ஸ்ரீ குருவாயூரப்பன் ஆலயம்
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற குருவாயூர் தலம். கொச்சின் விமான நிலையத்திலிருந்து 75 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

2000 வருடங்களுக்கும் மேல் பழமை வாய்ந்த கோவில் இது. விஸ்வகர்மாவால் கட்டப்பட்டது. இந்தியாவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் விஷ்ணு கோவில்களில் ஐந்து கோவில்கள் மிகச்சிறப்பு வாய்ந்தவை. அவை குருவாயூர், திருப்பதி, நாதத்வாரா (ராஜஸ்தான்), பூரி ஜகந்நாதர் (ஒடிஸா), துவாரகா (குஜராத்). குருவாயூர் தலத்தில் விஷ்ணு குழந்தை கிருஷ்ணனாக எழுந்தருளியுள்ளார். மூலவர் நாமம்: உன்னி கிருஷ்ணன். இவர் கல்லிலோ, உலோகத்திலோ வடிவமைக்கப்படவில்லை. 'பாதாள அஞ்சனம்' என்ற முறைப்படிச் செய்யப்பட்ட சிலையாகும். குருவாயூர் கிருஷ்ணன் சிலையைக் கிருஷ்ணனே செய்ததாகவும் தன்னைத் தானே சிலையாக வடித்து இத்தலத்தில் வந்து அமர்ந்ததாகவும் வரலாறு.

அன்னை தேவகி-தந்தை வஸுதேவருக்கு கிருஷ்ணன், குருவாயூரில் உள்ளவாறே தோற்றமளித்ததாக ஐதீகம். இத்தலம் 'பூலோக வைகுண்டம்', 'தென்னிந்தியாவின் துவாரகை' என்றெல்லாம் போற்றப்படுகிறது. குரு பகவானும் வாயு பகவானும் சேர்ந்து உருவாக்கிய தலம் என்பதால் கிருஷ்ணன் தன் பெயரைச் சூட்டாமல் 'குருவாயூர்' என்று பெயர் சூட்டினார் என்கிறது வரலாறு. நாராயண பட்டத்ரி, பூந்தானம் ஆகியோர் குருவாயூரப்பனைப் போற்றிப் பாடியுள்ளனர்.

விடியற்காலை மூன்று மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். முதல்நாள் அணிந்த மலர் அலங்காரத்துடன் நிர்மால்ய பூஜை நடக்கும். தொடர்ந்து திருமஞ்சனம், தைல அபிஷேகம். மூலிகைகளால் ஆன மருத்துவக்குணம் வாய்ந்த திரவியப்பொடி தூவி மந்திரபூர்வமாக கோவில் தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்து புனிதநீர் பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து 12 கால பூஜை நடத்தப்படுகிறது. இரவு 9 மணிக்கு சுவாமி சன்னதி நடை மூடிய பிறகு தொடங்கி காலை நடை திறப்புக்கு முன்பு ஆடி முடிக்கும் ஆட்டம் 'கிருஷ்ணாட்டம்' எனப்படுகிறது. மயிற்பீலியைக் கொண்டு கிரீடம் செய்து ஆடும் ஆட்டம் இது. கண்ணனுக்கு மிகவும் பிடித்த ஆட்டம் என்பர்.

கோவிலின் வடபுறமாக சிவபெருமான் விஷ்ணுவை நோக்கிப் பல ஆண்டுகள் தவமிருந்தார். தீர்த்தத்தின் கரையில் அவர் தவம் செய்ததால் அது ருத்ர தீர்த்தம் என வழங்கப்பட்டது. இது பழங்காலத்தில் பக்கத்தில் தாமரையூர்வரை பரந்து விரிந்திருந்தது. வாயு பகவானும், குரு பகவானும் கேரள தேசத்தில் பரசுராமரைச் சந்தித்து ஸ்ரீமந்நாராயண விக்ரகத்தை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடம் எது எனக் கேட்டனர். சிவபெருமான் ருத்ர தீர்த்தத்தின் அருகே உமையுடன் வீற்றிருந்தார். பரசுராமர், வாயு, குருபகவான் மூவரும் சிவனைப் பணிந்து பிரதிஷ்டை செய்ய இடம் கேட்டதும் சிவபெருமான் இங்கேயே விஸ்வர்கர்மா உதவியுடன் கோவில் கட்டி விக்ரகத்தை வழிபடுங்கள் என ஆசி கூறி, விக்ரகத்திற்கு சிவபெருமானே அபிஷேகமும் செய்தார். சிவபெருமான் அதன் அருகில் உள்ள இடத்தில் எழுந்தருளி 'மம்மியூர் மகாதேவர்' என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்றும் குருவாயூர் வரும் பக்தர்கள் குட்டி கிருஷ்ணனை தரிசனம் செய்துவிட்டு மம்மியூர் வந்து சிவனையும் தரிசித்துச் செல்கின்றனர்.

