ஞாநி
எழுத்தாளர், பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர், சமூக ஆர்வலர் என பன்முகப் படைப்பாளியாக இருந்த ஞாநி (இயற்பெயர் சங்கரன்) சென்னையில் காலமானார். ஜனவரி 4, 1954ல், செங்கல்பட்டில் பிறந்த ஞாநி, தந்தைவழி பத்திரிகையாளர் ஆனார். இந்தியன் எக்ஸ்பிரசில் சில ஆண்டுகள் செய்தியாளராகப் பணிபுரிந்த இவர், அதிலிருந்து விலகி சுதந்திரப் பத்திரிகையாளர் ஆனார். 'தினமணி கதிர், 'சுட்டி விகடன்' இதழ்களின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றி இருக்கிறார். ஆனந்த விகடன், குமுதம், கல்கி இதழ்களில் இவர் எழுதிய 'ஓ பக்கங்கள்' மிகப் பிரபலம். 'அலைகள்', 'அரங்கம்', 'கட்டியங்காரன்', 'தீம்தரிகிட' இதழ்களை நடத்தியிருக்கிறார். நாடகத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

நவீன நாடகங்களை வளர்த்தெடுக்க 'பரீக்‌ஷா' குழுவைத் தொடங்கி 'பலுான்', 'ஒரு விசாரணை', 'வட்டம்' போன்ற நாடகங்களை மேடையேற்றினார். 'தவிப்பு' இவர் எழுதிய முக்கியமான நாவல். 'ஓ பக்கங்கள்' தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. 'சமூகப் பாலினம்', 'மீடியாவும் கல்வியும்', 'நெருப்பு மலர்கள்', 'அயோக்கியர்களும் முட்டாள்களும்', 'பேய் அரசு செய்தால்' போன்றவை இவரது பிற நூல்கள். எழுத்தாளர் - வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியாக இவர் நடத்திய 'கேணி' நன்கறியப்பட்ட ஒன்றாகும். குறும்படத் தயாரிப்பிலும் ஆர்வம் கொண்டிருந்தார். 'தினமலர்' நாளிதழின் மாணவர் இணைப்பான 'பட்டம்' இதழின் ஆலோசகராக இருந்தார். சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்பட்ட இவர், மூச்சுத்திணறலால் காலமானார். ஞாநிக்கு பத்மா என்ற மனைவியும், மனுஷ் நந்தன் என்ற மகனும் உள்ளனர்.



© TamilOnline.com