எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை (அத்தியாயம் 4)
இரண்டு நாள் கழித்து அருணின் வகுப்பு, பள்ளிக்கூட பஸ்ஸில் கிளம்பியது. பஸ்ஸை ஓட்டியவர் பெயர் மிஸ்டர் கிளென். அவர், புதிதாக வந்த ஆசிரியர்களில் ஒருவர். வகுப்பு ஆசிரியை திருமதி. ரிட்ஜ் உதவியாக இன்னொரு ஆசிரியையும் அழைத்து வந்திருந்தார். அவரது பெயர் மிஸ். மெடோஸ்.

பஸ் புறப்பட்டது. அப்போது, மிஸஸ். ரிட்ஜ் மாணவ மாணவியர் ஒவ்வொருவரையும் சோதனை செய்தார். எல்லோரிடமும் சாப்பாட்டு பைக்கட்டு முதல், தண்ணீர் பாட்டில் இருக்கிறதா, குளிருக்குத் தகுந்த மாதிரி ஜாக்கெட் கொண்டு வந்திருக்கிறார்களா, யாராவது ஜலதோஷம் மற்றும் காய்ச்சலோடு வந்திருக்கிறார்களா என்று ஒரு பட்டியல் வைத்துக்கொண்டு சோதனை செய்தார்.

மிஸ்டர். கிளென் ஓட்டிய பஸ் Pueblo Del Indegna கிராமத்தின் வெளியே சென்றடைந்தது. கிராமத்துக்குள் வண்டிகள் அனுமதிக்கப் படுவதில்லை. கிராமத்தின் வெளிப்புறத்திலேயே பஸ் நிறுத்தப்பட்டது. திருமதி. ரிட்ஜ் யாவரும் இறங்கும் முன், "மாணவர்களே! யாருக்குமே கிடைக்காத பாக்கியம் நமக்குக் கிடைச்சிருக்கு. இந்த கிராமத்துக்குள்ள வெளியாட்கள் அனுமதிக்கப்பட்டு பல வருஷங்கள் ஆகிவிட்டன. அதனால, நான் சொல்றத கவனமாக கேட்டுக்கங்க. இங்கிருந்து கிராமம் 3 மைல் தொலைவில் மலைமேல இருக்கு. எல்லாரும் நடந்துதான் போகணும். யாருக்காவது நடக்க முடியலைன்னா, பஸ்ஸிலேயே இருந்துக்கலாம். அவங்கள மிஸ். மெடோஸ் பார்த்துப்பாங்க. யாராவது இருக்க விரும்பறீங்களா?"

மாணவ மாணவியர் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

"கிளாஸ், என்ன சத்தமே காணோம்? கொஞ்சம் உற்சாகம் காட்டுங்க," என்றார் திருமதி ரிட்ஜ்.

எல்லா மாணவ மாணவியரும் கலகலவென்று சிரித்தனர். "அப்ப யாருமே பஸ்ல இருக்கப் போறதில்லை தானே? வாங்க, கிராமத்துக்குள்ள போகலாம்" என்றார். முதலில் திருமதி ரிட்ஜ் மற்றும் மெடோஸ் இறங்கிக் கொண்டனர். பின், ஒருவர் பின் ஒருவராக மாணவ மாணவியர் இறங்கினர். கடைசியாக மிஸ்டர். கிளென் கீழே இறங்கினார்.

அருணுக்கு எப்படா உள்ள போகலாம் என்று இருந்தது. திருமதி ரிட்ஜ் பின்பற்ற வேண்டிய ஒவ்வொரு விதியாகச் சொல்லும்போதும் "அய்யோ போதும்" என்று அருணுக்குக் கத்தத் தோன்றியது. கடைசியாக, "கிளாஸ், நம்ம நடந்து போற வழியில இருக்கிற செடி கொடிகளை நல்லா கவனியுங்க. இங்க இருக்கிறவை மிகப் பிரசித்தமானவை. பல்லுயிர்ச் செழுமை (Rich biodiversity) உள்ள இடங்களில் இதுவும் ஒன்று. எந்தச் செடியையும் இம்சை பண்ணாதீங்க. ஒரு நோட்புக்குல குறிப்பு எடுத்துக்கங்க. அப்பறம், ஒரு முக்கியமான விஷயம், சத்தம் கித்தம் ஏதும் போடாதீங்க. எதையும் உடைச்சுடாதீங்க" என்று கூறினார் திருமதி ரிட்ஜ்.

அருணுக்கு அப்பாடா என்று இருந்தது. "ஹுரே!" என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான். கிசுகிசு என்று பேசிக்கொண்டு 3 மைல் ஹைக்கைத் தொடங்கினர். சற்றுத்தூரம் போனபின், ஜென்னிஃபர் (Jennifer), அருணின் வகுப்புத் தோழி கையைத் தூக்கி திருமதி ரிட்ஜிடம் “மேலே போனப்புறம் அங்க இருக்கிற மக்கள்கிட்ட பேசலாமா? சில கேள்விகள் கேட்கலாமா?" என்று கேட்டாள்.

