கேணி


"எதிர்காலத்தில் மக்களுக்கு முக்கியப் பிரச்சினையாகக் குடிநீர்தான் இருக்கும். காற்றைப்போல, வானம்போல தண்ணீர் எல்லா உயிரினங்களுக்குமே பொதுவானது. அதை வணிகப்பொருள் ஆக்கவும், அணைகள் கட்டி ஆக்கிரமிக்கவும் யாருக்கும் உரிமையில்லை" என்ற கருத்தைச் சொல்ல வருகிறது 'கேணி'. மலையாளத்தில் இதுவரை ஏழு படங்களை இயக்கியிருக்கும் எம்.ஏ. நிஷாத், தமிழில் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகும் படம் இது. படத்தில் நாசர், பார்த்திபன், பசுபதி, ரேவதி, ரேகா, அர்ச்சனா, அனு ஹாசன் உள்ளிட்டோருடன் ஜெயப்பிரதாவும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜாய் மேத்யூ, எம்.எஸ். பாஸ்கர், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாஸ் ராம்பாலா வசனம் எழுத, பாடல்களுக்கு எம். ஜெயசந்திரன் இசையமைத்திருக்கிறார். சாம். சி. பின்னணி இசை அமைத்துள்ளார். "நான் இதற்குமுன் இயக்கிய அனைத்து மலையாளப் படங்களும், சமூகப் பிரச்சனைகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டவை. 'கேணி'யும் அப்படித்தான். தண்ணீர் பிரச்சனை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 'கேணி' தயாராகிறது" என்கிறார் இயக்குநர். தளபதி படத்திற்குப் பிறகு இப்படத்தில் கே.ஜே. யேசுதாஸும், எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் இணைந்து ஒரு பாடலைப் பாடியிருப்பதுடன் படத்திலும் தோன்றுகின்றனராம். தமிழ், மலையாளம் இருமொழிகளிலும் விரைவில் வெளியாகவிருக்கிறது கேணி.

அரவிந்த்

© TamilOnline.com