டாலஸ்: தமிழன்பன் கவிதைத் திருவிழா
அக்டோபர் 28, 29 நாட்களில் டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் 'கவிதைத் திருவிழா' நடைபெற்றது. அக்டோபர் 28ம் தேதி, கோப்பல் Cozby Library and Community Commons வளாகத்திலும் அடுத்த நாள் ப்ளேனோ Tom Muehlenbeck மையத்திலும் இந் நிகழ்ச்சி நடைபெற்றது. ஈரோடு தமிழன்பன் தொலைபேசி வழியாக வாழ்த்துக் கவிதை கூறி நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். புதுச்சேரி ஒருதுளிக் கவிதை மையத்தின் சார்பில் அமிர்தகணேசன் தலைமையேற்றார்.

கவிஞன் வாழும் காலத்திலே அவனுடைய படைப்பு பெருநிகழ்வாக வாசிக்கப்படுவது பெருமைக்குரியதாகும். இத்தகைய சிறப்பைச் செய்த மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள்" என்று அமிர்தகணேசன் கூறினார். தமிழன்பன் பற்றிக் கவிஞர் இன்குலாப் எழுதிய கவிதையை வாசித்து முனைவர் சித்ரா மகேஷ் வாசிப்பைத் தொடங்கி வைத்தார். 8 வயது சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பங்கு பெற்றனர். பல்வழி இணைப்பு தொலைபேசி வழியாகவும் பலர் கலந்து கொண்டு கவிதை வாசித்தனர். பங்கேற்பாளர்களின் ஆர்வத்தினால் ஆயிரம் கவிதைகளுக்கும் மேலாகவே வாசிக்கப்பட்டது.

தமிழன்பன் கவிதைகளை, அமிர்தகணேசன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதிய "The Essential Erode Tamilanban" என்ற ஆங்கிலப் புத்தகம் வெளியிடப்பட்டது. ஹைக்கூ நூற்றாண்டை முன்னிட்டு கனடாவைச் சார்ந்த கவிஞர் உமை பற்குணரஞ்சன் அவர்களின் கவிதை நூலும் வெளியிடப்பட்டது.

மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஈரோடு தமிழன்பனுக்கு 'மகாகவி' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் புரவலர் பால்பாண்டியனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர்' விருதும் . மூத்த பத்திரிகையாளர் டாக்டர் எஸ். ஷங்கருக்கு 'தமிழன்பன்– 80' விருதும் வழங்கப்பட்டன.

டாக்டர் ஷங்கர், பல வருடங்களாக அமெரிக்கத் தமிழர்கள் குறித்த தகவல்களை ஊடகம் மூலம் உலகறியச் செய்துவரும் அரும்பணிக்காக, இந்த விருது வழங்கப்பட்டது. மேலும் அமெரிக்காவில் தமிழுக்காகப் பல்வேறு வகைகளில் அரும்பணி ஆற்றிவருவோருக்கு 'தமிழன்பன் – 80' விருது வழங்கப்பட்டது. இதனைப் பெற்றவர்கள்: தமிழ்ச்சங்க நிறுவனர் சீனிவாசன், முன்னாள் தலைவர் விஜி ராஜன், ப்ளேனோ தமிழ்ப்பள்ளி நிறுவனர் விசாலாட்சி வேலு, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ப்பள்ளி தலைவர் கீதா அருணாச்சலம், டாலஸ் தமிழ்மன்றத் தலைவர் சீனிவாசன், கோப்பல் தமிழ்க்கல்வி மைய முதல்வர் முத்துக்குமார் இராமலிங்கம், அவ்வை தமிழ்ப்பள்ளி, கோப்பல் தமிழ்க்கல்வி மையத்தின் முதல்வர் செல்வி முத்துக்குமார், சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் வேலு ராமன், நியூயார்க் நகரத் தமிழார்வலர் சண்முகம் பெரியசாமி, கொங்கு தமிழ்ப்பள்ளி பழனிசாமி, ஹனுமன் தமிழ்ப்பள்ளி ஜெய்சங்கர், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் முனைவர். சித்ரா மகேஷ், மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் K. கிருஷ்ணராஜ், DFW தமிழ்ப்பள்ளி மகாலட்சுமி, இணையத்தள தமிழ்ப்பள்ளி இராம்கி இராமகிருஷ்ணன், டாலஸ் தமிழார்வலர் மனோகர், ஊடகவியலார் தினகர் ரத்தினசபாபதி.

விருதுகளை புதுச்சேரி ஒருதுளி கவிதை மையத்தின் அமிர்தகணேசன் வழங்கினார். அவருக்கு, சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் நினைவுப் பரிசு வழங்கினார். சங்கத் தலைவர் கால்டுவெல் வேள்நம்பி வரவேற்றார். நியூயார்க்கின் சண்முகம் பெரியசாமி மற்றும் குறளரசி கீதா அருணாச்சலம் தலைமை தாங்கினார்கள். முனைவர் சித்ரா மகேஷ் தொகுத்து வழங்கினார். கிருஷ்ணராஜ் நன்றியுரை ஆற்றினார்.

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com