அரங்கேற்றம்: ஷ்ரத்தா ராம்நாத்
ஆகஸ்ட் 26, 2017 அன்று நிருத்தியா டான்ஸ் அகடமி (கார்மெல், இண்டியானா) மாணவியும் குரு திருமதி. மங்களா ஆனந்தின் சிஷ்யையும் ஆன செல்வி. ஷ்ரத்தா ராம்நாத்தின் பரதநாட்டிய அரங்கேற்றம் இண்டியானாபொலீசில் உள்ள வாரன் பெர்ஃபாமிங் மையத்தில் நடைபெற்றது. முக்கிய விருந்தினராக கலைமாமணி சங்கீதகலாநிதி திருமதி ராதா ராமநாதன் வந்திருந்தார்.

அரங்கேற்றத்தை நடராஜ புஷ்பாஞ்சலி, குரு வந்தனத்துடன் துவங்கிய ஷ்ரத்தா கம்பீரநாட்டையில் ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் "ஸ்ரீ விக்னராஜம் பஜே" என்று வினாயகரிடம் தடைகளை நீக்க வேண்டினார். மிச்ர ஏக தாளத்தில் தஞ்சாவூர் நால்வர் வடிவமைத்த அலாரிப்பை பலவிதமான தாளகதிகளில் நளினமாகக் கையாண்டார். வழுவூர்பாணி வழிவந்த பத்மஸ்ரீ டி. என். தண்டாயுதபாணி பிள்ளையால் ஹம்சாநந்தினியில் அமைந்த ஜதீஸ்வரத்தை அடவுகளுடனும் முத்திரைகளுடனும் சிறப்பாக ஆடினார். அடுத்து மிச்ரசாபு தாளத்தில் ராகமாலிகையாக "தில்லை அம்பலம்" பாடல் வந்தது. தன்யாசியில் "நீ இந்த மாயம்" என்ற வர்ணம் அரங்கேற்றத்தின் சிகரமாக அமைந்தது. இதைக் குறிப்பிடும் விதமாக குரு ராதா தனது உரையில் எவ்வாறு ஷ்ரத்தா தனது கடந்தகால நடன நிகழ்ச்சிகளை நினைவுபடுத்தினார் என்று விவரித்தார். தொடர்ந்து புரந்தரதாசரின் "ஆடஹோடலே மக்களு" என்ற ராகமாலிகையில் கண்ணனின் கோகுல லீலைகளைக் காண நம்மைக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்துவந்த "ஸ்மரசுந்தரகுனி" என்ற ஜாவளிக்குப் பின், திலங் ராகத்தில் லால்குடி ஜயராமன் தில்லானாவுக்கு ஷ்ரத்தா ஆடி முடித்ததும் சபையோர் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். நிறைவாக மதுரை கிருஷ்ணனின் மத்யமாவதி ராகமங்களத்துடன் நிறைவு செய்தார்.

குரு மங்களா (நட்டுவாங்கம்), ரகுராம் ராஜகோபால் (வாய்ப்பாட்டு), ஸ்ரீஹரி ரங்கசாமி (மிருதங்கம்), நரசிம்மமூர்த்தி (புல்லாங்குழல்) ஆகியோர் நடனத்திற்குப் பெரும் துணையாக இருந்தனர். ஷ்ரத்தாவின் பெற்றோர் நிரஞ்ஜனா ராம்நாத் மற்றும் ராம்நாத் சுப்ரமணியன் ஆகியோர் நன்றி நவில நிகழ்ச்சி முடிவுற்றது.

கே. கோபாலகிருஷ்ணன்,
கார்மெல், இண்டியானா

© TamilOnline.com