மகாபாரதப் போரில் நீண்டகாலம் ஆட்சிபுரிந்த பரீக்ஷித்து மன்னன், தட்சகன் என்ற பாம்பால் கடிபட்டு மரணமடைந்ததால் அவரது மகனான ஜனமேஜயன் சர்ப்பங்கள் மீது கோபம் கொண்டு சர்ப்ப யாகம் செய்தான். பல நாகங்கள் யாகத்தீயில் விழுந்து இறந்தன. இதைக் கண்ட அஸ்தீக முனிவர், யாகத்தை நிறுத்துமாறு வேண்டவே மன்னனும் முனிவர் பேச்சை மதித்து யாகத்தை நிறுத்தினான். என்றாலும் பாம்புகளைக் கொன்ற பாவத்தால் தொழுநோயால் பீடிக்கப்பட்டான். சிலகாலம் கழித்து அவன் பரசுராமரைச் சந்தித்தபோது அவர் தினமும் புனித ருத்ர புஷ்கரணியில் நீராடி கிருஷ்ணனைக் குறித்து தவம் செய்தால் நோய் நீங்கும் என்று ஆசி கூறினார். அவ்வாறே செய்து குணமடைந்தான் ஜனமேஜயன். அதன் காரணமாக நன்றியுடன் குருவாயூரப்பனுக்குக் கோயில் ஒன்றை எழுப்பினான்.

நாராயண பட்டத்ரி கடுமையான பக்க வாதத்தினால் கஷ்டப்பட்டபோது குருவாயூரப்பனைக் குறித்து 'நாராயணீயம்' என்னும் தோத்திர நூலை இயற்றினார். அவன் லீலைகளை ஒவ்வொன்றாகப் பாடி, “கண்ணா, இவற்றையெல்லாம் நீ செய்தாயா?” என்று கேட்க, ஒவ்வொன்றுக்கும் கண்ணன் தலையசைத்தான் என்பது வரலாறு. இப்படி 1036 ஸ்லோகங்களை அவர் பாடி முடித்ததும் குருவாயூரப்பனின் திருவருளால் நோய் குணமானது. அவர் அமர்ந்து பாடிய கல்பீடம் இன்றும் குருவாயூர் ஆலயத்தில் உள்ளது.

சித்திரை விழா, ஓணம், கோகுலாஷ்டமி, விருச்சிக ஏகாதசி என விழாக்கள் பலவும் இங்கு சிறப்புடன் கொண்டாடப்படுகின்றன. அர்ஜுனனுக்கு கண்ண பரமாத்மா கீதையை உபதேசித்தது ஏகாதசி அன்றே. கோயில் உற்சவரை யானையே சுமந்து வரும். இங்கு 52 யானைகள் உள்ளன. இங்கு திருமணம் நடந்தால் தம்பதிகள் தீர்க்காயுளுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. குழந்தைகளுக்கு பாலமுதம் ஊட்டுவது இங்கு தினந்தோறும் நடக்கும் நிகழ்வு. பக்தர்கள் தீராத நோய் நீங்க இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இங்கு கோவிலில் பூஜைகள் சாஸ்திரப்படி நடத்தப்படுகின்றன. பக்தர்கள் ருத்ர தீர்த்தத்தில் முழுகி ஈர ஆடையுடன் இறைவனைத் தரிசிப்பது மகா புண்ணியம் என்பது ஐதிகம்.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

© TamilOnline.com