தேவை, ஒரு ஏடிஎம் மெஷின்!
"ஹரிதா, அந்த மாம்பழக்கலர் புடவை உனக்குப் பொருத்தமா யிருக்கும்; அதை எடுத்துக்கோயேன்."

"இல்லம்மா, மெர்க்குரி கலர், நீலபார்டர் இன்னும் நல்லா இருக்கும்மா. சித்தி நீங்க என்ன சொல்றீங்க?"

"என்னைக் கேட்டால் அக்கா எடுத்ததே நல்லாயிருக்காப்பலே இருக்கு."

ஐந்தாறு பெண்மணிகள் புடவைக்கடைக்குள் நுழைந்துவிட்டால் கேட்க வேண்டுமா? ஆளுக்கொரு அபிப்ராயம், தலைக்குத் தலை தங்கள் ரசனையின் வெளிப்பாடு என்று கடையையே கவிழ்த்துப் போட்டுக்கொண்டிருந்தனர். இத்தனை கோலாகலங்களுக்கிடையில் ஹரிதாவின் கைப்பேசி சிணுங்கியது. கூட இருந்தவர்களின் குறும்புப் பார்வையைத் தவிர்த்துவிட்டு தனக்கு நிச்சயமாகி இருந்த சுதாகருடன் பேசலானாள்.

"என்ன ஹரிதா மேடம், புடவைக் கடையைக் கலக்கிக்கிட்டிருக்கீங்களா? நானே வந்து செலக்ட் பண்ணணும்னு ஆசையா காத்திருந்தா, திடீர்னு சேர்மன் ப்ராஜெக்ட் மீட்டிங்னு உட்கார்த்திட்டார். கிடைச்ச கேப்பில பேசறேன். ஒண்ணு பண்ணமுடியுமா? புடவைகளை ஃபோனில் படமெடுத்து அனுப்புங்க, நான் செலக்ட் பண்ணி சொல்றேன்" என்று தன் ஆசையைத் தெரிவித்தான் சுதாகர்.

அடுத்த அரைமணி நேரம் பல புடவைகளைப் பார்த்தபின் ஒருவாறாக ஒரு புடவையைத் தேர்ந்தெடுத்தான். பணம் கொடுத்து முடிந்ததும், களைத்துச் சோர்ந்திருந்த பெண்மணிகள் அருகிலிருந்த உணவகத்தை முற்றுகையிட்டனர்.

"என்ன அத்தை ஆறு பேர் ஒரு புடவை எடுத்து, அலுத்துட்டீங்களா?" என வினவியவாறே ஒரு இருக்கையை இழுத்துப் போட்டுக்கொண்டு வந்தமர்ந்தான் சுதாகர். எல்லோருக்கும் அவரவர் விரும்பிய பலகாரங்களை ஆர்டர் செய்தவன், தனக்கும் ஹரிதாவுக்கும் இரண்டு ஐஸ்க்ரீம் வரவழைத்துக் கொண்டான். "இப்பவே மாப்பிள்ளைக்கு ஹரிதாவோட டேஸ்ட் நல்லாத் தெரியுதே; அவ எப்பவுமே ஐஸ்க்ரீம்தான் ஆர்டர் செய்வா" என்று கிண்டலடித்தாள் அவள் அக்கா. உணவகத்தையும் சுதாகரின் பர்ஸையும் ஒருவழி பண்ணிவிட்டு, சுதாகரும் ஹரிதாவின் குடும்பத்தினரும் பிரிந்து சென்றனர்.

சுதாகர் வீட்டில் நுழையும்போதே, "என்னடா மாப்ளே, நிச்சயத்துக்கு முன்னமே ரவுண்ட்ஸா? ஜமாய்!" என்றபடி எதிர்கொண்டான் அவன் சித்தப்பா மகன் சுபாஷ்.

"அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை, அவங்க வீட்டில் நிச்சயதார்த்தப் புடவை எடுக்கப் போனாங்க. செலக்ட் பண்ணப் போனேன் அவ்வளவுதான்" என்று இளம்சிரிப்புடன் அவனை வரவேற்றுப் பேசியவண்ணம் உள்ளே நுழைந்தான். "என்னப்பா உன் வுட்பிக்கு ஐடி லைனில் வேலையாமே; பெரியம்மா சொன்னாங்க. எந்தக் கம்பெனி?" என்று விசாரித்தான். சுதாகரும் கம்பெனியின் பெயரைக் கூறினான்.

"அதுவா? அந்தக் கம்பெனி இப்போ அவ்வளவு நல்லா ஓடலைன்னு சொல்றாங்களே. போன மாசம்கூட என் ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேருக்கு பிங்க் ஸ்லிப் குடுத்தாங்களாம்" என்று கூறினான் அவன்.

"என்னடா சுதா, இவன் இப்படிக் கல்லைத் தூக்கிப் போடறான்? நாம ஹரிதாவைப் பண்ணிக்க ஒத்துக்கிட்டதே அவ சம்பாத்தியம் பார்த்துதானே. அவள் சம்பளத்தைச் சேர்த்து வச்சு இந்து கல்யாணத்தை அடுத்த வருஷமாவது முடிச்சுடலாம்னு இருக்கோம். நடக்காது போல இருக்கே" எனக் கவலையுடன் வினவினாள் மரகதம், சுதாகரின் தாய்.

