ஓவியர் ஸ்வர்ணலதா
பொட்டிலடித்த மாதிரி உண்மையை உரக்கச் சொல்கின்றன அந்த ஓவியங்கள். பெண்களைப் பின்னணியில் இருந்துகொண்டு பலர் ஆட்டி வைக்க, அதற்கேற்ப அவர்கள் வாழ்க்கையில் நடக்க வேண்டியுள்ளது, அவர்களுக்கு எவ்விதச் சுதந்திரமும் இல்லை என்பதைச் சொல்கின்றன. பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் ஏற்படும் பாலியல் சீண்டல்கள், எந்தப் பிரச்சனை ஆனாலும் எல்லாப் பழிபாவங்களையும் பெண்களே சுமக்க வேண்டியிருப்பது என்பவற்றை இவை சொல்லாமல் சொல்கின்றன. இன்னுமோர் ஓவியத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளைக் காணச் சகிக்காமல் தலைகுனிந்திருக்கிறார் காந்தி! அதுவொன்று போதும், இன்றைய சமூக யதார்த்தத்தைச் சுட்டிக் காட்ட.

இப்படித் தனது தூரிகையை ஆயுதமாகப் பயன்படுத்தி வருபவர் ஸ்வர்ணலதா. இவர் ஓவியக் கல்லூரியில் பயின்றவர் அல்ல; ஓவியக் குடும்பப் பின்னணி கொண்டவரும் அல்ல. தனிமையைக் கொல்ல இவர் தேர்ந்தெடுத்த கருவி, இவரை இந்தியாவின் சிறந்த நூறு பெண்களுள் ஒருவராக அடையாளம் காட்டியிருக்கிறது. பாலியல் பலாத்காரத்திற்கு இரையான உயிர்நீத்த நிர்பயாவின் நினைவாக இவர் டெல்லியில் நடத்திய ஓவியக் கண்காட்சி இவரைப் பலர் திரும்பிப் பார்க்க வைத்தது. பெண்கள் நலம் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் இவரை 2016ம் ஆண்டில், கலை மற்றும் கலாச்சாரப் பிரிவில், இந்தியாவின் சக்தி வாய்ந்த நூறு பெண்களுள் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து, சிறந்த பெண் சாதனையாளர், சிறந்த பெண் ஓவியர் என்று பல விருதுகள் இவர் கையில்.

சென்னை லலிதகலா அகாடமியில் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை தஞ்சாவூர் பாணி ஓவியங்களாக வரைந்து இவர் காட்சிக்கு வைத்திருந்தார். வித்தியாசமான அந்த முயற்சிக்கு நல்ல வரவேற்புக் கிட்டவே தொடர்ந்து கண்காட்சிகளை நடத்தினார். சமூகப் பிரச்சனைகளை மையமாக வைத்து இவர் வரைந்தவற்றுக்கு பிரமாதமான வரவேற்பு. பெரும்பாலானவை பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் ஓவியங்களே என்றாலும், உலகளாவிய சமூகப் பிரச்சனைகளையும் இவர் முன்வைக்கிறார். அக்ரிலிக், தைலவண்ணம், மையில் வரைவது என்று பலவித நுணுக்கங்களும் இவருக்கு அத்துப்படி. ஜோதிடத்தை மையமாக வைத்து இவர் நடத்திய கண்காட்சி பலரின் கவனத்தை ஈர்த்தது. தஞ்சாவூர் பாணியில் இவர் வரைந்திருக்கும் ஸ்ரீ அன்னை, பாபா, ஸ்ரீ கிருஷ்ணர் ஓவியங்கள் வெகு அழகு. தமிழ்த்தாய் ஓவியம், கேட்கவே வேண்டாம். உலகளாவிய ரசிகர்கள் இவரது படைப்புகளை வாங்குகின்றனர்.



வலைத்தளம்: swarnalathaartist.com

ஸ்ரீவித்யா ரமணன்

© TamilOnline.com