முனைவர் ஜெயந்தி நாகராஜன்
கையைத் தட்டு கையைத் தட்டு
பாட்டைக் கேட்டு கையைத் தட்டு
தலையை ஆட்டு தலையை ஆட்டு
பாட்டைக் கேட்டு தலையை ஆட்டு
நடனமாடு நடனமாடு
பாட்டிற்கேற்ப நடனமாடு

ஆங்கிலத்தில் மிகவும் புகழ் பெற்ற நர்சரி ரைம் ஆன "clap your hands clap your hands Listen to the music clap your hands' என்ற பாடலைத்தழுவி மேற்கண்ட பாடலை எழுதியவர் முனைவர் ஜெயந்தி நாகராஜன். இந்தப் பாடல் மட்டுமல்ல;

"எண்ணும் எழுத்தும் கண் என்றே
எங்கள் ஆசான் சொன்னாரே
எழுதப் படிக்கக் கற்றுத் தந்து
ஏணியாகவே நின்றாரே...."

"அன்புடன் பழகலாம்
ஆர்வத்துடன் உழைக்கலாம்
இன்சொல் உரைக்கலாம்
ஈகையில் சிறக்கலாம்...."

"அம்மா அம்மா தினம் உனக்கு
அன்பாய் வணக்கம் சொல்லிடுவேன்!
அப்பா அப்பா தினம் உனக்கு
தப்பாமல் அதனைச் சொல்லிடுவேன்...."

"கம்பன் எங்கள் கம்பனாம்
கவிஞர் மன்னர் மன்னனாம்
கன்னல் கவிதை தந்தவர்
கற்றோர் நெஞ்சை வென்றவர்
அண்ணன் தம்பி பாசத்தை
அழகுத் தமிழில் தந்தவர்...."


Click Here Enlargeபோன்ற பல குழந்தைப் பாடல்களை எளிய தமிழில் தந்தவர். குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவை முன்னோடியாகக் கொண்டு எழுதி வருகிறார். சென்னை, திருவல்லிக்கேணியில், மார்ச் 25, 1954 அன்று, சதாசிவன்-சாரதா தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். தந்தை சதாசிவன் தமிழார்வம் மிக்கவர், எழுத்தாளர். தாயார் சாரதா திருவல்லிக்கேணியில் மகளின் பெயரிலேயே ஜெயந்தி சிறுவர் பள்ளியை ஆரம்பித்து நடத்தினார். பெற்றோர் வழி ஜெயந்திக்கும் இளவயதிலேயே தமிழ்மீதும் எழுத்தின் மீதும் ஆர்வம் வந்துவிட்டது. பட்டிமன்றம், இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பது பொழுதுபோக்கானது. தேடித்தேடிப் புத்தகங்கள், பத்திரிகைகளை வாசிக்கத் துவங்கினார். தனக்குப் பிடித்ததைப் பற்றி வாசகர் கடிதங்களை ஓ.எஸ். ஜெயந்தி என்ற பெயரில் எழுதியனுப்ப அவை பிரசுரமாயின. அதுவே எழுதுவதற்குத் தூண்டுகோலானது.

ஒருமுறை பள்ளி விழாவிற்கு குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா தலைமை தாங்கியபோது அவர் முன்னிலையில் அவரது பாடல்களை ஆடிப்பாடி, அவரிடமிருந்து பரிசுபெற்றார். தொடர்ந்து பல விழாக்களில் வள்ளியப்பா கலந்துகொண்டு ஜெயந்தியை ஊக்குவித்தார். ஜெயந்தி தனது சகோதரிகளுடன் இணைந்து வள்ளியப்பாவின் இலக்கியத் தொண்டைப் பாராட்டும் வகையில் நடந்த விழாவில் அவரது பாடல்களை மையமாக வைத்துக் கதாகாலட்சேபம் செய்தார். டி.கே. சண்முகம், கொத்தமங்கலம் சுப்பு உள்ளிட்டோரின் பாராட்டைப் பெற்றது அந்நிகழ்ச்சி. இவையெல்லாம் குழந்தை இலக்கியத்தின் மீதான ஜெயந்தியின் ஈடுபாட்டிற்குக் காரணமாயின.

