விஜயவாடா ஸ்ரீ கனகதுர்கா ஆலயம்
ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகரத்தில் ஸ்ரீ கனகதுர்கா தேவி ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு விஜயவாடா ரயில் நிலையத்திலிருந்து பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். 20 நிமிடத்திற்கு ஒருமுறை கோவிலுக்குச் செல்லப் பேருந்து உள்ளது. விஜயவாடாவுக்கு விமானம், ரயில், பேருந்து அனைத்து வசதிகளும் உள்ளன.

கனகதுர்கா ஆலயம் இந்திரகீலாத்ரி மலையில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. ஆந்திர மாநிலத்தில் இக்கோயில் இரண்டாவது பெரிய கோயிலாகும். காளிகா புராணம், துர்கா சப்தசதியிலும் வேத புராணங்களிலும் கனகதுர்கா தேவி ஸ்வயம்புவாகத் தோன்றிய தேவி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒருகாலத்தில் தற்போதைய விஜயவாடா மலைப்பாங்காக இருந்தது. கிருஷ்ணா நதி பாய்வதைப் பாறைகள் தடுத்ததால், நிலப்பகுதியில் விவசாயம் செய்யமுடியவில்லை. அங்குள்ளவர்கள் சிவபெருமானை வேண்டவே அவர் மலையை வழிவிடும்படிக் கூறியதும் அதன்படி குகைகள் வழியாக நதிநீர் வர ஆரம்பித்தது எனப் புராணங்கள் கூறுகின்றன. அர்ஜுனன் இவ்விடத்தில் சிவபெருமானை நோக்கி நெடுங்காலம் கடுந்தவம் செய்தான். சிவபெருமானின் கருணையால் அவனுக்கு மகாபாரதப் போரில் துரியோதனாதிகளை வெல்வதற்கான பாசுபதாஸ்திரம் கிடைத்தது. பாண்டவர்கள் வெற்றி பெற்றதால் இத்தலத்திற்கு விஜயவாடா எனப் பெயர் வழங்கலாயிற்று எனப் புராணங்கள் கூறுகின்றன. இதன் நினைவாக துர்காதேவிக்குக் கோவில் கட்டியதாக வரலாறு.

ஒருகாலத்தில் மகிஷாசுரன் எனும் அரக்கன் மக்களுக்குப் பொறுக்கமுடியாத தொல்லை கொடுத்து வந்ததால் இந்திரகீல முனிவர் கனகதுர்கா தேவியை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். தேவி மகிழ்வுற்று முனிவர்முன் தோன்றி வரம் கேட்கும்படி அருள, முனிவர், அரக்கர்களை அழிக்கும்படியும், நீ என் மனதில் என்றும் இருக்கவேண்டும் என்றும் வரம் வேண்டினார். தேவி, முனிவரிடம், "நீ இவ்விடம் புனித கிருஷ்ணா நதிக்கரையில் மலைவடிவில் இருந்து வர, நான் கிருதயுகத்தில் அசுரர்களை அழித்த பின்னர் உன் இருதயத்தில் இருப்பேன்" என்று புன்னகை மலர்ந்த முகத்துடன் அருள் செய்தாள். தனது சூலத்தால் தேவி, மகிஷாசுரனை வதம் செய்தாள். மக்களைத் துன்பத்திலிருந்து காப்பாற்றினாள்.

மலையுருவில் இந்திரகீல முனிவர் தேவிக்காகக் காத்திருந்தார். தேவி மகிஷாசுரனை வதம்செய்து, மலையில் நான்கடி உயரத்தில்அஷ்டபுஜங்களுடன் மகிஷாசுரன்மேல் நின்றகோலத்தில் மகிஷாசுரமர்த்தனியாகக் காட்சி தந்தாள். இந்திரன் மற்றும் தேவர்கள் தேவியை "கனகதுர்கா" எனத் துதிக்கலானார்கள். இம்மலைக்கும் எல்லாத் தெய்வங்களும் வந்து வணங்குவதாகக் கூறப்படுகிறது. தேவி ஸ்வயும்புவாகத் தோன்றியதால் மிகவும் சக்தியுடன் விளங்குவதாக வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லப் படிக்கட்டுக்கள், கிருஷ்ணா நதிக்கரையை ஒட்டி சாலைகள் உள்ளன. கோவிலின் சுற்றுச்சுவர்களில் சிவபெருமானின் லீலைகளைப் பற்றியும், சக்தியின் மகிமையைப் பற்றியும் சிற்பங்கள் பக்தர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. மலைப்படி ஏறியதும் கனகதுர்கா கோவில், மல்லேஸ்வர சுவாமி கோவில் யாவும் தரிசிக்கலாம். மலையில் தேவி தங்கநிறத்தில் ஜொலிப்பதால் இம்மலைக்கு "கனகாசலம்" என்ற பெயரும் உண்டு. பிற்காலத்தில் ஜகத்குரு ஆதிசங்கரர், கலியுகத்தில் மல்லேஸ்வர ஜ்யோதிர் லிங்கம் சீர்செய்ய முடியாத நிலையில் இருந்ததால் மல்லேஸ்வர சுவாமியை தேவியின் ஆலயத்திற்குப் பக்கத்தில் ஸ்தாபனம் செய்தார். கோவிலில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்து தேவிக்கு மிருகபலி கொடுப்பதை நிறுத்தி வேத சாஸ்திரப்படி பூஜை நடக்க ஏற்பாடு செய்தார். அகத்திய முனிவரும் மல்லேஸ்வரரின் சிறந்த பக்தர் என்று கூறப்படுகிறது.

கனகதுர்கா தேவி ஆலயத்தில் வருடந்தோறும் நவராத்ரியின்போது தேவிக்குத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. உலகிலேயே இக்கோவிலில்தான் மூலவர் சரஸ்வதி, மகாலட்சுமி, பாலாதிரிபுரசுந்தரி, ஸ்ரீராஜராஜேஸ்வரி, ஸ்ரீமஹிஷாசுரமர்தினி, ஸ்ரீதுர்காதேவி, ஸ்ரீஅன்னபூரணாதேவி, ஸ்ரீகாயத்ரி, ஸ்ரீலலிதா திரிபுரசுந்தரி என ஒன்பது விதமாக அலங்கரிக்கப்படுகிறாள். ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் நட்சத்திரத்துக்கு ஏற்ப அலங்காரம், தீமைகள் நீங்கி வெற்றிபெற தேவிக்குச் செய்யப்படுகிறது. தேவி பொன்னொளி வீசுகிறாள். சரஸ்வதி பூஜை, தெப்போத்சவம், இரண்டும் மிக விமரிசையாக சிறப்புப் பூஜைகளுடன் நடத்தப்படுகிறது. இரவில் வண்ணவிளக்கு அலங்காரத்தில் கோபுரம் மிக அழகுடன் பிரகாசிப்பதைக் காணலாம். நவராத்திரியின்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வந்து கிருஷ்ணா நதியில் தீர்த்தமாடி, தேவியைத் தரிசிக்கின்றனர்.

ஸ்ரீகனகதுர்கா தேவி புன்னகை பூத்த வதனத்துடனும், பெயருக்கேற்ப மின்னும் தங்க ஆபரணங்கள், வண்ண மலர்களுடனும், சூரியனைப் போல ஜொலித்து பக்தர்களுக்கு அருளுகிறாள் என்பது கண்கண்ட உண்மை.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com