கங்கைக் கரையில்...
"வாலாம்பாள் பையன் சந்திரன் வரான். நீங்க அவனிடம் பேச்சுக் கொடுக்க வேண்டாம். நானே பேசிக்கறேன். நீங்க உள்ளே போங்கோ."

கணவனை அவசரம் அவசரமாக உள்ளே அனுப்பிவிட்டு காமாட்சி முன் ஹாலில் வந்து நின்றாள்.

நடையில் காலணியை விட்டுவிட்டு சந்திரன் உள்ளே வந்தான். வந்தவன் சில விநாடிகள் மெளனமாக இருந்துவிட்டு, "என்னோட அம்மா இங்கே வந்தாளா?" சற்றே தயக்கத்துடன் கேட்டான்.

அவன் தனியார் வங்கியொன்றில் வீட்டுக்கடன் வழங்கும் பிரிவில் வேலை செய்கிறான். நல்ல சம்பளம். கௌரவமான உத்தியோகம்.

"யாரோட அம்மாவக் கேட்கற?"

காமாட்சி கொஞ்சம் விஷமத்தனமாகவும், கோபமாகவும் கேட்டாள்.

"என்னோட அம்மாவத்தான் கேட்கறேன். வேற யாரோட அம்மாவை நான் கேட்கப் போறேன்?"

"வாலம் உன்னோட அம்மாதானே? அதைத் தீர்மானமா முடிவு செஞ்சிண்டு தான் கேட்கறயா?"

"இத பாருங்க. நான் உங்ககிட்டே விவாதம் செய்ய வர்ல. நான் தஞ்சாவூரிலிருந்து லீவுல வந்து ஒரு வாரமாப் போறது. அக்கம் பக்கத்திலே கேட்டா அம்மாவப் பத்து நாளாவே பாக்க முடியலங்கறா. இங்கே சமையல் வேலை செஞ்சுண்டிருந்தாளேங்கறதுனால உங்ககிட்டே வந்து கேட்கறேன்."

"அம்மா காணாமப் போய் ஒரு வாரம் கழிச்சு வந்து கேட்கறே? அவமேலே நீ வச்சிருக்கற அக்கறையைப் பார்த்து ரொம்ப சந்தோஷப்படறேன்" என்றாள் கிண்டலாக.

"இன்னிக்கு வந்துடுவா, நாளைக்கு வந்துடுவா என்கிற நம்பிக்கையோட ஒரு வாரமா தேடாம இருந்துட்டேன். எப்படியும் உங்ககிட்டே சொல்லிட்டுத் தானே போயிருப்பாங்கற ஒரு நம்பிக்கையில்...."

சந்திரன் வார்த்தைகளை முடிக்கவில்லை. காமாட்சி கோபமாகப் பேச ஆரம்பித்தாள்.

"போன தடவை நீ ரெண்டு மூணு நாள் லீவுல வந்தபோது அவகூட ஏகமா சண்டை போட்டு ஏடாகூடமாப் பேசியிருக்கே. நீ என்னோட அம்மான்னு சொல்லிக்கவே அவமானமா இருக்குன்னு கத்தியிருக்கே. உன் மூஞ்சியிலே முழிக்கவே பிடிக்கலே, இங்கே இருக்கப் பிடிக்காமத்தான் நான் தஞ்சாவூருக்கு மாற்றிக்கொண்டு போனேன்னு கத்தினது வாஸ்தவமா இல்லையா?"

சந்திரன் இதற்குப்பதில் சொல்லமுடியாமல் தவித்தான். காமாட்சி தொடர்ந்தாள்.

"ஊரில் இருக்கறவங்களுக்கு வம்பு பேச விஷயம் கிடைச்சா எது வேணா பேசுவாங்க. வம்புப் பேச்சால சிதிலமடைஞ்ச உறவுகள் பத்தி எனக்குத் தெரியும். நீ படிச்சவன்தானே? தீர விசாரிக்க வேண்டாமா? யாரோ ஏதோ சொன்னாங்கறதைக் கேட்டுட்டு அம்மா மனசை நோக அடிச்சுட்டியே. அவளை அனாதைமாதிரி விட்டுட்டுத் தனியாவும் போயிட்டே. சரி, இப்போ நான் கேட்கறேன். அப்படி என்னதாம்பா அவ தப்பு பண்ணிட்டா? அதிலும் இந்த அறுபது வயசிலே?"

