ஆர். கோவர்த்தனம்
பிரபல இசையமைப்பாளரும், எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்ளிட்டோரது குழுவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றியவருமான கோவர்த்தனம் (91) காலமானார். பெங்களூரில் பிறந்த கோவர்த்தனம் சிறுவயது முதலே இசையார்வம் கொண்டிருந்தார். தந்தையே இவருக்கு முதல் குரு. தாய்மொழி தெலுங்கு என்பதாலும் பெங்களூரில் பிறந்து வளர்ந்ததாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். இவரது மூத்த சகோதரர் ஆர். சுதர்சனம் புகழ்பெற்ற இசையமைப்பாளர். அவர் வழி கோவர்த்தனமும் தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் தயாரான 'ஜாதகம்' என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அந்தப் படத்தில்தான், "சிந்தனை ஏன் செல்வமே" என்ற பாடல்மூலம் பி.பி. ஸ்ரீநிவாஸ் பின்னணிப் பாடகராகத் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து "ஒரே வழி", "கைராசி" "பட்டணத்தில் பூதம்", "பூவும் பொட்டும்", "அஞ்சல்பெட்டி 520" உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பின்னர் வாய்ப்புகள் குறையவே விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணையரிடம் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். ஒரு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தால் செவித்திறன் பாதிக்கப்பட்டது. இருந்தும் இளையராஜா, தேவா போன்றவர்களிடம் தொடர்ந்து பணியாற்றி வந்தார். பின்னர் சேலத்திற்குக் குடிபெயர்ந்து மனைவியுடன் வசித்து வந்தார். வறுமையில் வாடிவந்த இவருக்கு மேனாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் 10 லட்சம் நிதி உதவி ஆதரித்தார்.

"கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னால் அன்றோ", "அன்புள்ள அத்தான் வணக்கம்", "அந்தச் சிவகாமி மகனிடம்", "உலகத்தில் சிறந்தது எது?", "நாதஸ்வர ஓசையிலே" போன்ற பாடல்கள் என்றும் இவரது பெயர் சொல்லும்.

© TamilOnline.com