ஹம்சத்வனி: இளையோர் இசைவிழா
ஜூன் 17, 2017 அன்று, வெஸ்ட்லேக்கில் உள்ள ஒயிட் ஓக் எலிமெண்ட்ரி பள்ளியில் ஹம்சத்வனி கர்நாடக சங்கீத அகாடமி இளையோர் இசைவிழா ஒன்றை நடத்தியது. பல பாடகர்கள் பங்கேற்றுத் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். அவர்களில் சிலரைச் சந்திக்கலாமா?

மனமோஹன் Ph.D. செய்ய வந்திருக்கிறார். இவர் மைசூர் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகளின் பேரன். சங்கீதத்தில் வித்வத், பாடும்படியான குரல், கற்பனை ஸ்வரங்கள் பாடும் திறமை அமையப் பெற்றவர். சுமார் 52 நிமிடங்கள், இன்னும் கொஞ்சம் கேட்கலாம் என்ற விதத்தில் அழகாகப் பாடினார்.

மயூரிவாசன் பாடிய கீரவாணி ராக ஆலாபனை, நிரவல் ஆகியவற்றில் அவரது வித்வத்தை முழுமையாக அறிய முடிந்தது. சீனிவாசன் பாலாஜி பாடிய பாடல்களில் சிறப்பாக அமைந்த 'கர்ண ரஞ்சனி' கீர்த்தனை பெயருக்கேற்பக் காதுக்கு இனிமையாக அமைந்தது. சாயி சகோதரிகளுக்கு 16 வயதிருக்கலாம். ஆனால் இவர்கள் பாடிய விதம் 56 வயது அனுபவம் கொண்டதாகத் தோன்றியது.

ஹம்ஸத்வனி அகாடமியை நடத்தும் ஸ்ரீமதி இந்து நாகராஜன் பொறியியல் பட்டதாரி. இசைக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இல்லத்தரசி. இவருக்கு முழு ஆதரவு இவரது கணவர் நாகராஜன்.

இந்து பார்த்தசாரதி,
தென் கலிஃபோர்னியா

© TamilOnline.com