தென்றல் பேசுகிறது....
"புலி வருது, புலி வருது" என்று ஒரு கதை உண்டு. அதற்கு நடிகர் ரஜினிகாந்த் நல்ல உதாரணம் என்றும் சொல்வதுண்டு. இப்போது புலி தான் வரப்போவதை உறுதி செய்துவிட்டது. நமது வாழ்க்கையின் ஆதாரம் நம்பிக்கை. புதியதாக ஒரு தலைவர் வரும்போது நாம் சற்றே நிமிர்ந்து உட்காருகிறோம். இவராவது ஏதாவது நல்லது செய்யமாட்டாரா என்று ஏங்குகிறோம். "சட்டசபைத் தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன்" என்கிறார் ரஜினி. அதையெல்லாம் விட முக்கியமாக நாம் கருதுபவை: 1. கடவுள் அருள், மக்கள் நம்பிக்கை, அன்பு இவற்றைப் பெறுவதில் அவர் கொண்டிருக்கும் நம்பிக்கை; 2. ரசிகர்களுக்குக் கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை என்று வற்புறுத்துவது; 3. "தயாராகும் வரை நான் உட்பட யாரும் அரசியல் பற்றிப் பேசவேண்டாம், யாரையும் விமர்சனம் செய்யவேண்டாம்" என்று கூறியிருப்பது; 4. இது மிக முக்கியமானது, தாம் கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்தபின் நிறைவேற்ற முடியாவிட்டால், "3 ஆண்டுகளில் நாமே பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போவோம்" என்று கூறியிருப்பது. போர்க்குரல் எழுப்பாமல் நல்லதை நல்லபடியாகச் செய்ய நினைக்கும் அவரது நேர்மறையான அணுகுமுறை வரவேற்கத் தக்கது. ஆனால் அரசியலில் ஜெயிப்பது அரசியலாகத்தான் இதுவரை இருந்துவந்துள்ளது. தமிழகத்தில் பெருவாரி வாக்காளர்கள் விலை போவதும் நம் கண்முன்னே நடந்துவருகிறது. அறம்சார்ந்த மாற்றம் வரும் என்று நாமும் நம்புவோம். மீண்டும் சொல்கிறோம், நம்பிக்கைதான் வாழ்க்கையின் ஆதாரம்.

*****


அமெரிக்க அரசின் சுமார் 1.5 ட்ரில்லியன் டாலர் வரிக்குறைப்புக்கான சட்டம் ஒரு வரமாக அமையலாம். தனி நபர்களும் கார்ப்பொரேட்களும் மிகப்பரவலாக இதன் பலனைப் பெறுவார்கள். பொருளாதாரச் சூழல் கடுமையாக இருந்த நிலையில், அதன் செயல்பாட்டைத் தூண்டும் பொருட்டாக ஃபெடரல் ரிசர்வ் பணப்புழக்கத்தை 2008ல் Stimulus money வழியே அதிகரித்தது. இந்தப் பணத்தைச் சூழலிலிருந்து மெல்ல உறிஞ்சிவிடும் நடவடிக்கையை இப்போது ஃபெட் எடுக்கத் தொடங்கியுள்ளது. இப்போது மீண்டும் வட்டிவிகிதங்களை மத்திய வங்கி உயர்த்தத் தொடங்கியுள்ளதையும் கவனிக்க வேண்டும். அதுவுமன்றி, வணிகநிறுவனங்கள் தமது வெளிநாட்டுப் பிரிவுகளின் லாபத்தை அமெரிக்காவுக்குக் கொண்டுவருவதற்குத் தடையாக இருந்தவற்றில் இங்கிருந்த அதிக வரிவிகிதம் ஒரு காரணம். இப்போதைய வரிச் சீரமைப்பின் காரணமாகக் கார்ப்பொரேட் லாபம் திரும்பிவரும். அதனால் ஏற்படும் அதிகப் பணப்புழக்கம் ஃபெடரல் ரிசர்வின் பணப்புழக்கக் குறைப்பு நடவடிக்கைக்கு மாற்று மருந்தாக அமையும். தொழில் நடவடிக்கைகளைத் தூண்டிச் சுறுசுறுப்பாக்குவதில் பெரும்பங்கு வகிக்கும், வேலை வாய்ப்புகளை மேலும் உயர்த்தும். உலக அளவில் அமெரிக்காவின் பொருளாதார உயர்நிலையை உறுதிப்படுத்தும். ஏனைய நாடுகளும் பயனுறும். புத்தாண்டுக்கான நல்ல செய்தி இது.

*****


லலிதா ராகத்தின் மீது கொண்ட மோகம் இவரை லலிதாராம் ஆக்கியது. இசைமீது கொண்ட அளவற்ற மோகமாக மாறியது. ரசிப்பதோடு நிற்காமல், உலகளாவிய மக்களுக்குப் பரவலாகத் தொழில்நுட்பத்தின் மூலம் இசையை எடுத்துச் செல்லும் முயற்சியாக மாறியுள்ளது. 'பரிவாதினி' லலிதாராம் கூறும் கருத்துக்கள் செறிவானவை, சிந்திக்க வைப்பவை. இசை என்றால் சுப்புடுவை நினைக்காமல் இருக்கமுடியாது. இசை அறியாதவர்களையும் விமர்சனத்தைப் படிக்க வைக்கும் மாயம் அவருக்குக் கைவந்திருந்தது. இந்த இதழின் முன்னோடியாக வருகிறார் சுப்புடு. எல்லாருக்கும் எல்லாமும் தந்து மகிழ்விப்பதாக வருகிறது ஜனவரித் தென்றல் இதழ்.
வாசகர்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், குடியரசு நாள் மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் (இளைஞர் தினம்) வாழ்த்துக்கள்.

தென்றல் குழு

ஜனவரி 2018

© TamilOnline.com