தென்றல் பேசுகிறது...
நடுத்தர, கீழ்மட்டப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு எட்டாக்கனி ஆகிவிடாமல் உதவும் 'ஒபாமா கேர்' திட்டத்தை ட்ரம்ப் அரசு மெல்ல மெல்ல இல்லாததாக்கியது. இத்திட்டத்தைச் செயல்படுத்த மாட்டோம் எனச் சிலக் காப்பீட்டுக் கம்பெனிகள் அறிவித்ததோடு, காப்பீட்டுப் பிரீமியத்தையும் சகட்டு மேனிக்கு உயர்த்திவிட்டன. இதனால் பல நிறுவனங்கள் தமது பணியாளர்களின் நலம்பேணுவதற்கான செலவினம் வரைமுறையின்றி உயர்ந்துவிட்டதை உணர்ந்தன. பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற கேள்விக்கு பதில் இப்போது கிடைத்துவிட்டது. ஆமாம், யானைகள்தாம் கட்டவேண்டும். அதுதான் நடந்திருக்கிறது இன்றைக்கு.

ஒட்டுமொத்தமாக 1.2 மில்லியன் பணியாளர்களைக் கொண்ட மிகப்பிரம்மாண்ட நிறுவனங்களான அமேசான், பெர்க்‌ஷயர் ஹாத்தவே, JP மார்கன் சேஸ் ஆகியவை இணைந்து புதிய, சுதந்திரமான நலவாழ்வுக் கம்பெனி ஒன்றைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளன. காப்பீட்டுக் கம்பெனி-மருத்துவமனைகள்-மருத்துவர்கள்-மருந்துக் கம்பெனிகள் என்கிற நாணயமற்ற கூட்டமைப்பு மருந்துச் செலவைக் கட்டுக்கடங்காமல் ஏற்றி, கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருந்தது. உதாரணத்துக்கு, யுனைடெட் ஹெல்த்கேர் சமீபத்திய காலாண்டுக்கான தனது லாபம் 45 சதவீதம் எகிறிவிட்டதாக அறிவிக்க, அதன் பங்குவிலை 400 சதவீதம் பிய்த்துக்கொண்டு போனதைச் சொல்லலாம். நாட்டின் பொருளாதாரத்தின் மீதும், தனிநபர் வாழ்க்கைச் செலவினத்தின் மீதும் மருத்துவக் காப்பீடு தாங்கமுடியாத பாரத்தைச் சுமத்திவிட்டது என்பதில் ஐயமில்லை.

இந்தக் கொள்ளை லாபக்காரர்களை உலுக்கிவிட்டது இந்தப் புதிய அறிவிப்பு. நாட்டின் மருத்துவத் துறையைப் பீடித்திருக்கும் மெத்தனத்தை, பேராசையை இந்தப் புதிய நிறுவனம் அடியோடு அசைத்துப் பார்க்கும் என்பதில் சந்தேகமில்லை. "இந்த முயற்சி லாபம் தேடுவதில்லை என்பதால் அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளும் இல்லை" என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு நல்ல தொடக்கம் என்று நம்பலாம். தம்மிடம் வேலை செய்வோருக்கு மருத்துவ வசதியைத் தர விரும்பும் இன்னும் பல பெரிய, சிறிய வணிக நிறுவனங்களுக்கு இது புதியதொரு பாதையை வகுத்துத் தரும். JP மார்கன் சேஸின் முதன்மை நிர்வாகியான ஜேமி டைமன், "இந்த வசதி எல்லா அமெரிக்கர்களுக்கும் கிடைக்குமளவுக்கு விரிவடைய வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார். யார் சொன்னது பூனைக்கு எலிகள்தாம் மணி கட்டவேண்டும் என்று!

*****


ஹார்வர்டு தமிழிருக்கைக்கான நிதி தனது இலக்கைப் பன்னாட்டுக் கூட்டு முயற்சியால் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தனிநபர் ஒருவர், ஓர் அமெரிக்கப் பல்கலைகழகத்தில் தமிழ் மொழி, பண்பாடு, கலை, இலக்கியம் ஆகியவற்றை ஆய்வதற்கென ஓர் இருக்கையை ஏற்படுத்தச் சத்தமில்லாமல் நிதிக்கொடை செய்திருக்கிறார். அவர்தான் டாக்டர் பாலா சுவாமிநாதன், இந்த இதழின் ஹீரோ! "பெரிய அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் தமிழ் கற்பிக்கப்பட்டால் இங்கிருக்கும் இளைய தலைமுறை தனது மொழியிலும் பாரம்பரியத்திலும் பெருமிதம் கொண்டு கற்கத் தொடங்கும்" என்று கூறுகிற அவரது தீர்க்கதரிசனம் பாராட்டற்குரியது. பின்பற்றத் தக்கது. பெரும் எண்ணிக்கையில் வலசை போகும் ஆச்சரிய விலங்குகள் குறித்த கட்டுரை, அய்யா ஸ்ரீ வைகுண்டர் வாழ்க்கைச் சரிதம், சிறுகதை என்று உங்கள் முன் கடை விரித்திருக்கிறோம். நீங்கள் விரும்பி ஏற்பீர்கள் என்பது நாம் அறிந்ததே.

வாசகர்களுக்கு மகாசிவராத்திரி நாள் வாழ்த்துக்கள்!

தென்றல் குழு

பிப்ரவரி 2018

© TamilOnline.com