பக்தி இலக்கியங்களும் திருவாசகமும்
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல சைவ, வைணவச் சான்றோர்கள் தோன்றினார்கள். கடவுளை அடையக் கடுந்தவம் புரிய வேண்டியதில்லை, உண்மையான அன்புடன் தொழுது வழிபட்டால் போதும் என்ற கருத்தை வலியுறுத்திப் பாடினார்கள். நம்மாழ்வார், மாணிக்கவாசகர் போன்றோர் சங்க இலக்கிய மரபைப் பின்பற்றி உணர்ச்சிகரமான பக்திப் பாடல்களை இயற்றினார்கள். இவர்கள் விதைத்த விதை பெரிய பக்தி இயக்கமாய் வளர்ந்து அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் தமிழகம் என்றும் பரவியது. "பத்ம புராணம்" என்னும் புகழ் பெற்ற சமஸ்கிருத நூல், பக்தி தமிழ்நாட்டில் பிறந்து, கருநாடகத்தில் வளர்ந்து, மராத்திய நாட்டில் இளமையைக் கழித்து, குஜராத்தில் முதிர்ந்தது என்று கூறும்.

மாணிக்கவாசகரின் திருவாசகம் பக்தி இலக்கியங்களிலேயே உச்சத்தைத் தொட்டது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். "திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்" என்ற பழமொழியே அதற்குச் சான்று. உருக்கமான பக்திப் பாடல்களைப் பாடிய மாணிக்கவாசகர், அக்காலத்தில் மக்களிடையே இருந்த சில நாட்டுப்பாடல் வடிவங்களையும் பயன் படுத்தியிருக்கிறார். சிறப்பாக, இளம் பெண்கள் ஆடிப்பாடும் பாடல் வடிவங்களில் பக்திப் பாடல்களை அமைத்திருக்கிறார் அவர். "திருவாசகத்தில் உள்ள திருவம் மானை, திருப்பொற் சுண்ணம், திருக் கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருத் தோணோக்கம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருப் பொன்னூசல் ஆகியவை அவ்வாறு பாடப்பட்டவை. பெண்கள் உட்கார்ந்து ஆடுவது அம்மானை; வாசனைப்பொடி இடித்தவாறே பாடுவது பொற்சுண்ணம்; மலர் பறிக்கும் போது பாடுவது பூவல்லி; ஊசல் ஆடும்போது பாடுவது ஊசல்; தும்பி, தெள்ளேணம், தோணோக்கம், சாழல் என்பவையெல்லாம் மகளிர் ஆடல்களைக் குறிப்பனவே" என்பார் பேரா. மு. வரதராசனார்.

இளையராஜாவின் சிம்·பொனியில் திருவாசகம் இசைத்தட்டில் உள்ள பாடல்கள் யாத்திரைப்பத்து, சிவபுராணம், திருக்கோத்தும்பி, பிடித்தபத்து, திருப்பொற் சுண்ணம், அச்சப்பத்து என்ற பதிகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை.

1. யாத்திரைப்பத்து: இந்தப் பதிகம் மாணிக்கவாசகர் தில்லை நடராஜரின் ஜோதியில் கலப்பதற்குச் சற்று முன்னால் பாடியதாகப் போற்றப்படுகிறது. இந்த அந்தாதியின் நோக்கம் சிவனோடு கலக்கும் யாத்திரையில் தன்னோடு வருமாறு ஏனைய சிவனடியார்களை அழைப்பதே.

2. சிவபுராணம்: இது திருவாசகத்தின் முதல் பாடல். புல்லாய், பூண்டாய், புழுவாய், மரமாய், கல்லாய், மனிதராய், அசுரராய், தேவராய் எல்லாப் பிறப்பும் பிறந்து களைத்த ஓர் ஆன்மா இறைவனடி சேரத் துடிக்கும் துடிதுடிப்பை விவரிக்கிறது.

3. திருக்கோத்தும்பி: இந்தப் பாடல் சிவனின் மலர் போன்ற அடிகளை அடைந்து இறைவனின் அருட்கருணைத் தேனைப் பருகுமாறு வண்டுகளுக்கு அரசனிடம் (கோ = அரசன், தும்பி = வண்டு) சொல்வது போல் அமைந்துள்ளது.

4. பிடித்தபத்து: இந்தப் பதிகத்தில் மாணிக்கவாசகர் தாம் சிவபெருமானின் திருவடிகளைச் சிக்கெனப் பிடித்துக் கொண்டதால் தனக்கு அருள் தராமல் இறைவனால் அகல முடியாது என்று பாடுகிறார்.

5. திருப்பொற்சுண்ணம்: இந்தப் பதிகம் இளம்பெண்கள் கோவிலில் இறைவனுக்கு வாசனைப்பொடி இடித்துக் கொண்டே பாடுவதுபோல் அமைந்துள்ளது.

6. அச்சப்பத்து: இதில் மாணிக்கவாசகர், பாம்பு, புலி, யானை, நோய், போன்றவை பற்றித் தனக்கு அச்சமில்லை ஆனால் சிவனடி சேராதவர்களைக் கண்டால் அச்சம் என்கிறார்.

திருவாசகத்தின் பெருமையை நன்றாகக் கற்றறிந்த கிறித்தவ மதகுரு ஜி. யு. போப் 1900இல் இதை மிக அழகாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். இறைவனை மாணிக்க வாசகர் சற்குருவாக, உற்ற தோழனாக, வாழ்க்கைத்துணையாக, மலைப்பும் அன்பும் கலந்து பாடுவதை வியக்கிறார் போப். மாணிக்கவாசகரின் தாக்கத்தை வள்ளலாரின் திருவருட்பாப் பாடல்களிலும், சுப்பிரமணிய பாரதியாரின் கிளிக்கண்ணிகளிலும், கும்மிப்பாடல்களிலும், ஏன் கண்ணன் பாட்டிலும் காணலாம். "கண்ணன் என் தோழன்", "கண்ணன் எனது சற்குரு", "கண்ணன் என் காதலன்" போன்ற பாரதியார் பாடல்களுக்கு மாணிக்கவாசகரும், பெரியாழ்வார் பாசுரங்களும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பக்தி இலக்கியங்களும் தாம் முன்னோடி.
திருவாசகம் மட்டுமல்லாமல் சிலப்பதிகாரம், தேவாரம், பாசுரங்கள், மற்றும் திருப்புகழ்ப் பாடல்களையும் இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் எண்ணம் உண்டு என்று அறிவித்திருக்கிறார் இளையராஜா. இந்த ஆரட்டோரியோ இளைஞர்களிடையே பண்டைய தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறியும் ஆர்வத்தைத் தூண்டும் என்றும் இசைத்தட்டைத் தயாரித்த தமிழ் மையமும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com