவும் வலியுறுத்தினாள். தர்மம் தவறாதவளாக, 'துரியோதனனைக் கொன்றுவிடலாம்' என்று இப்போது வலியுறுத்தும் இந்த காந்தாரி போருக்குப் பின்னால் தன்னுடைய கண்ணை மறைத்துக் கட்டியிருந்த துணியின் இடுக்கு வழியாகப் பார்த்ததுதான் தருமபுத்திரனுடைய கால்கட்டை விரலைக் கரிந்துபோகச் செய்தது; கிருஷ்ணனுடைய யதுகுலம் அழியும்படியாக இவள்தான் சபிக்கப் போகிறாள். தரும சிந்தனையும் தாய்ப்பாசமும் ஒன்றோடு ஒன்று போட்டிபோடும் மனித இயல்பை வியாசர் இந்த இடங்களில் சித்திரிக்கிறார்—சித்திரிக்கவில்லை—பதிவுசெய்கிறார் என்பதல்லால் வேறென்ன சொல்வது!

காந்தாரியின் இந்த வார்த்தைகளைக் கேட்ட திருதராஷ்டிரனால் அவளுடைய பேச்சுக்குச் சம்மதிக்க முடியவிலை. 'குலநாசம் நிச்சயம்' என்பதை அறிந்திருந்தான். காந்தாரியைப் பார்த்துச் சொல்கிறான்: "குலத்துக்கு நாசம் வந்தால் வரட்டும்; என்னால் தடுக்க முடியாது. இவர்கள் எப்படி நினைக்கிறார்களோ அப்படியே நடக்கட்டும். பாண்டவர்கள் திரும்பி வரட்டும். என் பிள்ளைகள் பாண்டவர்களுடன் திரும்பவும் சூதாடட்டும்' என்றான்". (மேற்படி, பக். 321) இப்படிச் சொல்கின்ற இந்த திருதராஷ்டிரன்தான் பீமனைப் போன்ற இரும்புப் பதுமையைத் தழுவியே நொறுக்கப்போகிறான்!

இப்படி, தர்மத்தை அறிந்திருந்தும், அரசுரிமை என்பது யுதிஷ்டிரனுக்கே உரியது என்பதை அறிவால் உணர்ந்திருந்தாலும், அந்த உண்மையைப் பலநூறு முறை எடுத்தெடுத்துப் பேசியிருந்தாலும் துரியோதனன் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடியது திருதராஷ்டிரன் பிள்ளைப் பாசத்தால் செய்த தவறு. மறுசூதுக்குச் சம்மதம் கொடுத்தான். நாம் ஏற்கெனவே பார்த்ததைப்போல, பாதிதூரம் சென்றிருந்த பாண்டவர்களை தேரோட்டியான பிராதிகாமி சந்தித்து, திருதராஷ்டிரன் அவர்களை 'அனுத்யூதத்துக்கு' அழைத்ததைச் சொன்னான். 'சூது தவறு என்கிறேன்; வேண்டாம் என்கிறேன். இருந்தாலும் மீண்டும் மீண்டும் என் பெரிய தந்தை அழைப்பதனால் மறுக்க முடியாதவனாக இருக்கிறேன்' என்று மனம் வருந்தியபடி தருமபுத்திரன் அனுத்யூதத்துக்குத் திரும்பி வந்தான்.

'வெல்வது யாராக இருந்தாலும் தோலாடைகளை உடுத்துக்கொண்டு பன்னிரண்டு வருடம் வனவாசமும், ஒரு வருடகாலம் யாராலும் கண்டுபிடிக்க முடியாதபடி அஞ்ஞாத வாசமும் செய்யவேண்டும். இந்த ஓராண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டால், மீண்டும் பன்னிரண்டு வருடம் வனவாசமும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசமும் போகவேண்டும்' என்று பந்தயம் வைக்கலாம் எனச் சொன்னார்கள். இப்போது நாடோ பொருள்களோ சூதாட்டத்தில் வைக்கப்படவிலை. நாட்டையாளும் உரிமை பகடைக்காய்களால் தீர்மானிக்கப்படுகிறது.

