கடவுளின் பார்வைக் கோணத்தை அறிவாயா?
நான்கு நண்பர்கள் சேர்ந்து பருத்தி வியாபாரம் தொடங்கினார்கள். பருத்திப் பொதிகளை ஒரு குடோனில் அடுக்கி வைத்தனர். பருத்தி விதைகளைத் தின்பதற்காக அங்கே எலிகள் படையெடுத்தன. அவற்றை விரட்டுவதற்கென்று ஒரு பூனையை வளர்த்தார்கள். அவர்களுக்கு அந்தப் பூனையின்மேல் மிகுந்த பிரியம் இருந்த காரணத்தால் அதன் காலில் பொன்னாலான சலங்கை ஒன்றைக் கட்டினார்கள்.

ஒருமுறை அந்தப் பூனை அடுக்கி வைத்திருந்த பருத்திப் பொதிகளின் மேலிருந்து குதிக்கவே, அதன் காலில் காயம் ஏற்பட்டு நொண்டத் தொடங்கியது. காயத்தில் களிம்பு தடவி ஒரு துணியால் கட்டுப்போட்டார்கள். அந்தக் கட்டு அவிழ்ந்துபோய், பூனை நடக்கும்போது அதன் பின்னால் நீளமாகத் துணியும் சென்றது. இது தெரியாமல் அது நெருப்பின் அருகில் நடந்து செல்லவே, துணியில் தீப்பற்றிக் கொண்டது.

அச்சத்தில் பூனை குடோனுக்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. அங்கிருந்த பருத்திப் பொதிகளிலும் தீ பரவி, வெகு விரைவில் எல்லாம் சாம்பலாகிப் போயின.

நான்கு நண்பர்களும் பூனையின் ஒவ்வொரு காலுக்குப் பொறுப்பேற்றிருந்தார்கள். எனவே, மற்ற மூன்றுபேரும் நெருப்புப் பிடித்த காலுக்கு உரியவன்மீது நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்தார்கள்.

எல்லார் தரப்பையும் கேட்டபின் நீதிபதி, "காயம்பட்ட காலின்மீது எந்தத் தவறும் கிடையாது. மற்ற மூன்று கால்களும்தான் நெருப்பு எரியும் காலை குடோனின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் சென்றன. எனவே மற்றக் கால்களுக்கு உரியவர்தான் நொண்டிக்காலுக்கு உரியவருக்கு நஷ்ட ஈடு தரவேண்டும்" என்று தீர்ப்பளித்தார்.

முதல் பார்வைக்குச் சரியாகத் தெரிவது, யோசித்துப் பார்க்கையில் தவறாகப் போய்விடலாம். உலகியல் பார்வையில் எது சரியோ அது கடவுளின் பார்வையில் மாறுபடலாம். கடவுளின் பார்வை எதுவென்று அறிந்துகொள். மகான்கள்தாம் உனக்குச் சரியான அறிவுரை தருவார்கள். நல்லோரை நாடிப் போகவேண்டுமே அல்லாது தவிர்க்கக்கூடாது.

பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபா

© TamilOnline.com