இடம்பெயரும் பெருங்கூட்டம்!
'வலசைபோதல்' (migration) என்றவுடனேயே நம் கண்முன்னால் கூட்டமாகச் சிறகடிப்பவை பறவைகளும், மானர்க் (Monarch) பட்டாம்பூச்சிகளும் தான் இயற்கையில் விலங்கினங்கள் வெகுதூரம் வலசைபோதல் குறைவு. ஆனால், கிழக்கு ஆப்பிரிக்காவில் வருடந்தோறும் பருவகால மாற்றத்தில் கடுமையான உணவு மற்றும் நீர்ப் பற்றாக்குறை உண்டாகும் போது சுமார் ஒரு மில்லியனுக்கும் மேலான காட்டுமான்களும் (wildebeests), 300,000 வரிக்குதிரைகளும், 400.000 தாம்சன் மான்களும் (Thomson's gazelles) டான்சானியாவிலுள்ள செரங்கெட்டி தேசியப் பூங்காவிலிருந்து (Serengeti National Park) கென்யாவிலுள்ள மாசாய் மாரா தேசியக் காப்பகத்திற்கு (Masai Mara National Reserve) 400 மைல் (650 கி.மீ.) தூரம் வலசை சென்று திரும்புகின்றன.

உலகத்தின் எந்தப் பகுதியிலும் இப்படி மில்லியன் கணக்கில் வனவிலங்கினம் வலசை போவதில்லை. 2006 ABC's Good Morning America ஒளிபரப்பில் செரங்கெட்டி விலங்குகளின் வலசைபோதலை உலகத்தின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. 2013ம் ஆண்டு தான்சானிய அரசாங்கம், காட்டுமான்களின் வலசைபோதலை, 'ஆப்பிரிக்காவில் நடக்கும் இயற்கையின் ஏழாவது மாபெரும் அதிசயம்' என்று அறிவித்தது.



காட்டுமான் அல்லது வில்டிபீஸ்ட்
காட்டுமான்கள் antelope இனத்தைச் சேர்ந்த தாவர உண்ணிகள், இரட்டைக் குளம்புடையவை. தமிழில் காட்டுமான் எனச் சொல்லப்பட்டாலும் இவை மான்களுமல்ல. இவற்றின் கொம்புகள் பசுவின் கொம்பைப் போன்றவை. ஆனால் கொம்பில் வரைகள் கிடையாது. ஆண், பெண் இருபாலுக்கும் கொம்பு உண்டு.

தென் ஆப்பிரிக்காவின் கருப்பு வில்டிபீஸ்ட் (Black Wildebeest or White Tailed Gnu) வலசை போவதில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் அதிகமாகக் காணப்படும் நீல வில்டிபீஸ்ட்டில் (Blue Wildebeest). ஆறு இனங்கள் உண்டு. இவற்றில், செரங்கெட்டி - மாசாய் மாராவுக்கு வலசை போகும் வகை 'வெண்தாடி வில்டிபீஸ்ட்' எனப்படும். இவை தென் கென்யா, டான்சானியா, தென் ஆப்பிக்கா, மொசம்பிக்கிலிருந்து நமீபியாவரையிலும், தெற்கு அங்கோலாவிலும் காணப்படுகின்றன.

வில்டிபீஸ்டின் நீண்ட முகம் பசுவைப் போலவும், வாய் விரிந்து தட்டையாகவும், கழுத்து குட்டையாகவும், தோள்பகுதி விரிந்தும், பிடரிமயிர், வால் ஆகியவை குதிரையினுடையவை போலவும், ஆடுபோல் நீண்ட தாடி கொண்டும், கால்கள் மெலிந்து நீண்டு மானின் கால்கள் போலவும் காணப்படும். கொம்பு பின்நோக்கி வளைந்திருக்கும், முதுகிலுள்ள கறுப்பு வரிகள் வயிற்றுப்பகுதி வரை நீண்டிருக்கும். வெண்தாடி வில்டிபீஸ்டைத் தவிர மற்றவற்றின் தாடி கருப்பு நிறம். உடல்பகுதி, சாம்பல் கலந்த பழுப்பு நிறம். பார்த்தால் இது பல மிருகங்களின் பகுதிகளை எடுத்து ஒட்டி, ஒரு புதிய மிருகத்தை உருவாக்கியது போல் தோன்றும். ஆனால் இது பசுவைப்போல சாதுவானது.

