இளையராஜாவின் திருவாசகம் - புரிந்தது சில... புரியாதவை சில...
இளையராஜாவின் திருவாசகம் ஆறு பாடல்கள் கொண்ட தொகுப்பு. குறுந்தகடோடு இளையராஜா தன் கையால் எழுதிய திருவாசகப் பாடல் வரிகள் கொண்ட ஒரு புத்தகம் கிடைக்கிறது. மிக அழகாக அச்சடிக்கப்பட்ட இந்தக் கையேடு, பாடல்களைக் கேட்கும்போது கூடப் படிப்பதற்கு இலகுவாய் உள்ளது.

திருவாசகத்தில் உள்ள சிவபுராணம், திருவெம்பாவை, திருச்சதகம், திருவம் மானை போன்ற பகுதிகளையெல்லாம் முழுவதுமாகப் பாடாமல், இளையராஜா இவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் எடுத்திருக்கிறார். அவர் தேர்ந்தெடுத்திருக்கும் பாடல்கள், திருவாசகத்தின் சாரத்தை அளிக்கக்கூடியவையாக இருக் கின்றன. மக்களுக்கு எளிதில் புரியக்கூடிய பாடல்கள் சில, அகராதியைப் புரட்ட வைக்கின்ற பாடல்கள் சில, அகராதியைப் புரட்டினாலும் அர்த்தம் புரியாதவை சில.

பாடல்களை இளையராஜாவும் அவரது குழுவினரும் பாட, அவர்களுக்கு பின்புலமாக இருப்பது ஹங்கேரிய ஆர்க்கெஸ்ட்ராவின் இசை. 84 பேர் கொண்ட குழு தரும் இசை பல இடங்களில் பிரம்மாண்டமாகவும், தேவையான இடங்களில் மெதுவாக வருடுவது போலவும் உள்ளது. இந்தக் குழு தவிர ஆங்காங்கே சாரங்கி போன்ற இந்திய வாத்தியங்களின் இசையும் கேட்கிறது. தனியாகக் கேட்டால் பாடப்படுவது கர்னாடக சங்கீத அடிப்படையில் இருப்பது போலவும், பின்னணி இசை மேற்கத்திய சங்கீத அடிப்படையில் இருப்பது போலவும் இருக்க, அவற்றை ஒன்றாகச் சேர்த்து ஓர் ஆழமான அனுபவத்தைக் கொடுத்திருப்பதுதான் இந்தத் தொகுப்பின் சிறப்பு. மேற்கத்திய சங்கீத விதிகளிலேயே அடைபடாமல் தென்னிந்திய மரபுமுறையில் பாடல்களைத் தமிழிலேயே வழங்கியிருக்கிறார் ராஜா. அவருக்குப் பக்கபலம் ஆங்கிலப் பாடகர்களும், பவ தாரிணி, உன்னிகிருஷ்ணன் போன்றவர்களும். ஆங்கில வரிகளை ஸ்டீவன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார். ஆங்கில வரிகள் இரண்டாவது பாடலில் மட்டும் வருகின்றன.

ஆறு பாடல்கள் பல்வேறு ராகங்களின் சாயல்களும் பல்வேறு உணர்வுகளைப் பிரதி பலிக்கும்படியாகவும் இருக்கின்றன. கலிப்பாக்களையும் விருத்தங்களையும் அவற்றின் அர்த்தம் அறிந்து பிரித்துப் பாடியிருக்கிறார்கள். மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, கடவுளை எண்ணி உருகுதல், சிவனோடு ஐக்கியம் ஆவது பற்றி என்று பல நிலைகளை இசை தொடுகிறது. ராஜாவின் குரல் ஆங்காங்கே உருகுகிறது, சுருதியை விட்டு விலகுகிறது.

இதில் இரண்டாவது பாடல் தான் இத்தொகுப்பின் முக்கியப் பாடல். ஏறக்குறைய இருபது நிமிடங்களுக்கு மேல் செல்லும் இந்தப் பாடல், ஓர் அற்புதமான வடிவமைப்பு. "பொல்லா வினையேன்!" என்று ராஜா தழுதழுக்க ஆரம்பிக்க, ஆங்கிலத்தில் "I'm just a man, imperfect lowly!" என்று மேற்கத்திய முறையில் பாட, ஆர்க்கெஸ்ட்ரா இசையும் குழுவினரின் "நமச்சிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!"வும் பின்னணியில் ஒலிக்க, மெதுவாக இசை மிகுந்து உச்சத்திற்கு சென்று முடிகிறது.

ஐந்தாவது பாடலை மட்டும் இளையராஜா பாடாமல், உன்னிகிருஷ்ணன், மது பாலகிருஷ்ணன், விஜய் யேசுதாஸ், மஞ்சரி, ஆஷா குழுவினர் பாடியிருக்கின்றனர். "பூவேறு கோனும் புரந்தரனும்" என்று ஆரம்பிக்கும் திருக்கோத்தும்பி பாடலை இளையராஜாவுடன் பவதாரிணி பாடியிருக்கிறார். ஆறாவது பாடலான "புற்றில்வாள் அரவும் அஞ்சேன்" கேட்டவுடன் ஈர்க்கும் மெட்டுடையது. மேற்கத்திய இசையை ரசிப்பவர்கள் இளையராஜாவின் ஆர்கெஸ்ட்ரேஷனை விரும்பிக் கேட்பர். கர்நாடக இசையை விரும்புபவர்கள், இந்தப் பாடல்களில் இருக்கும் மாண்டு, திலங்க், சுத்த தன்யாசி ராகங்களைப் புதிய கோணங்களில் பயன்படுத்தியிருப்பதை ரசிப்பர்.

பாலாஜி ஸ்ரீனிவாசன்

© TamilOnline.com