அரங்கேற்றம்: நேஹா சிந்து சிவராமன்
செப்டம்பர் 2, 2017 அன்று செல்வி. நேஹா சிந்து சிவராமனின் கர்நாடக சங்கீத இசை அரங்கேற்றம் கலிஃபோர்னியா வால்நட் க்ரீக்கில் உள்ள லெஷெர் மையத்தின் ஹாஃப்மன் அரங்கில் நடைபெற்றது.

சிந்து இசை நிகழ்ச்சியைக் கானடா வர்ணத்தில் ஆரம்பித்து, அதன் கண்டஜாதி அடதாள இரு காலத்தையும் மேலான கட்டுப்பாட்டுடன் பாடியது மிக அழகு. "வாரண முகவாய் துணை வருவாய்" என்ற விநாயகர் பாடலுக்கு மெருகூட்டும் வகையில் கற்பனா ஸ்வரங்கள் பாடியது குரு ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் அவர்களின் வித்துவத்துக்குச் சான்று பகர்ந்தது. தொடர்ந்து "தாயே யசோதா", பூர்விகல்யாணி ராகத்தில் "மருகுலாவிய" என்னும் திருப்புகழ், தியாகராஜ சுவாமிகளின் "நகுமோமு", பாபநாசம் சிவனின் "தயவில்லையா தயாளோ" என்ற கரகரப்ரியா ராகப் பாடல் ஆகியவற்றைச் சிந்து கையாண்டது மெச்சும்படியாக இருந்தது.

பாபநாசம் சிவனின் "காணக் கண்கோடி வேண்டும்" என்னும் காம்போஜி ராகப் பாடலில் "மாணிக்கம் வைரம் முதல் நவரத்தினாபரணமும்" என்ற இடத்தில் நிரவல் பிரமிக்க வைத்தது. அடுத்ததாக ராகம், தானம், பல்லவியை ராகமாலிகையில் சிந்து மிக நிதானத்துடன் மிஸ்ரஜதி திரிபுட தாளத்தில் எடுத்தாண்ட விதம் பெருவிருந்தாக அமைந்தது. இதனை இயற்றி இசையைமைத்த பெருமை பரமகுரு நெய்வேலி ஸ்ரீ. சந்தானகோபாலன், குரு ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன் ஆகியோரைச் சாரும். கல்கியின் "பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஒருநாள்" பாடலைத் தொடர்ந்து, பேஹாக் ராகத் தில்லானாவை விறுவிறுப்பாகப் பாடி, "சாந்தி நிலவ வேண்டும்" என்றுல் இசையால் பிரார்த்தித்து மங்களத்துடன் நிறைவு செய்தார்.

திரு. விட்டல் ராமமூர்த்தி (வயலின்), திரு. திருவனந்தபுரம் பாலாஜி (மிருதங்கம்), திரு. கே.வீ. கோபாலகிருஷ்ணன் (கஞ்சிரா) ஆகியவை கச்சேரியை ஓர் உயர்நிலைக்கு எடுத்துச் சென்றன. சிந்துவின் ஒன்றுவிட்ட சகோதரி ஷாயினி தம்புரா மீட்டினார்.

சிந்து தனது இசைப் பயணத்தை குரு திருமதி. அகிலாவிடம் தொடங்கினார். மேலதிகக் கற்கை மற்றும் அரங்கேற்ற விசேடப் பயிற்சியை குரு. ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலனிடம் பெற்றுக்கொண்டார். பன்னிரண்டே வயதான சிந்து மூன்று மணித்தியால கச்சேரியை நிகழ்த்தி உள்ளங்களை ஈர்த்தார் என்றால் மிகையாகாது. சிந்து கல்வியிலும், கலைகளிலும் மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகின்றோம்

ஆங்கிலத்தில்: அனு சுரேஷ், ஸ்ருதி ஸ்வர லயா, ஃப்ரீமாண்ட், கலிஃபோர்னியா
தமிழில்: புஷ்பராஜா ராஜேஸ்வரன்

© TamilOnline.com