ஹூஸ்டன்: பொங்கல் விழா
ஜனவரி 20, 2018 அன்று ஹூஸ்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. சங்கம் தொடங்கப்பட்ட முதலாண்டின் தலைப்பொங்கலை கேட்டியின் டாம்ப்கின் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடினர்.

தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கி, இளைய தலைமுறையினரின் கலைநிகழ்ச்சியில் களைகட்டத் தொடங்கியது. நண்பகலில் குத்துவிளக்கேற்றி, சூரியனுக்குப் பொங்கல் படைத்து, பொங்கலோ பொங்கல் முழக்கமிடப்பட்டது. வாழையிலை விருந்துக்குப் பின்னர், மக்கள் மனதைக் குளிர்வித்தது மெல்லிசை. மெல்லிசையில் நேற்று இன்று நாளை என அனைத்துத் தரப்பினரையும் மகிழ்விக்கும் வண்ணம் திரையிசைத் தேன்மழை பொழிந்தனர் பானுரேகா மெல்லிசைக் குழுவினர்.

நன்றியுரையை அடுத்து பார்வையாளர்களும் இணைந்து நடனம் ஆடி மகிழ்ந்து விழாவினை இனிதே நிறைவு செய்தனர். அரங்கில், பொங்கல் கரும்புடன் குடும்ப நிழற்பட வசதி, விற்பனைச் சாவடிகள், குலுக்கல் பரிசுகள் என சங்கச் செயலாளர் திரு. முத்து நடராசன் தலைமையிலான தன்னார்வலர்கள் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர். சங்கம் தொடங்கிய ஒன்பது மாதங்களில் மூன்றாவது நிகழ்வாகவும் மாநகரத் தமிழர்களின் முத்தாய்ப்பான விழாவாகவும் நடந்தேறியது தலைப்பொங்கல்.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com