முழு வளர்ச்சியடைந்த வில்டிபீஸ்ட் சுமார் நாலரை அடி உயரம்; ஆண் 400-600 பவுண்டு எடை (200-274 Kg); பெண் 370-516 பவுண்டு (168-233 Kg) எடையுடன் ஏழு அல்லது எட்டடி நீளமுள்ளதாக இருக்கும். வில்டிபீஸ்ட்கள், அதிகமாகப் பதினாறு ஆண்டுகள் உயிர் வாழும். இவைகளால் ஒருமணி நேரத்தில் சுமார் 80 கி.மீ. (50 மைல்) ஓடமுடியும்.

பொதுவாக, வலசை போகாத நேரங்களில், பெண் வில்டிபீஸ்ட்டுகளும், கன்றுகளும் ஒன்றாகவும், இளம் ஆண் வில்டிபீஸ்ட்டுகள் தனி மந்தையாகவும் இருக்கும். இளம் ஆண் மந்தையை 'Bachelor herd' என்பர். ஒரு வயதுக்கு மேலான இளம் பெண் வில்டிபீஸ்ட்கள் தனித்தனிக் கூட்டமாக இருக்கும்.

வில்டிபீஸ்டுகளின் முக்கிய உணவு புல். சில சமயங்களில், பகலிலும், இரவிலும் தொடர்ந்து புல் மேய்வதுண்டு. ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவை தண்ணீர் குடிப்பதால், நீர்நிலைகளை ஒட்டியே வாழ்கின்றன. பொதுவாக வரிக்குதிரைகளோடு சேர்ந்து புல் மேய்வதுண்டு.



இது என் சாம்ராஜ்யம்!
நான்கு அல்லது ஐந்து வயதான ஆண் வில்டிபீஸ்ட், இனப் பெருக்கத்திற்குத் தயாரானதும், மந்தையிலிருந்து விலகி, ஓரிடத்துக்குப் போய், அங்கே, தனது கண்ணருகிலும், கால் விரல்கள் இடையிலும் உள்ள விசேட சுரப்பிகளைத் தேய்த்து, ஒரு வாசனையைத் தீற்றி, 'இது என் சாம்ராஜ்யம்' என்று அறிவிக்கிறது. பிற ஆண் வில்டிபீஸ்ட்கள் அங்கு வந்தால் கடுமையாக எதிர்க்கும். தனது பகுதியில், பல பெண் வில்டிபீஸ்ட்டுகளை சேர்த்துக்கொள்ளும். இரவும், பகலும் ஆண் மிருகங்கள் உணவருந்தாமல், பெருங்குரலிட்டுப் பெண் மிருகங்களைக் கவர்கின்றன. பெண் வில்டிபீஸ்ட்கள், சுமார் இரண்டு, இரண்டரை ஆண்டுகளில் இனப் பெருக்கத்திற்குத் தயாராகினறன. ஆண் விலங்கு எவ்வளவு முயற்சி செய்தாலும், பெண், தான் விரும்பிய ஆணுடன் மட்டுமே பெரும்பாலும் இணையும். பொதுவாக, ஏப்ரல், மே மாதங்களில், பெளர்ணமி சமயம் இணைகின்றன. மூன்று வாரங்களில் இணையும் காலம் முடிந்துவிடுகிறது.

500,000 கன்றுகள்!
சுமார் எட்டு, எட்டரை மாதங்களுக்குப் பின் (ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில், தென் செரங்கெட்டியில், மழைக்காலத்தில் செழித்த புல் வெளிகளில்) கன்றுகள் ஈனப்படும். இரண்டு மூன்று வார இடைவெளியில், சுமார் 500,000 கன்றுகள் ஈனப்படுகின்றன! வில்டிபீஸ்ட்கள். பிற ஆன்டிலோப்களைப் போல் மறைவில் கன்றுகளை ஈனாமல், மந்தையின் நடுவில் ஈனுகின்றன. கன்றுகள், பிறந்த ஆறு நிமிடங்களில் எழுந்து நின்று, ஓட ஆரம்பிக்கின்றன; இரண்டு வாரங்களில் புல் மேய்கின்றன; ஒரு வயது வரையிலும் தாயுடன் இருக்கின்றன.