"நீங்க அனாவசியமா கவலைப்படாதீங்கம்மா. அவங்களை வேலையை விட்டு அனுப்பினதுக்கு எத்தனையோ காரணம் இருக்கும். ஹரிதாவுக்கு அப்படி ஏதும் ஆகாது" எனத் தாய்க்கு ஆறுதல் கூறினாலும் சுதாகரின் அடிமனத்தில் கவலை முளைவிட ஆரம்பித்தது. 'ஹரிதாவிடம் இதைப் பற்றிக் கேட்பது சரியாயிருக்குமா? நிச்சயதார்த்தத்துக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் இது என்ன புதுப்பிரச்னை?' என அவன் எண்ணம் ஓடியது. ஆனாலும் இதைத் தெளிவுபடுத்திக் கொள்ளாமல் நிம்மதியாக இருக்க முடியாதே!

மறுநாள் ஹரிதாவின் கம்பெனி வாசலில் அவளுக்காகக் காத்திருந்தான் சுதாகர். வேலை முடிந்து வந்த அவள் அவனைக் கண்டதும் "வாங்க! ஆஃபீசுக்கே வந்து பேசும்படி ஏதாவது அர்ஜென்ட் விஷயமா?" என வரவேற்றாள். அவளை அருகில் இருந்த காஃபி ஷாப்புக்கு அழைத்துச் சென்று காஃபி அருந்தியபடியே, "ஹரிதா, உங்க கம்பெனியில் ரெண்டு பேரை வேலையிலிருந்து எடுத்துட்டாங்களாமே. என் உறவுப்பையன் சொன்னான். என்ன பிரச்னையாம்" என நாசூக்காகக் கேட்டான்.

"ஐடி கம்பெனிகளிலே ஹயரிங்கும் பயரிங்கும் சர்வ சாதாரணம் தானே. எங்க ஆஃபீஸ் மட்டும் விதிவிலக்கா? எப்ப வேணாலும் யாருக்கு வேணாலும் பிங்க் ஸ்லிப் கொடுத்துடுவாங்க" எனப் பதிலிறுத்தாள்.

அவள் சொன்னது எந்த இட்சிணியின் காதில் விழுந்ததோ, மூன்றாம் நாளே ஹரிதாவுக்கும் ஸ்லிப் கொடுக்கப்பட்டது!

*****


"அண்ணி கிட்டேயிருந்து ஃபோன்" ஏலம் போட்ட தங்கையின் கையிலிருந்து அவசரமாகப் பிடுங்கினான் சுதாகர். ஒரு குறுஞ்செய்தியாகத் தனக்கு மூன்றுமாத நோட்டீஸ் கொடுத்து விட்டார்கள் என அறிவித்தாள் ஹரிதா. ஒரு கணம் மலைத்து நின்றவன், "என்ன ஹரிதா, இப்படிக் குண்டைப் போடுறீங்க?" என அதிர்ச்சியுடன் வினவினான்.

"வேலையில் சேரும்போதே இது ஒருநாள் நடக்கும்னு எதிர்பார்த்துதான் நுழைகிறோம். என்ன, கொஞ்சம் சீரியஸா வேலை தேடணும்; அவ்வளவுதான்" என அலட்டிக்கொள்ளாமல் கூறினாள் ஹரிதா.

பின்னாலேயே வந்து நின்ற மரகதம், "என்னடா சொல்றா? ஏதோ வேலை தேடற மாதிரிப் பேசினாள் போலிருக்கே?" எனக் கவலை மிகக் கேட்டாள்.

"ஒண்ணுமில்லை, ஹரிதாவுக்கு மூணு மாச நோட்டீஸ் குடுத்திட்டாங்களாம். வேறு வேலை தேடணும்கிறா" என்று நிலைமையை விளக்கினான் சுதாகர்.

மரகதம் சற்று யோசித்துவிட்டு, "இப்ப என்ன பண்றதுடா? நல்லவேளை! நிச்சயம்னு ஒண்ணும் பண்ணலை. பேசாமல் அவங்களிடம் வேறு இடம் பார்க்கச் சொல்லிடலாமா?" என்று கேட்டாள்.

"ஏம்மா, இந்தக் கம்பெனி விட்டால் அவளுக்கு வேறு வேலையே கிடைக்காதா? அவளும் தேடிக்கிட்டுதான் இருக்காளாம்" என்ற சுதாகரின் குரலில் சுரத்தே இல்லை.

"ஆமாம், வேலையைக் கூறுகட்டி வெச்சு காத்திருக்காங்களாம், இவ போய் கூடையோட அள்ளிக்கிட்டு வரப்போறாளா? இந்த வேலையை நம்பி எத்தனையோ பிளான் வெச்சிருந்தேனே" தொடர்ந்தது புலம்பல்.

