மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: "தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்"
பாஞ்சாலி துகிலுரியப்பட்ட பிறகு நடந்த சம்பவங்களின் விவரிப்பைப் பார்த்தோமானால் பாரதியும் சரி, வில்லியும் சரி மூலநூலிலிருந்து பல வகைகளில் வேறுபடுகிறார்கள். வில்லி பாரதத்திலும் பாஞ்சாலி சபதத்திலும் திரெளபதியின் சபதம் இடம்பெறுகிறது. மூலநூலின் ஆங்கில மொழிபெயர்ப்பில் (பாம்பே, வங்கமொழிப் பதிப்பின் மொழிபெயர்ப்பு) பாஞ்சாலி சபதம் என்பதொன்று கிடையாது. தென்னிந்தியப் பதிப்பைப் பின்பற்றி மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ் வடிவத்தில் பாஞ்சாலியின் சபதம் இடம்பெற்றிருக்கிறது. வியாச பாரதத்தின் தென்னிந்தியப் பதிப்பில் பாஞ்சாலி சபதம் செய்கின்ற பகுதியை உரிய இடத்தில் பிறகு பார்ப்போம். ஏனெனில் அந்தச் சபதத்தோடு, பார்க்கப்படவேண்டிய முக்கியமான—இந்த இருவர் படைப்புகளிலும் விடுபட்ட—பகுதிகள் இருக்கின்றன. இப்போது நமக்குப் பெரிதும் தெரிந்திருக்கும் வில்லி பாரத, பாஞ்சாலி சபத வடிவங்களைப் பார்ப்போம். இவற்றை முதலில் பார்த்துக் கொண்டால்தான் நம்மிடையே பரவலாக வழங்கிவருகிற வடிவங்கள் எவை என்பதும், இவை வியாச மூலத்திலிருந்து எப்படி வேறுபடுகின்றன என்பதும், இந்த இடத்தில் வியாசர் தன் மூலக்கதையில் சொல்லியிருப்பது என்ன என்பதும் புலப்படும்.

இந்த இரண்டு படைப்புகளிலும் பாஞ்சாலியும் பீம அர்ச்சுனர் இருவரும் மேற்கொள்ளும் சபதம் தனித்தனியே பேசப்பட்டிருக்கிறது.

அரசவையில் எனைஏற்றி அஞ்சாமல்
துகில்தீண்டி அளகம் தீண்டி
விரைசெய்அளி இனம்படிதார் வேந்தர்எதிர்
தகாதனவே விளம்பு வோரைப்
பொருசமரின் முடிதுணித்துப் புலால்நாறு
வெங்குருதி பொழிய வெற்றி
முரசறையும் பொழுதல்லால் விரித்தகுழல்
இனிஎடுத்து முடியேன் என்றாள்.


அரசசபையில் என்னைக் கொண்டுவந்து அரசர்களுக்கு எதிரில் அஞ்சாமல் எனது கூந்தலையும் ஆடையையும் பற்றி (அளகம்=கூந்தல்) வண்டுகள் மொய்க்கின்ற மாலையை அணிந்த மன்னர்களுக்கு எதிரில் தகாத வார்த்தைகளைப் பேசியவர்களைப் போரிலே தலையைத் துணித்து, ரத்தம் பெருகுகின்ற அந்தச் சமயத்தில் எப்போது வெற்றிமுரசம் அறையப்படுகிறதோ அப்போதுதான் என் கூந்தலை முடிப்பேன். அதுவரை தலைவிரி கோலத்தில்தான் இருப்பேன் என்று சபதம் செய்தாள்.

இதைத் தொடர்ந்து பீமனும் அர்ச்சுனனும் சபதம் செய்கிறார்கள். 'துச்சாதனைக் கொல்லும்வரையில் தண்ணீரைக் கையால் எடுத்துப் பருகமாட்டேன். என் கதாயுதத்தால் நீர்நிலைகளை அடித்து, அப்போது தெறிக்கும் நீர்த்திவலைகளை மட்டுமே பருகுவேன்' ('தண்டால் வெம்புனல் எற்றி மீதெழுந்து விழுந்திவலை தண்நீராகக்//கொண்டுஆவி புரந்திடுவேன் இது விரதம்') என்றும்; கர்ணனைக் கொல்வேன் என்று அர்ச்சுனனும்; சகுனியின் மகனான உலூகனைக் கொல்வேன் என்று நகுலனும்; சகுனியைக் கொல்வேன் என்று சகதேவனும் சபதம் செய்கிறார்கள். (இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். வியாச பாரதம் உத்தியோக பர்வத்தில் வரும் உலூகன் தூதில் சகுனியின் புதல்வன். அவன் பாண்டவர்களிடத்திலே தூது வருகிறான். வில்லி பாரத உத்தியோக பர்வம் தூதுச் சருக்கத்தில் வரும் உலூகன் வேறு. அவர் உலூக முனிவர். பாண்டவர்களிடமிருந்து துரியோதனாதியரிடத்தில் தூது போனவர். இரண்டு நூல்களிலும் 'உலூகன் தூதுச் சருக்கம்' இரண்டு 'உலூகர்'களும் வேறு வேறானவர்கள்.)