வளர, வளர எழுத்தார்வம் சுடர் விட்டது. தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகையில் திரு. நாகராஜனுடன் திருமணம் நிகழ்ந்தது. குழந்தைகள் பிறந்ததும் தான் பார்த்து வந்த தனியார் நிறுவனப் பணியை விட்டு விலகி, தாயின் வழியில் அம்பத்தூரில் சத்தியமூர்த்தி வித்யாஷ்ரம் எனும் பள்ளியை ஆரம்பித்து நடத்தினார். பள்ளிக் குழந்தைகளுக்குக் கற்றுத்தரும் பொருட்டு வள்ளியப்பா பாடல்களுடன், தானும் சில பாடல்களை எழுதிக் கற்றுத்தந்தார். அவற்றைத் தொகுத்து "முத்துச்சரம்" என்ற தலைப்பில் நூலாக்கி வெளியிட்டார். மலேஷியாவைச் சேர்ந்த சுஜாதா என்னும் சிறுமி வெளியிட்ட 'பூஞ்சிட்டின் பூங்கொத்து' என்னும் இசைப்பேழையில் ஆலந்தூர் கோ. மோகனரங்கன், செல்வக் கணபதி போன்றோரது பாடல்களுடன் இவரது பாடல்களும் இடம்பெற்றன. வள்ளியப்பா மீது கொண்ட பற்றால் 'பிள்ளைக் கவியரசர் வள்ளியப்பா' என்ற தலைப்பில் புதுக்கவிதைகளில் கவிஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார். தொடர்ந்து பாடல், கதை, நாடகம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, தன்னம்பிக்கை நூல் எனப் பலவும் எழுதினார். பத்திரிகையாளராகவும் பணிபுரிந்திருக்கிறார் ஜெயந்தி நாகராஜன். ஃபிலிமாலயா இதழுக்காக பிற வாசகிகளுடன் இணைந்து நடிகர் கமல்ஹாஸனை நேர்காணல் செய்ததை மறக்கமுடியாத அனுபவம் என்கிறார். கவிஞர் வைரமுத்துவின் "அந்தி மழை பொழிகிறது.." பாடலுக்காக தினமணி கதிரில் எதிர்விமர்சனங்கள் வந்த சமயம், இவர் ஆதரவுக் குரலாகக் கடிதம் எழுதி அனுப்ப அது பிரசுரமானது. தொடர்ந்து கவிஞர் வைரமுத்துவுடன் அறிமுகம் ஏற்பட்டது. அது குடும்ப நட்பாக இன்றளவும் தொடர்கிறது. தமிழின் முதல் பெண் நீதிபதியான பத்மினி ஜேசுதுரையை பத்திரிகைக்காக பேட்டிகண்ட முதல் பெண்மணியும் இவரே!

தமிழார்வத்தாலும், கணவர் தந்த ஊக்கத்தாலும் முதுகலை தமிழ், ஆய்வியல் நிறைஞர் பட்டங்களைப் பெற்றார். இந்நிலையில் கணவருக்கு மதுரைக்கு மாற்றலாகவே, நடத்திவந்த பள்ளியைத் தன் தோழியின் பள்ளியுடன் இணைத்துவிட்டு மதுரை சென்றார். அங்கே செந்தமிழ்க் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகப் பணியாற்றினார். முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற உந்துதலால் பணியாற்றிக் கொண்டே பகுதிநேர ஆய்வு மாணவியாகத் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். "அழ. வள்ளியப்பாவின் படைப்புக்களில் வாழ்வியல் அறங்கள்" எனும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டார். கல்லூரிப் பேராசிரியர் திரு. சு. விஜயன் அவர்களது வழிகாட்டலில் முனைவர் பட்டம் பெற்றார். வள்ளியப்பாவின் படைப்புக்களில் தனிமனித அறம், சமுதாய அறம், இறை மற்றும் அரசியல் அறம் ஆகிய தலைப்புகளில் இவர் ஆய்வு செய்தார். சங்க இலக்கிய ஆய்வுகளே மிகுதியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சூழலில் இவரது ஆய்வு பலராலும் பாராட்டப்பட்டது.

Click Here Enlargeபிறதுறைகளிலும் இவர் வல்லவர். வானொலியில் நடிக்கக் குரல் தேர்வில் தேர்ச்சிபெற்றுப் பல நாடகங்களில் நடித்துள்ளார். சி.ஐ.டி. சகுந்தலா, நாடக நடிகர் ப்ரசன்னா, ஜெயகுமார், க்ரேஸி குழுவினைச்சார்ந்த ரமேஷ் எனப் பலருடன் இணைந்து நடித்துள்ளார். தொலைக்காட்சியிலும் இவரது பங்களிப்பு அதிகம். சென்னைத் தொலைக்காட்சியின் மனைமாட்சி பகுதியில் பலரை நேர்காணல் செய்துள்ளார். பல கவியரங்கங்களில் கவிதை வாசித்துள்ளார். யு.எம். கண்ணனுடன் இணைந்து இவர் இடம்பெற்ற "உரைகல்" நிகழ்ச்சி புகழ்பெற்றதாகும். ஒளியும், ஒலியும் நிகழ்ச்சிக்கான முக்கிய விருந்தினர்கள், அதற்கான கருத்துரை போன்றவற்றிலும் இவர் பங்காற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்றான, பெப்ஸி உமா நடத்திய "ஸ்டார் ஷோ" நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பேட்டிக்கான வினாக்களைத் தயாரிப்பவராகவும் பங்களித்துள்ளார். கலைஞர், ஜெயா, பொதிகை தொலைக்காட்சி போன்றவற்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுள்ளார். லண்டன் டிவியான வெக்டோன், சிஐஐ டிவியிலும் சிறப்பு விருந்தினராகப் பங்குபெற்றுள்ளார்.