அவனிடம் மீண்டும் மெளனமே. சிக்கலான ஒரு விஷயத்தின் பேரில் எப்படித் தெளிவு பெறுவது? அவசரப்பட்டு ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டோமோ? சந்திரன் மனதில் காரணமற்ற பயம் வந்து விட்டது. என்றாலும் எப்படித்தான் இந்த மன உறுத்தலைப் போக்கிக் கொள்வது? மனதை திடப்படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

"அந்த சோமு மாமாவுக்கு எங்க வீட்ல என்ன வேலை? அடிக்கடி வீட்டுக்கு வருவதும் வாசல் திண்ணையில் உட்கார்ந்து அம்மாவிடம் பேசறதும் ஏதாவது ஒரு காரணத்தை வைத்துக்கொண்டு அம்மா அவரிடம் குழைந்து குழைந்து பேசறதும் என்னால இதைக் கொஞ்சங்கூட சகிச்சுக்க முடியல!"

"உன் மனக் குழப்பத்துக்கும் திடீர் மாறுதலுக்கும் இது தான் காரணமா?"

"..........."

"சோமு உங்க வீட்டுக்கு இன்னிக்கு நேத்திக்கா வரார். நீ குழந்தையா இருக்கும் போதிருந்தே வர்றவர்தானே."

"அதுக்காக இந்த நிலை இன்னும் நீடிக்கணுமா? ஒரு கட்டத்தோட ரெண்டு பேரும் விலகிப் போயிடதுதானே நியாயம்? என் சங்கடங்களையெல்லாம் உங்க தோள்மேலே சுமத்தறேன். எனக்கு வேற வழியே தோணலை என்று அம்மா கவலையோட பேசறதும், நீ எதுக்கும் கவலைப்படாதே. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன் என்று அவர் பதில் சொல்றதும்... இது எதுவுமே எனக்குப் பிடிக்கல. அப்பாவோட அகால மரணத்துக்குப் பின்னால அம்மா என்னை வளர்த்து ஆளாக்க ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கா, வாஸ்தவம்தான். ஆனா இப்போதான் நிலைமை மாறிப்போச்சே. உங்க வீட்ல அம்மா இன்னும் வேலை செஞ்சேதான் ஆகணுமா?"

"இப்போ கேட்டியே இது புத்திசாலித்தனமான கேள்வி. அம்மா இங்கே பழக்க தோஷத்தினால வராளேயொழிய வேலை செய்ய வர்றதில்லை. கூடமாட எனக்கு உதவியா அவளா ஏதாவது செஞ்சு கொடுப்பா. அதுக்காக நான் அவளுக்குச் சம்பளம்னு எதுவும் கொடுக்கறதில்லே. அவளும் கேட்கறதில்லே. உன் கவுரவம் கெடற மாதிரி எதுவும் நடக்கலே..."

"ரெண்டு மாசமிருக்கும், ஏற்கனவே மனச் சங்கடத்தோட குழம்பிப் போய் பஸ் ஸ்டாண்டிலே நின்னுண்டிருக்கேன். வீட்டு புரோக்கர் சாமி எனக்குப் பின்னால வந்து மெதுவா தோளைத் தொட்டான். 'என்ன மாமா?' என்றேன். 'அந்த சோமுப்பய இன்னும் எத்தனை நாள் உங்க வீட்டையே சுத்திண்டு இருக்கப் போறான். அந்த அறுபது வயசு கிழப்பயலுக்கும் உன் அம்மாவுக்கும் அப்படி என்னப்பா பாசப் பிணைப்பு? இதையெல்லாம் நீ கண்டுக்கறதேயில்லையா'ன்னு கேட்கறான். சரி, சாமி சொன்னதை விடுங்க. ரிடையர்ட் வாத்தியார் பந்துலு சார் இதையே வேறு மாதிரி கேட்டார். இம்மாதிரிப் பேச்செல்லாம் அம்மாவுக்கு அவசியம்தானா? இந்த மாதிரி ஜாடை மாடையா சொன்னேன். அம்மா காதில் போட்டுண்ட மாதிரியே தெரியல. இதுக்கு மேலே அதிகமா இதப் பத்திப் பேசவும் எனக்குச் சங்கடமா இருந்தது. அதோட சோமுவோட வருகையும் நிக்கல. இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமத்தான் நான் மாறுதல் வாங்கிண்டு வெளியூர் போயிட்டேன்."

"மாறுதல் வாங்கிண்டு போன நீ தாயாரையும் அழைச்சிண்டு போயிருக்க வேண்டியதுதானே. அதை யாரும் தடுக்கலயே?"

இதற்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் அவன்.

