அரங்கேற்றம்: அனகா நாதன்
செப்டம்பர் 2, 2017அன்று லயத்வனி அகாடெமி நாட்டியப் பள்ளி மாணவி அனகா நாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம் உட்சைடு உயர்நிலைப்பள்ளி அரங்கில் நடந்தேறியது. 13 வயது அனகா, குரு திருமதி. ஸ்நிக்தா வெங்கட்ரமணியின் மாணவி.

மல்லாரியுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. குரு வந்தனந்துக்குப் பின்னர் வந்த லயக் கவிதை, ஒரு ராப் (rap) பாடலைப் போல் மனதைக் கவர்ந்தது. அடுத்து, பிரம்மனின் படைப்பைப் போற்றும் துரித நடன முத்திரைகள் அருமை. பிறகு வந்த ராகமாலிகா வர்ணத்தில் சிவனைப் போற்றி ஆராதித்து, அனகா காண்போரின் உள்ளத்தை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினார். ஆடக் கடினமான உருப்படி கண்ணகி. அதில் அனகாவின் ஆளுமை புதுமைப் பெண்ணாக வெளிப்பட்டது. கணவன் இல்லாவிடினும் பெண் என்பவள் மங்களம் நிறைந்தவள்தான் என்ற கருத்தை அதில் தெளிவாக வலியுறுத்தினாள். அடுத்து மயில்வாஹனன் முருகனின் புகழையும் எழிலையும் வெளிக்கொணர்ந்த அனகாவின் நாட்டியம் அற்புதம்.

'சின்னஞ்சிறு கிளியே' பாடலுக்குக் கண்ணம்மாவிடம் கொண்ட தூய அன்பை வெளிப்படுத்திய விதம் உன்னதம். இறுதியாகத் தில்லானாவில் அனகாவின் நாட்டிய மேடை எங்களின் மனமேடை ஆனது. திருமதி ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), திருமதி. ஸ்நிக்தா வெங்கட்ரமணி (நட்டுவாங்கம்), திரு. தஞ்சாவூர் R. கேசவன் (மிருதங்கம்), திரு. அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), திரு. விக்ரம் ரகுகுமார் (வயலின்) ஆகியோர் நடனத்துக்குச் சிறப்பாகத் துணைநின்றனர்.

சுஜாதா கோபால்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com