'டயானா வேல்ஸ்தேசத்துத் தேவதை', 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்', 'ஹெலன்கெல்லர்: அதிசயப்பெண்', 'குயிலே கவிக்குயிலே: கவிக்குயில் சரோஜினி நாயுடு', 'ரேடியம் மேரி க்யூரி', 'சங்ககாலப் பெண் புலவர்கள்', 'புதுமைப்பெண் இந்திரா', 'மங்காப்புகழ் பெற்ற பெண் திலகங்கள்', 'ஒரு கதாசிரியரின் கதை' (ஹாரி பாட்டர் கதைகளை எழுதிய ஜே.கே. ரோலிங்கின் வாழ்க்கை வரலாறு) போன்றவை இவரது குறிப்பிடத்தகுந்த நூல்களாகும். 'காவியத் தலைவி கண்ணகி' (நாடகம்), 'குறுந்தொகையில் ஒரு சிறுகதை' (குறுநாவல்) போன்ற படைப்புகளையும் தந்திருக்கிறார். பாரதி புகழ் பரப்பும் 'வானவில் பண்பாட்டு மையம்' பற்றி ஒரு நூலைச் சமீபத்தில் எழுதியிருக்கிறார். கம்பனைப்பற்றி எழுதியுள்ள நூல் விரைவில் வெளியாக உள்ளது. 'இலக்கிய நாடகங்கள்' நடப்பாண்டில் மதுரை நாயக்கர் கல்லூரியில் மாணவர்கட்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகமும், இந்திய ஆய்வியல் துறை மலேயாப் பல்கலைக்கழகமும் இணைந்து வெளியிட இருக்கும் 'வாழும் படைப்பாளர்கள்' நூல்வரிசையில், இவருடைய வாழ்க்கை வரலாற்றை மதுரை செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியை முனைவர் பூங்கோதை எழுதியுள்ள நூல் வெளியாகவிருக்கிறது. இதுவரை அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார் ஜெயந்தி. முத்துக்கமலம் இணையதளத்தில் தொடர்ந்து இவரது படைப்புக்கள் வெளியாகி வருகின்றன. தினமணி, கதிர், அமுதசுரபி, லேடீஸ் ஸ்பெஷல் எனப் பல பத்திரிகைகளில் எழுதி வருகிறார். அழ.வள்ளியப்பா, நா. பார்த்தசாரதி, இந்திரா செளந்தராஜன், பட்டுக்கோட்டை பிரபாகர், வாசந்தி, தேவிபாலா, அனுராதா ரமணன் போன்றோர் இவரைக் கவர்ந்த எழுத்தாளர்கள்.

Click Here Enlargeவள்ளியப்பா இலக்கிய விருது, கவிதை உறவு வழங்கிய டாக்டர் மு.வ. நினைவு விருது, புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் 'எழுத்துச் சுடர்' , உரத்தசிந்தனையின் ஜீவி விருது, சென்னை கிழக்குத் தாம்பரம் அரிமா சங்கம் வழங்கிய சிறந்த நல்லாசிரியர் விருது உட்படப் பல பெருமைகளைப் பெற்றுள்ளார்.

ஓய்வு நேரத்தில் அருகிலுள்ள பள்ளிகளில் மாணவ மாணவியருக்கு நன்னெறிக்கதைகள், பாடல்கள் கற்றுத் தருகிறார். மகளிருக்கான அமைப்புகள் மூலம் பல கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகளில் உரையாற்றுகிறார். இவரது பெயரில் 'ஜெயந்தி சிறுவர் சங்கம்' 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. அதன்மூலம் குழந்தைகளின் ஆற்றலை மேம்படுத்துவதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார். "குழந்தை இலக்கிய உலகில் பெயர் சொல்லும் விதமாக இன்னும் அதிகப் பங்களிப்புச் செய்யவேண்டும் என்பதே எனது ஆசை" என்கிறார். கணவர் திரு. எஸ். நாகராஜன் ஸ்ரீசக்ரா டயர் நிறுவனத்தில் AGM ஆகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது பணி ஓய்வு பெற்றிருக்கும் ஜெயந்தி நாகராஜன், கணவருடன் சென்னையில் வசித்து வருகிறார்.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com