அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்கம்
செப்டம்பர் 9, 2017 அன்று அமெரிக்கத் தமிழ் தொழில்முனைவோர் சங்க (American Tamil Entrepreneurs Association) வடகிழக்குப் பிரிவின் துவக்க விழா எடிசன், நியூ ஜெர்சியில் உள்ள மிராஜ் பேங்க்வெட் ஹாலில் விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் இருநூறுக்கு மேற்பட்ட தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டனர். ATEA துணை நிர்வாகி மற்றும் வடகிழக்குப் பிரிவின் தலைவரான திரு. ராம் நாகப்பன் மற்றும் நிர்வாகிகள் திரு. வெங்கி சடகோபன், திரு. கிருஷ்ணா சாரி ஆகியோர் சிறப்பான முறையில் இவ்விழாவை நடத்தினார். பிரபல நடிகர் மற்றும் 'அகரம்' கல்வி அறக்கட்டளையின் அறங்காவலரான திரு. சூர்யா சிவகுமார் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

ராம் நாகப்பன், ATEA வணிக வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டதொரு லாப நோக்கற்ற அமைப்பு என்றும் அதன் செயல்பாடுகள் நம் சமுதாயம் பயன்பெறும் வண்ணமே அமைந்திருக்கும் என்றும் கூறினார். அந்த வகையில் தொழிலதிபராக வெற்றிபெற்றுச் சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தும் சூர்யாவை முக்கிய விருந்தினராக அழைத்தது மிகப் பொருத்தம்.

வணிகக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள, ஆலோசனை பெற, ஆரம்பநிலை உதவி பெற, முதலீடு செய்ய, அமெரிக்கத் தமிழரிடையே தொழில் தொடங்கும் சிந்தனையைத் தூண்டவேண்டும் என்ற கருத்தில் ATEA துவங்கப்பட்டது. என்றாலும் விருப்பமுள்ள பிற மொழியினரும் உறுப்பினர் ஆகத் தடையில்லை. சங்கத்தின் செயல் திட்டங்களை educate, empower, elaborate, expand, engage என்ற ஐந்து சொற்களில் விவரிக்கலாம். இதன் கொள்கைகள் என்றும் பெண்கள், இளைஞர்களின் முன்னேற்றத்தைச் சார்ந்தே இருக்கும். விரைவில் அனைத்து இந்திய சமுதாயங்களும் பயன்பெறும் வண்ணம் விரிவாக்கப்படும். மிட்வெஸ்ட்டில் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.

துவக்க விழாவிலேயே ஐம்பது ATEA உறுப்பினர்கள் அகரம் அறக்கட்டளைக்கு $7,100 நன்கொடை அளித்தனர். நிறைவாக, ராம் நாகப்பன் தமிழ் அன்பர்கள் நிறுவனங்கள் தொடங்க, நடத்த, செழிக்கச் செய்ய நமது சங்கத்தின் link, learn, lead என்ற தாரக மந்திரம் உறுதுணையாக இருக்கும் என்று கூறினார்.

சாந்தி சிதம்பரம்,
நியூ ஜெர்சி

© TamilOnline.com