"ஏம்மா, நீங்கதானே வேறு இடத்தையெல்லாம் தள்ளிட்டு ஐடி பெண்ணே வேணும்னு இந்த இடத்துக்குச் சம்மதம் தெரிவிச்சீங்க. நாலு நாளிலே நிச்சயத்தை வெச்சுக்கிட்டு, அவங்க வீட்டிலே எல்லா ஏற்பாடும் செஞ்சிட்டிருக்காங்க. இப்பப் போய் மாத்திப் பேசறீங்களே. இது நல்லாவா இருக்கு?"

"எல்லாம் நான் அவங்ககிட்டே பேசற விதமாய் பேசறேன். எதெதை எப்படி செய்யணும்னு எனக்குத் தெரியும் நான் எது செஞ்சாலும் நாலையும் யோசிச்சுத்தான் செய்வேன்" என்று அவன் வாயை அடக்கிவிட்டாள் மரகதம்.

அரை மணியில் ஹரிதாவின் வீட்டை அடைந்தவள் வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்த ஹரிதாவிடம் "என்னம்மா ஹரிதா, உனக்கு ஏதோ வேலை போய்ட்டுதுன்னு சுதா சொன்னானே, நிஜமா?" என்று கேட்டாள்.

அதற்குள் ஹரிதாவின் தந்தை, "ரெண்டு மாசமாவே இவங்க கம்பெனியில் ஆள்குறைப்பு செய்றாங்கன்னு சொல்லிட்டிருந்தா. இப்படி நடக்கலாம்னு எதிர்பார்த்தே நிறைய அப்ளிகேஷன் போட்டிருக்கா. சீக்கிரம் நல்ல வேலை கிடைச்சுடும்" என்றார்.

"அப்ப, பெண் பார்க்க வந்தபோதே இந்தமாதிரி நடக்கலாம்னு தெரிஞ்சும் எங்ககிட்ட மறைச்சுட்டீங்களா?" என்று கோபமாகக் கேட்டாள்.

"மறைக்க என்ன இருக்கு இதுல? இந்த லைன்ல இருக்கும் எல்லாருக்குமே எதற்கும் தயாரா இருக்கணும்னு தெரியும். அப்படி வேலை போகலாம் என்று ஊகம் இருந்தால் உடனே வேறு வேலை தேட ஆரம்பிப்பதும் சில நாளிலேயே கிடைப்பதும் சகஜம்தானே. உங்கள் பிள்ளைக்கும் இந்த நிலவரமெல்லாம் தெரிஞ்சிருக்குமே" இது ஹரிதாவின் அப்பா.

“அப்ப ஒண்ணு செய்யலாம்; இப்ப அவசரடியிலே நிச்சயம் ஒண்ணும் பண்ணவேண்டாம். வேலை கிடைச்சதும் வேறு நாள் பார்த்து வெச்சுக்கலாம்" என்ற மரகதத்தின் பேச்சு, இந்த சம்பந்தத்தைத் தவிர்க்க எண்ணுவதை மறைமுகமாகத் தெரிவித்தது.

இதுவரை மௌனம் காத்த ஹரிதா முன்வந்து "யார் கண்டது, வேறு வேலை கிடைச்சுக் கல்யாணம் ஆகி நான் அங்கு வாழ வந்தப்புறம் அந்த வேலையும் போகலாம்; திரும்பத் தேட வேண்டியிருக்கும். உங்களுக்கும் டென்ஷனாயிடும். அந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுத்துக்கிட்டு நீங்க என்னைக் கல்யாணம் செய்துக்க வேண்டாம். நிரந்தர வேலையிருக்குற, நிலையா சம்பளத்தைக் கொண்டுவந்து கொடுக்குற இடமாவே பார்த்துக்கங்க" என்று பொரிந்து தள்ளிவிட்டுக் கிளம்பினாள்.

அவள் படி இறங்கும்போதே "ஹரிதா, மாமா, அம்மா சொல்றதை எண்ணித் தப்பா நினைக்காதீங்க. அம்மா, நீங்களும் கொஞ்சம் பொறுமையா இருங்க. பேசித் தீர்த்துக்கலாம்" என்றபடி அலறி அடித்துக்கொண்டு நுழைந்தான் சுதாகர்.

"மிஸ்டர் சுதாகர், உங்கம்மாவுக்கு ஒரு மருமகள் வேண்டாம். ஒரு ஏடிஎம் மெஷின்தான் தேவை. அவங்களை மீறி நீங்க என்னை மணக்க எண்ணினால் அது சரிவராது. நீங்க போகலாம்" என்றபடி தெருவில் இறங்கி நடக்கலானாள்.

வரப்போகிறவள் பார்க்கும் உத்தியோகமும், கொண்டுவரும் சம்பளமும் திருமணத்தை நிர்ணயிக்கும் அளவுகோலாக மாறிவிட்டதை எண்ணி, கைநழுவிப் போன கனவுகளுடன், மனம் நொந்து நின்றான் சுதாகர். இப்போதெல்லாம் மரகதம் உஷாராக அரசுப்பணி, வங்கிவேலை என்று உள்ள பெண்களையே தேடிக்கொண்டு இருக்கிறாள்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com