ந்ருத்யோல்லாசா: உதவி நிதி திரட்டும் நிகழ்ச்சி
நவம்பர் 11, 2017 அன்று ஓலோனி அரங்கத்தில் ந்ருத்யோல்லாசா நடனப்பள்ளி நாபா (Napa Valley) காட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு, நிதி திரட்டும் முகமாக ஒரு சிறப்பான நடன நிகழ்ச்சியை நடத்தியது.

தனது ஆண்டுவிழாவை ஓலோனியில் நடத்தத் திட்டமிட்டிருந்த நிலையில் நாபா காட்டுத்தீ பற்றிய துயரச்செய்தி வந்தது. அவர்களுக்கு உதவத் தீர்மானித்து, ஆண்டுவிழா நிகழ்ச்சியை பாதிக்கப்பட்டோருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக ந்ருத்யோல்லாசா மாற்றியமைத்தது.

ஜதி நன்கு கற்றுத்தேர்ந்த மாணவியரின் புஷ்பாஞ்சலி முதன்முறை என்று சொல்ல இயலாத அளவுக்கு நேர்த்தியாக இருந்தது. அடுத்து கணேச கவுத்துவம், கணேச பஞ்சரத்னம், தில்லானா ஆகியவற்றுக்கும் அற்புதமாக ஆடினர். தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதியில் "சாதிஞ்சனே"விற்கு ஆடிய குழந்தைகள் ஸ்ரீராமனைக் கண்முன்னே நிறுத்தினர். "ஸ்ரீசக்ரராஜ சிம்ஹாசனேஸ்வரி" பாடலுக்குக் கைகளில் விளக்கேந்தி பாதிக்கப்பட்டவர்கள் வாழ்வில் ஒளிபெற வேண்டும் என்கிற வேண்டுதலோடு தீப நடனம் ஆடினர்

பள்ளியில் பயின்று அரங்கேற்றம் கண்ட மாணவியர் ஆடிய பதங்கள் அருமை. சௌந்தர்யா மணிகண்டன் "மீனாக்ஷி தாயே அருள் புரிவாயே" என்ற பாடலுக்கும்; செல்சி லாரன்ஸ் மேரி மாதாவைப் பற்றிய பாடலுக்கும், கிருதி பாய் "கஞ்சதலாயதாக்ஷி" பாடலுக்கும், திரிவேணி கோர் "கிரிதர கோபாலா" என்ற மீரா பஜனுக்கும் மிகச்சிறப்பாக ஆடினர்.

நாட்டிய ஆச்சார்யா திருமதி. ரங்கநாயகி அமைத்த ஜதீஸ்வரம் ஆடிய குழுவினர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றனர். நடன மாணவிகளின் உடை, நடன அமைப்பு, அவர்களின் வருகை எல்லாமும் மிகப்பிரமாதம். 10 மாணவியர் பங்கேற்றஇந்நிகழ்ச்சி முத்தாய்ப்பாக அமைந்தது.

நிகழ்ச்சியில் 70 திற்கும் மேற்பட்ட மாணவியர் கலந்துகொண்டனர். பள்ளியில் நடனம் பயின்ற, பயிலும் மாணவியரும், அவர்தம் பெற்றோரும் ஒன்றிணைந்து நிதி திரட்டினர். இதற்கெனக் கடுமையாக உழைத்த பெருமை திரு. கணேஷ் அவர்களைச் சாரும்.

உணவு, தண்ணீர் எனப் பொருள்களாகவும், பணமாகவும் பலர் நன்கொடை அளித்தனர். 14,000 டாலருக்கும் மேல் நிதி திரண்டது. Sewa International, United Way Bay Area ஆகிய அமைப்புகள் மூலம் பாதிக்கப்பட்டோருக்கு இந்த நிதி அளிக்கப்பட்டது. ந்ருத்யோல்லாசா தன் பங்காக அரங்க வாடகையை ஏற்றுக்கொண்டது. நடனம், சமூக சேவையில் ஆகியவற்றில் தன்னையும் தன் மாணவியரையும் ஈடுபடுத்தியதுடன், நிறைவான நிகழ்ச்சி ஒன்றையும் அளித்தார் பள்ளியின் இயக்குநர் திருமதி. இந்துமதி கணேஷ். நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com