அறியாக் கன்றுகளை வேட்டையாடச் சிங்கம், சிறுத்தை, வேங்கை, காட்டு நாய், கழுதைப் புலி போன்ற எதிரிகள் ஆவலோடு செரங்கெட்டி சமவெளியில் காத்திருக்கும். மிகவும் முக்கிய எதிரி கழுதைப்புலி. கன்றுகள் பொதுவாக அதிகாலை நேரத்திலும், மாலை நான்கு மணிக்கு முன்பும் ஈனப்படுகின்றன. இதனால், இரவில் வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து கன்றுகள் தப்பித்துக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

இளங்கன்றுகள் நோய், பட்டினி காரணமாகவும் இறக்கின்றன. வலசை போகும் நேரத்தில், கன்றுகள் தாயிடமிருந்து பிரிந்துவிட அதிக வாய்ப்புள்ளது. பிரிந்த கன்றுகளைப் பிற தாய்விலங்குகள் சேர்த்துக் கொள்வதில்லை. ஊனமுற்றுப் பிறக்கும் கன்றுகளைத் தாய் அந்த இடத்லேயே விட்டுச் செல்கிறது. இவை பசி, தாகத்தால் சோர்ந்து எதிரிகளுக்கு எளிதில் விருந்தாகி விடுகின்றன.



போவோமா ஊர்கோலம்!
ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் வில்டிபீஸ்ட்கள், டான்சானியாவிலுள்ள செரங்கெட்டியின் தென்முனையிலிருந்து வடக்கிலிருக்கும் கென்யாவிலுள்ள மாசாய் மாராவுக்குத் தளராமல், ஒரே நோக்கத்தோடு சுமார் 480 கி.மீ. (300 மைல்) வலசை போய்த் திரும்புகின்றன! இது ஒரு வாழ்க்கைப் போராட்டப் பயணம். இந்தப் பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செரங்கெட்டியில் நடந்து வருவதற்கான ஆதாரங்களைப் புதைபொருள் ஆராய்ச்சி தருகிறது. முப்பது மைல் தூரத்திலிருந்தே, மழை பெய்யும் திசையையும், புது ஈர மண் வாசனையையும் இவை தெரிந்து கொள்வதாகவும் நம்பப்படுகிறது.

எல்லா ஆண்டுகளும் வலசை போகுதல் ஒன்று போலிருப்பதில்லை. அது மழை பொழிவதைப் பொறுத்தது. மழை தவறினால் இவை வலசை போவதில்லை, அல்லது வேறு சமயத்தில் போகின்றன.

தென் செரங்கெட்டியில், நவம்பர், ஜனவரி, மாதங்களில் நீண்ட மழை பெய்யத் தொடங்கி, குட்டைப்புல் செழித்து வளரும் நேரம், மாசாய் மாராவுக்கு வலசை சென்ற வில்டிபீஸ்ட்கள் திரும்பி வருகின்றன. இது கன்று ஈனும் நேரம். இந்த மகிழ்ச்சி வெகுநாள் நீடிப்பதில்லை. ஏப்ரல், மே மாதங்களில் மழையில்லாமல், புல் கருகி, நீரும் குறைவதால், வில்டிபீஸ்ட்கள் இடம்பெயர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அவை மேற்கு செரங்கெட்டியை நோக்கிச் சிறு சிறு மந்தைகளாக வெவ்வேறு பாதைகளில் சென்றாலும் ஒன்றாகச் சேர்ந்துவிடுகின்றன. ஜூன் முதல் செப்டம்பர் மாதங்களில் நீண்ட வறட்சிக் காலம் தொடங்குகிறது. இந்த நேரம் போகுமிடங்களில் புல் உயர்ந்து வளர்ந்திருக்கும். இங்கும் உணவு குறையும்போது, வடக்குப் பகுதியிலுள்ள மாசா மாராவை நோக்கித் தங்கள் வலசைப் பயணத்தைத் தொடர்கின்றன.

மரணப் பொறி
மாசாய் மாராவுக்குச் செல்லும் வழியில் இரண்டு முக்கியமான நதிகள் உள்ளன. முதலில், டான்சானியாவிலுள்ள குருமேதி நதி (Grumeti). இரண்டாவது, கென்யாவிலுள்ள மாரா. இரண்டிலுமே முதலைகள் நதியைக் கடக்க வரும் உயிரினங்களுக்காக வாய் பிளந்து காத்துக் கொண்டிருக்கும். மாரா நதி நீர் வற்றாத நதி. வில்டிபீஸ்ட்களின் வலசைப் பயணத்தில் இதுதான் உச்சக்கட்டம். இது வலசை போகும் விலங்குகளின் 'மரணப் பொறி' ஆகும்.

ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் வில்டிபீஸ்ட்கள் மாரா நதியைக் கடப்பதில்லை. சில நேரங்களில், திசை அல்லது பாதை மாறி உயர்ந்த குன்றுப் பகுதிகளையடைகின்றன. நதியருகே வரும்வரையில், “நூ, நூ” என்று குரல் எழுப்பிக் கொண்டு ஒன்றன்பின் ஒன்றாக, புழுதியைக் கிளப்பியபடி வந்து நதிக்கரையில், பெருங்கூட்டமாக நின்று விடுகின்றன.



தலைவனில்லாத கூட்டம்!
யார் முதலில் நதியில் இறங்குவது? முன்வரிசையில் நிற்கும் ஒரு தோழன் நதியில் இறங்காமல் திரும்பினால், மற்ற வில்டிபீஸ்டுகளும் திரும்பி விடுகின்றன. ஒரு தைரியசாலித் தோழன் அல்லது வரிக்குதிரை நதியில் குதித்து விட்டால், அதன் பின்னால், எல்லாம் ஒன்றை ஒன்று முட்டித் தள்ளிக்கொண்டு நீரில் குதித்துவிடும். இந்த நெரிசலில் சில வில்டிபீஸ்ட்கள் மிதிபட்டு மூழ்குவதும் உண்டு. ஆழம் தெரியாமல் இறங்கினால் வெள்ளப் பெருக்கிலோ, நீர்ச்சுழலிலோ சிக்கி அடித்துக்கொண்டு போவதுண்டு. எதிர்பாராத நிலையில் நைல் முதலைகள் தாவிப் பிடித்து இவற்றை இரையாக்கிக் கொள்ளும்.

இத்தனையையும் கடந்து, மாசாய் மாராவை அடையும்போது, எதிரி விலங்குகள் நாவில் நீர்வடியக் காத்திருக்கும். ஒவ்வோர் ஆண்டும், சுமார் 250,000 வில்டிபீஸ்ட்கள் இந்தப் பயணத்தில் உயிரிழக்கின்றன. குறுகிய மழைக்காலமான அக்டோபர், நவம்பர் மாதங்களில், வில்டிபீஸ்ட்கள் வடக்கு மாசாய் மாராவிலுள்ள மரங்களடர்ந்த புல்வெளியில் தங்கும். இப்போது கன்றுகள் வளர்ந்து வலிமையுடன் காணப்படும். இங்குள்ள புல் தீர்ந்துபோய் உணவுத் தட்டுப்பாடு நேரும் நவம்பர், ஜனவரி மாதங்களில் தென் செரங்கெட்டியில், மழைக்காலம் தொடங்கும். அப்போது திரும்பவும் மாரா நதியைக் கடந்து தென் செரங்கெட்டிக்குப் போகின்றன. இந்தச் சமயம், சினையுற்ற வில்டிபீஸ்ட்கள், குட்டையான பசும்புல் வெளிகளில் கன்றுகளை ஈனுகின்றன. இதோடு, அடுத்த வலசைப் பயணம் தொடங்குகிறது!

ஒரு முக்கியமான விஷயம். சிங்கம், சிறுத்தை போன்ற விலங்குகள், தேவைக்குமேல் வேட்டையாடுவதில்லை. பசி அடங்கியபின், இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வெடுக்கின்றன. இதனால், வில்டிபீஸ்ட்களின் இனம் முழுமையாக அழியாமல் காக்கப்படுகிறது.

வில்டிபீஸ்ட்களின் முக்கிய எதிரி மனிதன்தான். இவை வாழும் இடங்களை ஆக்கிரமித்துக் கொள்வதும், வலசை போகும் பாதைகளில் பாலங்கள், ரோடுகள் கட்டுவதும் இவற்றின் இயக்கத்தைப் பாதிக்கின்றன.

கட்டுரை: சர்குணா பாக்கியராஜ்
படங்கள்: சர்குணா பாக்கியராஜ், பாஸ்கல் பாக்கியராஜ் (வயது 14)

© TamilOnline.com