குற்றம் குற்றமே!
1. இசைத்தட்டின் முதல் பாடலான "பூவார் சென்னி மன்னன்" திருவாசகத்தின் "யாத்திரைப்பத்து" என்ற பதிகத்திலிருந்து ஆறு பாடல்களைக் கொண்டது. பதிகத்தின் சில பாடல்களை மட்டுமே பாடுவதும் வழக்கம்தான் என்றாலும், இது சாதாரணப் பதிகம் அல்ல. இது ஓர் அந்தாதி - முந்தைய பாடலின் இறுதியே தொடர்ந்து வரும் பாடலின் முதலாக அமையும். ஆனால் இதில் கடைசி இரு பாடல்கள் வெவ்வேறு இடத்திலிருந்து எடுத்ததால் அந்தாதி உடைந்தது போல் தெரிகிறது
.
2. தட்டின் இரண்டாவது பாடலான "பொல்லா வினையேன்" திருவாசகத்தின் சிவபுராணம் பகுதியிலிருந்து பொறுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவாசகத்துக்கு இசையமைக்கவில்லை. இசைக்கு ஏற்றவாறு திருவாசகச் சொற்கள் கதம்பமாக்கப்பட்டிருக்கின்றன.

3. மூன்றாவது பாடலான "பூவேறு கோனும்" என்ற பாடலில், தேவையில்லாமல் "பூ ஏறு" என்று பிரித்திருக்கிறார். இதனால் பாடகர்கள், அடுத்த அடியில் சரஸ்வதியைக் குறிப்பிடும் "நாவேறு செல்வி" என்பதை "நா ஏறு செல்வி" என்று பிரித்து "நாயேறு செல்வி" என்று பாடுகிறார்கள். திருவாசகம் அறியாதவர்கள் கேட்டால் நாய் வாகனத்தைக் கொண்ட பெண் தெய்வம் என்று தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும்.

4. மாணிக்கவாசகர் தமிழ் இலக்கண மரபை ஒட்டித் தன் முதல் பாடலில் சைவ ஐந்தெழுத்து மந்திரத்தை "நமச்சிவாய" என்றுதான் ஆண்டிருக்கிறார். அதுவே தமிழ் மரபு. ஆனால், இளையராஜ நமசிவாய என்று தவறாக எழுதி பாடகர்களும் நமஸ்ஸிவாய என்று பாடியிருக்கிறார்கள். இதில் மட்டுமில்லாமல் வேறு பல இடங்களிலும் தமிழ் ஒலிப்பை விட்டு விலகியிருக்கிறார்கள்.

5. ஆறாவது பாடல் அச்சப்பத்து பதிகத்தில் வரும் "புற்றில் வாள் அரவும் அஞ்சேன்" என்ற பாடல். இதைப் "புற்றில் வாழ் அரவும்" அஞ்சேன் என்று பிழையாக எழுதிப் பாடியிருக்கிறார். அதே பாடலில் "தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சே" என்று வரும் அடியை "தழல்விழி உழவை அஞ்சேன்" என்று பிழையாக எழுதிப் பாடியிருக்கிறார். 'தழல்விழி உழுவை" என்றால் நெருப்புக் கண் கொண்ட புலி என்ற பொருள்.

இசையும் பாட்டும் பாடல்களை நம் நினைவில் தங்கவைக்கும் வல்லமையுள்ளவை. ஆனால், இந்த இசைத்தட்டில் உள்ள உச்சரிப்புப் பிழைகளும், பாட வேறுபாடுகளும் திருவாசகத்தையும், தமிழ் உச்சரிப்பு மரபையும் சற்றும் மதிக்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு. இந்த இசைத் தட்டைக் கேட்பவர்கள், மாணிக்கவாசகர் உண்மையிலே என்ன பாடினார் என்பதை அறிய, திருவாசகத்தின் மூலத்தைப் படித்து அறிந்து கொள்ள வேண்டும்.

முனைவர் சு. பழனியப்பன்

© TamilOnline.com