பழமைபேசி எழுதிய 'செவ்வந்தி'
பழமைபேசி தென்றல் வாசகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். அவரது கவிதை, கதைகள், செய்திக்குறிப்புகள் எனப் பலவும் தென்றலில் வெளியாகியுள்ளன. அவர் எழுதிய 'செவ்வந்தி' சிறுகதைத் தொகுப்பு சென்ற மாதம் புலவர் செந்தலை நா. கவுதமன் தலைமையில் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. அந்நூலில் 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பதினோரு கதைகள் அமெரிக்காவையும் எஞ்சியவை தமிழகத்தையும் கதைக்களனாகக் கொண்டவை.

அமெரிக்கத் தமிழ்ச் சூழலிலும் தாயகச் சூழலிலும் தமிழர் வாழ்வில் இடம்பெற்று, மற்றவர் பார்வைக்கு எளிதில் சிக்காத சிறுசிறு அசைவுகளைக் கூர்ந்து நோக்கி, எந்தவொரு அலங்காரமுமில்லாத எளிய நடையில் காட்சிப்படுத்தியுள்ள பாங்கு, வாசிப்போருக்கு காட்சிகளைக் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. உணர்வுகளின் வாயிலாகக் கதையைச் சொல்லாமல், தனது லாகவமான நடையால் நம்மைக் கைபிடித்து இழுத்துச் செல்கிறார் ஆசிரியர். கதைக்குக் கதை மாறுபட்ட கதைக்களனைத் தேர்ந்தெடுத்ததோடு கதைசொல்லும் முறையிலும் பல்வேறு வடிவங்களைக் கையாண்டிருக்கிறார்.

மூத்த இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் அவர்களால் பரிசுக்குத் தெரிந்தெடுக்கப்பட்டதும், வல்லமை மின்னிதழில் முதலிடம் பெற்றதுமான 'மணவாளன்', நூலின் முதற்கதையாக இடம் பிடித்திருக்கிறது. கவிதை நயத்தோடு அமெரிக்க வாழ்வியற் கூறுகளால் பின்னப்பட்ட இக்கதை, ஆழ்ந்த நேசத்தின் மறுபக்கத்தை படம்பிடிக்கிறது. 'கொழுகொம்பு' கதையில், புலம்பெயர்ந்த மக்கள், வேகமான, இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்து எப்படித் தம்மை விடுவித்துக் கொள்கின்றனர் என்பதையும் அதன் தேவையையும் இயல்பாகச் சொல்கிறது.

"பழமைபேசியின் கதை கவிதையின் ஆழம் கொண்டது. வரலாற்றில் கவித்துவமுடைய கதைகளே நின்று வாழ்கின்றன" என்கிறார் எழுத்தாளர் நாஞ்சில் நாடன். பல்வேறு இதழ்களில் வெளியான, 'செவ்வந்தி', 'செல்லி', 'சிலந்திவலை' போன்ற கதைகள் கொங்குநாட்டு வாழ்க்கையையும் வட்டார மொழியில் மனத்தைக் கொள்ளை கொள்ளும்படியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. அதே சமயம் சமூகத்தின் முரண்பட்ட பழக்கவழக்கங்களை நேரடியாகச் சொல்லாமல் வாசகர்களின் சிந்தனையூடாகப் புலப்படும்படியாகத் தீட்டப்பட்டிருக்கின்றன. 'அம்மணி', 'பட்டிநோம்பி' போன்ற கதைகள் கிராமிய வாழ்க்கையைத் துல்லியமாகப் படம் பிடிக்கின்றன. இவை நாவலாகவும், குறும்படமாகவும் விரிக்கத் தக்கவை. இதைத்தான், "பழமைபேசி தன் அனுபவங்களிலிருந்து ஒரு புதிய உலகை நமக்குப் படிக்கத் தருகிறார். அந்நியச் சூழலில் தொடர்ந்து இருந்தபோதிலும், பிறந்த மண்ணின் வாசம்விடாது, அதேசமயம் வாழும் அந்நிய மண்ணின் ஆழ்ந்த அனுபவமிக்க வாழ்நிலைகளை எழுதியிருக்கிறார்" என்று குறிப்பிடுகிறார் வெங்கட் சாமிநாதன்.

'செவ்வந்தி' தொகுப்பில், எந்தக் கதைக்கு எது தேவையோ, எவ்வளவு தேவையோ அது மட்டுமே, அதற்கான அளவில் இருப்பது கதைகளுக்குச் சிறப்பைச் சேர்க்கிறது. பழமைபேசி நல்ல கதைசொல்லி என்பதற்குக் கதைகளுக்குள் நிறையத் தடயங்கள் இருக்கின்றன. தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே வாசகருக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தொட்டுக் காண்பிக்கின்றன.

வெளியீடு: அருட்சுடர்ப் பதிப்பகம், ஈரோடு (தொலைபேசி: +91 9894717185)
நூலாசிரியர் மின்னஞ்சல்: pazamaipesi@gmail.com

முனை. சத்யா உதயகுமார்,
தேனீ

© TamilOnline.com