ஜென்னிஃபரின் துறுதுறுப்பு எல்லோருக்கும் தெரிந்ததே. திருமதி ரிட்ஜ் ஒரு புன்சிரிப்போடு, "தாராளமா! ஆனா கொஞ்சம் கட்டுப்பாட்டோட, அவங்களுக்கு இம்சை செய்யாத மாதிரி நடத்துக்கணும், சரியா?"

அருண் தானும் ஏதாவது கேட்கலாமா என்று நினைத்தான். என்ன தோன்றியதோ, வேண்டாம் என்று விட்டுவிட்டான்.

"என்ன அருண், உனக்கு ஏதும் சந்தேகம் இல்லையா? எப்பவும் கேள்வி மேல கேள்வி கேட்பியே" என்று கேட்டார் ரிட்ஜ். இல்லை என்று தலையாட்டினான் அருண். மிஸ். மெடோஸ் தன் அருகே நடந்து வருவதைப் பார்த்தவுடன், அருண் மெதுவாக அவரிடம் பேச ஆரம்பித்தான்.

ஒவ்வொரு செடி கொடியையும் காட்டி அவர் அருணுக்கு விளக்கியது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. மிஸ். மெடோஸ் நிறையத் தெரிந்து வைத்திருந்தார்.

"மிஸ். மெடோஸ், எப்படி இவ்வளவு தெரிஞ்சு வைச்சுருக்கீங்க?" என்று ஆர்வம் கலந்த ஆச்சரியத்தோடு கேட்டான்.

"நான் தாவரவியல் மேஜர் அருண். இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிருக்கும் எனக்கு" என்றார் மிஸ். மெடோஸ். சிறிது நேரத்திற்குப்பின் மிஸ். மெடோஸ் சில காலம் ஹோர்ஷியானா நிறுவனத்தில் பணியாற்றியவர் என்பது தெரியவந்தது. எங்கெல்லாமோ சென்று கடைசியில் அருணின் பள்ளிக்கு ஆசிரியையாக வந்திருந்தார்.

"மிஸ். மெடோஸ், எங்க அம்மாவும் ஹோர்ஷியானாவுலதான் வேலை பண்றாங்க" என்று பேச்சு வாக்கில் சொன்னான்.

"அப்படியா? எனக்கு என்னவோ அந்த நிறுவனம் பண்றது கொஞ்சம்கூட பிடிக்கலை. அதனால, விலகிட்டேன். விட்டா, இங்க இருக்கிற இந்த பல்லுயிர் செழுமையை ஒரேயடியா அழிச்சிருவாங்க" என்றார். அருண் மௌனமாக இருந்தான். மிஸ். மெடோஸ் சொன்னது அவனுக்கு புரிந்தது.

"அருண், ஹோர்ஷியானாவை எதிர்த்து நீ போராடினது எனக்குப் பிடிச்சுது. I am proud to be your teacher” என்று சொல்லி, அவனைத் தோளில் செல்லமாகத் தட்டினார் மெடோஸ். அருணுக்குப் பெருமையாக இருந்தது அவன் தனது நாய்க்குட்டி பக்கரூவிற்காக ஹோர்ஷியானா நிறுவனத்துடன் போராடியதை அவர் ஞாபகப்படுத்தினார். "தேங்க் யூ" என்றான்.

“அந்த ஹோர்ஷியானாவோட ஆதிக்கத்தையும் அக்கிரமத்தையும் உன்னை மாதிரி நாலு பேரு கேள்வி கேட்டாத்தான் அடங்குவானுங்க. Keep it up.”

அதற்குள் 2 மைல் கடந்திருந்தது. திருமதி ரிட்ஜ் சொல்லிருந்தபடி, கடைசி மைல் செங்குத்தானது என்றும், கொஞ்சம் மூச்சு வாங்கும் என்றும் அவர் சொல்லி இருந்தார். அது நினைவுக்கு வந்தது. பேச்சு நின்றது அனைவருக்கும். பெருமூச்சுதான் கேட்டது. அங்கங்கே இளைப்பாறிக்கொண்டு மெதுவாக நடந்தனர். நிமிடங்கள் மணிக்கணக்காய் தோன்றியது. அருணும், கொஞ்சம் கூடவே மூச்சு வாங்கினான். கடைசியாக, பலமணி நேரத்துக்குப்பின் அவர்கள் கிராமத்துள்ளே சென்றடைந்தனர்.

"Class, here we are… at the heart of Pueblo Del Indegna” என்று சந்தோஷம் கலந்த குரலில் சத்தமாகச் சொன்னார் திருமதி ரிட்ஜ். அருணுக்கு திடீரென்று மூக்கில் என்னவோ செய்தது. கட்டுப்படுத்த முடியாமல் மெதுவாக ‘அஸ்க்’ என்று தும்மினான்.

(தொடரும்)

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com