பாரதியின் பாஞ்சாலி சபதத்திலும் பீமன், அர்ச்சுனன், திரெளபதி ஆகியோர் அடுத்தடுத்து சபதமிடுகிறார்கள். நகுல சகதேவர்களின் சபதம் இதில் இடம்பெறவில்லை. "பாவி துச்சாதனன் செந்நீர்; - அந்தப் - பாழ்த்துரி யோதனன் ஆக்கை இரத்தம்//மேவி இரண்டும் கலந்து - குழல்- மீதினிற் பூசி நறுநெய் குளித்தே//சீவிக் குழல்முடிப்பேன்" என்று பாஞ்சாலி மூலநூலில் சபதமிடவில்லை. இப்படியொரு சபதம் வில்லி பாரதத்திலும் இல்லை என்பதை மேலே காட்டியுள்ள பாடல் காட்டும். இந்த இருவருடைய ரத்தத்தையும் கலந்து கூந்தலில் பூசிக்கொண்ட பிறகே கூந்தலை முடிப்பேன்' என்று பாரதி பாடியிருப்பது வடமொழியில் பட்ட நாராயணர் இயற்றிய 'வேணி ஸம்ஹாரம்' என்ற நாடகத்திலிருந்து பெறப்பட்ட உத்தி. வியாசரில் இவ்வாறெல்லாம் இல்லை. சொல்லப்போனால், பாஞ்சாலி கூந்தலை சபையில் விரித்துப் போடவில்லை. வனவாசத்துக்காகக் காட்டுக்குக் கிளம்பும்போது கூந்தலை விரித்துப்போட்ட வண்ணமாகச் செல்கின்றாள்.

நமக்குப் பெரிதும் அறிமுகமாகியிருக்கும் வடிவங்களுக்கும் மூல நூலுக்கும் உள்ள வேறுபாடுகளில் முக்கியமான சிலவற்றை எடுத்துக் காட்டினோம். வியாச பாரதத்தில் இப்படி ஒருவர்பின் ஒருவராக எழுந்து நின்று சபதமிடுவது போன்றெல்லாம் சொல்லப்படவில்லை. அன்றைய தினத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருந்த சம்பவங்களில் அவ்வப்போது செய்யப்படும் சபதங்கள் அவை. ஒவ்வொன்றுமே தனித்தனியான நிகழ்வு என்பதை மனத்தில் இருத்திக்கொள்ள வேண்டும்.

துகிலுரிதல் நடந்து முடிந்ததும் கோபத்தை அடக்க முடியாமல் பீமன் எழுந்து சபதம் செய்கிறான்: "உலகத்திலுள்ள க்ஷத்திரியர்கள் அனைவரும் மற்ற மனிதர்களும் இதற்குமுன் சொல்லாததும் இனியும் யாரும் சொல்லப் போகாததுமான இந்த என் சொல்லைக் கேளுங்கள். பூமிக்கு ஈசுவரர்களே! நான் இதைச் சொல்லி இவ்வாறு செய்யாமல் போவேனாயின், அதாவது—பாவியும் துஷ்டபுத்தி உள்ளவனும் பரத வம்சத்தவரில் இழிவானவனுமாகிய இந்த துச்சாஸனுடைய மார்பை யுத்தத்தில் பிளந்து பலாத்காரமாக இவன் ரத்தத்தைக் குடியாமல் விடுவேனாயின் என் முன்னோர்களான கூடஸ்தர்கள் சென்ற கதிக்கு நான் செல்லாமற் போகக்கடவேன்." (வியாச பாரதம், ஸபா பர்வம், த்யூத பர்வம், அத்: 90, பக்: 291) இது துச்சாஸனைக் குறித்து செய்த சபதம். துரியோதனனுடைய 'தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன்' என்று செய்த சபதம் இதற்குச் சற்றுநேரம் கழித்து வருகிறது.

