எர்த்தாம்டனின் சுடர்: ஜலதோஷ மூலிகை
அத்தியாயம் 1 அது இலையுதிர்காலம் தொடங்கும் சமயம். எர்த்தாம்டன் நகரம் அதற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சூரியக் கதிர்கள் மங்குகின்ற காலம்; குளிர்ந்த மெதுவாகக் காற்று வர ஆரம்பிக்கும். எர்த்தாம்டனில் இலையுதிர் காலம் என்றால், அருணின் அப்பா ரமேஷின் பிறந்தநாள் கொண்டாடும் காலம். அதைவிட, ஜலதோஷம் தொடங்கும் காலம் என்று வைத்துக் கொள்ளலாம். ஜலதோஷத்தில் அருண் படும் கஷ்டம் அம்மா கீதாவிற்கும், ரமேஷிற்கும் என்ன செய்வது என்று புரியாமல் சங்கடப்படுத்தும். அந்த வருடம் ரமேஷின் 40வது பிறந்த நாள். அதைப் பெரிய அளவில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள்.

கீதா, அருணுக்குப் பலவிதமான மருந்துகள் கொடுத்துப் பார்த்தார். எதற்கும் மசிந்த மாதிரித் தெரியவில்லை அந்த ஜலதோஷம். அவர்கள் ஊரிலுள்ள எல்லாக் கடைகளிலும் ஹோர்ஷியானா நிறுவனத்தின் மருந்துகள் மட்டுமே கிடைக்கும். அது கீதாவிற்கு மிகவும் கோபத்தை கொடுத்தது. நகர மேயர் ரோஸ்வுட் அவர்களிடம் எவ்வளவோ மனுக்கள் கொடுத்தும், அவரால் ஹோர்ஷியானாவின் அக்கிரமத்தை ஒன்றும் செய்யமுடியவில்லை. வேறு நல்ல மருந்துகள் இருந்தாலும், அந்தச் சுற்று வட்டாரத்தில் ஹோர்ஷியானா தயாரிக்கும் மருந்துகள் மட்டுமே கிடைத்தன. நகர மக்களுக்கு அது ஒரு சாபக்கேடாக இருந்தது. சில சமயம் வெளியூருக்குச் சென்றாலோ, வெளியூரில் இருந்து யாராவது வந்தாலோ, வேறு மருந்துகள் அங்கிருந்த சில குடும்பங்களுக்கு கிடைத்தன. இல்லாவிட்டால், ஹோர்ஷியானாவே கதி.

'ஹக்ஸ்! அச்சூ!' என்று அருண் தும்மினான். அது அதிகமாகிக்கொண்டே போனது.

"போச்சுடா, ஃபால் சீஸன் ஆரம்பிச்சாச்சா?" என்று கேட்டுக்கொண்டே ரமேஷ் வந்தார். "மரத்துல இலை உதிருதோ இல்லையோ, அருணுக்கு ஜலதோஷம் வந்திரும்."

அருணின் அருகே வந்து, செல்லமாகத் தலையைக் கோதினார்.

"எப்படி இருக்கு, கண்ணா?" என்று கேட்டார். அவருக்குத் தெரியும் அவன் ஜலதோஷத்தில் படும் அவஸ்தைகள்.

"அச்சூ!" என்று பதில் வந்தது.

"மருந்து கொடுத்தியா கீதா?" மனைவியைப் பார்த்துக் கேட்டார்.

"அச்சூ, அச்சூ" என்று தொடர்ந்து தும்மினான். அது அருண் "ஆமாம்" என்று பதில் அளித்தது போன்று இருந்தது.

"ஹாப்பி பர்த் டே, அப்பா!" என்று சொல்லிக்கொண்டே அருண் வந்தான். அதற்குள் கீதாவும் வந்தார்.

"கேக் எப்படி இருக்கு, ரமேஷ்? நம்ம அருண் தான் டிசைன் கொடுத்தான். என்ன கற்பனை பார்த்தீங்களா?"

நடுநடுவில் அருண் தும்மிக்கொண்டே இருந்தான். ரமேஷிற்கு என்னவோ போல இருந்தது. அவர் பிறந்தநாள் கேக்கைப் பார்த்தார். அதில் 40 என்று மெழுகுவர்த்தி அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. அதோடு மட்டுமில்லாமல் "40 stands for wisdom" என்றும் எழுதியிருந்தது. கீதா வந்து மெழுகுவர்த்தியை ஏற்றினார்.

"அப்பா ஊதுங்க, நல்லா ஒரு விஷ் பண்ணுங்க" என்றான் அருண்.

ரமேஷ் கண்ணை மூடிக்கொண்டு, "ஆண்டவா, எங்க அருணோட ஐலதோஷத்தை குணப்படுத்தப்பா" என்று சொல்லி, மெழுகுவர்த்தியை ஊதி அணைத்தார்.

அருண், அச்சூ என்று ஆமோதித்தான்.

கதை: ராஜேஷ்
படம்: Anh Tran

© TamilOnline.com