"அந்த சோமுவைப் பத்தி உனக்கென்ன தெரியும்? நீ ஒரு வயசுக் குழந்தையா இருந்தப்ப ஜாண்டிஸ் வந்து அது தீவிரமாகி சிகிச்சை பலனளிக்காமல் உன் அப்பா போயிட்டார். அன்னிலேருந்து இன்று வரையிலே உங்க குடும்பத்தைச் சுமந்துண்டு போற பார வண்டி அவர். நீ எப்படி வளர்ந்தே, எப்படிப் படிச்சே, எப்படி காலேஜிலே சேர்ந்தேன்னு உனக்குத் தெரியுமா? உன் அப்பா போன பின்னால உங்க குடும்பத்தைக் காப்பாத்திக் கரை சேர்த்தவரே அவர்தான். கல்யாணம் செய்து கொண்டால் பொண்டாட்டி, பிள்ளை, சம்சாரம் என்று பந்தம் ஏற்பட்டுவிடும், உங்க குடும்பத்துக்கு உதவ முடியாமப் போய் விடும்ங்கறதுனால கல்யாணமே செஞ்சுக்காம இன்று வரையிலே தனிமரமாவே இருக்கார். உன் அப்பா, சோமுவோட பால்ய நண்பர். சின்ன வயசிலேயும் சரி, அதற்குப் பிறகும் சரி. உன் அப்பா இவருக்கு நிறைய உதவிகள் செஞ்சிருக்காராம். படிப்பு, வேலை என்று சோமுவோட கஷ்ட நஷ்டங்களில் எல்லாம் கைதூக்கி இவரைக் காப்பாத்தியிருக்காராம். உன்னையும் உன் அம்மாவையும் சின்னவயசிலே உன் அப்பா விட்டுட்டுப் போன பின்னாடி உங்க குடும்பத்தைக் காப்பாத்திக் கரை சேக்கிறதை தன்னோட லட்சியமா நினைச்சுண்டு வாழற பரோபகார ஜீவன் அவர். உங்க அம்மா கையிலே ஒரு தம்ப்ளர் தண்ணி வாங்கிக் குடிச்சதை நீ பார்த்திருக்கியா? உன் அம்மா அதிகம் படிக்கலே. பிறந்த வீடும் உங்களை வச்சுக் காப்பாத்தற அளவு வசதியில்லே. அந்தச் சூழலில் மாட்டிக் கொண்டால் உன் எதிர்காலம் பாழாயிடும் என்ற காரணத்தினால் உன்னோட தனியாகவே இருக்க முடிவு பண்ணிட்டா."

"பாக்கறவங்க பேசறாங்கன்னு நீ சொல்றியே? நானும் உன் அம்மாவையும் சோமுவையும் பல வருஷமாத்தான் பாக்கறேன். எனக்கொண்ணும் தப்பாத் தோணலயே. எதையுமே தப்பாவே பார்த்தா தப்பாத்தான் தோணும். சரியாப் பார்த்தா சரியாத் தோணும். வாலம் குடும்பத்துக்கு இப்படி உதவறீங்களே, நாலு பேர் நாலு விதமாப் பேசமாட்டாளான்னு நானே கேட்டிருக்கேன். 'மடியிலே கனமில்ல. அதனால வழியிலேயும் பயமில்லே. நாம் ஒருவர் மேலே விஸ்வாசம் வைக்க காரண காரியமே தேவையில்லை. நமக்கென்று நம்முடையதா நினைத்துக் கொண்டால் அதுவே நம் குடும்பமாகி விடுகிறது'ன்னு சொல்லுவார். கஷ்டப்பட்ட காலத்தையெல்லாம் மறந்துட்டு நீ ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடனே நீயே மனசிலே ஒரு தப்பெண்ணத்தைக் கற்பனை செஞ்சுண்டு ஏழைத் தாயாரை அம்போன்னு விட்டுட்டியே? வாலம் பாவம்பா."

காமாட்சியம்மாள் பேசி முடிக்கும்வரை அவனால் குறுக்கே எதுவும் பேசமுடியவில்லை. குற்ற உணர்வுகளால் கூனிக் குறுகிப் போய் நின்றான்.

"அம்மாவை நான் உடனே பாக்கணும் போல இருக்கு. எங்கே போய்த் தேடறது? சோமு மாமாவை பார்த்தும் ரொம்ப நாளாகப் போறது. அவர் வேலை செய்யற கம்பெனியிலே போய்க் கேட்டேன். நிறைய நாள் லீவு போட்டுட்டு யாத்திரை போயிட்டாராம். நீங்க சொன்னபிறகு தான் தெரியறது, நான் அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது. அம்மாவப் பத்தி ஏதாவது தகவல் வந்தா சொல்லியனுப்புங்க."

கண்கள் கலங்க திரும்பிப் போனவனை நிறுத்தினாள் காமாட்சியம்மாள்.

"தகவல் சொல்லி அனுப்பறதென்ன? இப்பவே சொல்றேன். தெரிஞ்சுண்டே போ. ஒரு பாசப் பிணைப்பினால் வாழ்க்கையில் ஏற்பட்ட அபவாதத்தைக் கழுவிக் கரைக்க காசிக்குப் போயிட்டா. திரும்பி வருவது பற்றி என்னிடம் எதுவும் சொல்லல. முடிந்தால் அவளைப் போய் கங்கைக் கரையில் தேடு..."

மகரிஷி

© TamilOnline.com