அன்று நடந்த கொடுமைகள் கணக்கற்றவை. பாஞ்சாலியை அவமானப்படுத்தியது ஒன்றுமட்டுமே அங்கே தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அவளுடைய துகிலை உரிந்ததோடு அது நிற்கவில்லை. அடுத்தடுத்த நிகழ்வுகளில் துரியோதனன் தன் ஆடையை விலக்கி, அவளுக்குத் தன் இடது தொடையைக் காட்டி, அங்கே வந்து உட்காரும்படிச் சொன்னான். இங்கே குறிப்பிடத்தக்கது என்னவென்றால், வலது தொடையில் அமர்வதற்கு மகளும்; இடது தொடையில் அமர்வதற்கு மனைவியும் உரியவர்கள். ஆதி பர்வத்தில் கங்கை, சந்தனு மகராஜாவின் தந்தையான பிரதீபனிடத்தில் வந்துதான் தன்னை மணந்துகொள்ளுமாறு முதலில் கேட்கிறாள். பிரதீபன் கங்கைக் கரையோரத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சமயத்தில் அவனுடைய வலது தொடையில் வந்து அமர்ந்துகொண்டு 'என்னை மணந்துகொள்' என்று கேட்கும்போது, 'அம்மா, நீ என்னுடைய வலது தொடையில் அமர்ந்ததால் மகளுக்குச் சமமாகிறாய். ஆகவே நான் உன்னை மணந்துகொள்ள முடியாது. வேண்டுமானால் என் மகனை வரிக்கலாம்' என்று பிரதீபன் சொன்னது இங்கே நினைவுகூரத் தக்கது. தன் அண்ணியான பாஞ்சாலியைத் தன் தாரமாக ஆக்கிக்கொள்ள துரியோதனன் துடிக்கிறான் என்றால், பீமனுக்குக் கோபம் வராதா? அந்தச் சம்பவத்தை இங்கே காணலாம்:

"...தன்னுடைய ஐசுவரியத்தின் கர்வத்தினால் மதிகெட்ட துரியோதனன் புன்னகையுடன் பாஞ்சாலியைப் பார்த்து, பீமசேனனை அவமானப் படுத்துவதற்காகக் கர்ணனுடன் பரிகாசம் செய்து தன் வஸ்திரத்தை விலக்கி வாழை மரத்துக்கும் யானைத் துதிக்கைக்கும் ஒப்பானதும் வஜ்ராயுதத்துக்கு ஒப்பான திடமுள்ளதும் எல்லா லட்சணங்களும் பொருந்தியதுமான தன் இடது தொடையைத் திரெளபதி பார்க்க அவளுக்குக் காண்பித்தான்." (மேற்படி, அத்: 92, பக்: 301). (Duryodhana. desirous of encouraging the son of Radha and insulting Bhima, quickly uncovered his left thigh that was like unto the stem of a plantain tree or the trunk of an elephant and which was graced with every auspicious sign and endued with the strength of thunder, and showed it to Draupadi in her very sight என்பது கிஸாரி மோகன் கங்கூலியின் மொழிபெயர்ப்பு.) இரண்டு சபதங்களுக்கும் இடையில் இரண்டு அத்தியாயங்கள் கடந்திருக்கின்றன. இந்தச் சபதத்தைக் கேட்ட விதுரர், "மகராஜாவே! நீர் இவ்வாறு திரெளபதியைக் கஷ்டப்படுத்துவீராயின் பாண்டவர்களைக் கெடுத்த காரணத்தினாலேயே இந்தப் பாவியான உமது புத்திரனும் அவன் மந்திரிகளும், கோபித்த பீமார்ஜுனர்களால் இருவர்களாலும் நகுல சகதேவர்களாலும் வெகு சீக்கிரத்தில் அழிக்கப்படுவார்கள். ஆதலால் பிள்ளையைத் தடுக்கக் கடவீர்" என்றார். இதைத் தொடர்ந்து வியாசர் சொல்கிறார்: "இதைக் கேட்ட புத்திகெட்ட திருதராஷ்டிரன் ஒரு மறுமொழியும் சொல்லவில்லை."

ஏற்கெனவே 'கரை தத்தி வழியும் செருக்கினால், கள்ளின் சார்பின்றியே வெறி சான்றவன்' என்று பாரதி பாடிய துச்சாதனை ஒத்திருந்த துரியோதனனுக்கு வெறி தலைக்கேறியது. அவனை திருதராஷ்டிரனும் தடுக்கவில்லை; சபையில் இருந்த அத்தனை பெரியவர்களில் ஒருவரும் கண்டிக்கக்கூட இல்லை. அப்போது அவன் செய்தது என்ன? "அப்போது நீண்ட கண்களையுடைய பாபியான துரியோதனன் விதியினால் வந்த அறிவின்மையினால் இழுக்கப்பட்டு விதுரர் சொன்தை லட்சியம் செய்யாமல் சந்தோஷத்துடன் அடிக்கடி திரெளபதிக்குத் தொடையைக் காண்பித்தான்.

இந்தக் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள். பொது இடத்திலே ஒரு பெண்ணுக்கு-அதுவும் தாய்க்குச் சமமான உறவுடைய ஒரு பெண்ணுக்கு-ஒருவன் தன் ஆடையை விலக்கித் தொடையைக் காண்பித்தால் நமக்கேகூடப் பொறுக்குமா? விஷயம் இத்துடன் முடிந்துவிடவில்லை. மறு சூது எனப்படும் அனுத்யூதமும் தொடர்ந்தது. அப்போதுதான் வனவாசம் பணயமாக வைக்கப்பட்டது. அலச இன்னும் இருக்கிறது.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com