'வெல்வது யாராக இருந்தாலும்' என்று ஒரு பேச்சுக்காகச் சொல்லப்பட்டாலும், எப்போதும்போல 'கபடமான' வழிமுறைகளைக் கைக்கொண்டு சகுனி ஆட்டத்தில் வென்றுவிடுவான் என்பதை அறியாதவனல்லன் துரியோதனன். முதல் சூதுக்கே தன்னுடைய சம்மதமில்லாமல், திருதராஷ்டிரனுடைய வற்புறுத்தலுக்காக அமர்ந்த தருமபுத்திரன், மீண்டும் ஒருமுறை திருதராஷ்டிரன் அழைத்தான் என்பதனால் மறுக்க முடியாதவனாகி சூதாட அமர்ந்தான். ராஜசூய யாகம் முடிந்தவுடனேயே, 'இப்போதிருந்து பதின்மூன்றாம் வருடத்தில் உன்பொருட்டாக குலம் அழியப்போகிறது' என்று வியாசர் சொல்லியிருந்த சமயத்தில், 'பெரியவர்கள் என்ன சொன்னாலும் மறுக்க மாட்டேன்' என்று அவன் மேற்கொண்டிருந்த சபதம் அவனை இப்போதும் கட்டிப் போட்டுவிட்டது.

இதிலே துரோணரும் சேர்ந்தே தருமனைச் சூதுக்குத் தூண்டினார் என்கிறார் வில்லி.

அரசன்மற்று உரைத்த மாற்றம்
அந்தணன் உணர்ந்து செல்வம்
முரசதிர் அயோத்தி மூதூர்
முன்னவன் கதையும் கூறி,
உரைசெய்த படியே உங்கள்
உலகினை இழந்து சின்னாள்
வரைசெறி கானில் வைகி
வருவதே வழக்கு என்றான்


என்பது வில்லியின் வாக்கு.

'திருதராஷ்டிரன் சொன்னதை உணர்ந்த துரோணர், 'தசரதனுடைய சொற்படி காட்டுக்குச் சென்ற இராமனைப்போல நீங்களும் கொஞ்சகாலம் காட்டில் வசித்துவிட்டு வருவதே முறை' என்று சொன்னாராம். 'நீங்கள் ஐவரும் திரெளபதியும் இப்போது காட்டுக்குப் போய் 'சுரர்தினம் ஈராறு' (பன்னிரண்டு தேவநாட்கள் — ஒரு தேவதினம் என்பது ஒரு வருடம்) காட்டில் வாழ்ந்தபிறகு 'ஒரே ஒரு தேவதினம்' யாராலும் கண்டுபிடிக்கமுடியாதபடி வாழ்ந்து திரும்பி வந்து உங்களுடைய அரசைப் பெற்றுக்கொள்ளுங்கள்' என்று தந்திரமாக உரைப்பதாக வில்லி பாரதம் சொல்கிறது. வியாசபாரதத்தின்படி, மறுசூது ஆடுவதைத் தடுத்தவர்களில் துரோணரும் ஒருவர் என்று பார்த்தோம். அதற்குமேல் இன்னொன்று என்னவென்றால், வியாசபாரதம் 'யார் தோற்றாலும்' என்று தொடங்குகிறது. வில்லிபாரதம் 'நீங்கள் தோற்கப்போகிறீர்கள். காட்டுக்குச் சென்று பதின்மூன்றே நாட்கள் (அதுதான் அந்த தேவதினம்!) வாழ்ந்துவிட்டு வந்து உங்கள் அரசைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்கிறது.

வில்லி நாடகப் பாங்கை அதிகரித்திருக்கிறார் என்றாலும் துரோணருடைய பாத்திரத்தையே வீழ்த்தியிருக்கிறார்.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com