நாடக விமர்சனம்: 'வாஷிங்டனில் வாசு'
2017 ஆகஸ்ட் 11-13 நாட்களில் சான் ஹோசே எவர்கிரீன் வேலி ஹைஸ்கூலில் 'பண்ணத வேஷா' குழுவினர் நாடகோத்சவம் ஒன்றை நடத்தினார்கள். இதில் பலமொழி நாடகங்கள் மேடையேறின. தமிழுக்கான பகுதியில், ஆகஸ்ட் 13 அன்று மாலை 4.30 மணிக்கு 'வாஷிங்டனில் வாசு' என்ற நகைச்சுவை நாடகம் இடம்பெற்றது. காஞ்சனா முரளி மேடைக்கதை எழுத, முரளி ஜம்பு இயக்கத்தில் நடந்த இந்த நாடகம் பலத்த வரவேற்பைப் பெற்றது. உண்மைச் சம்பவத்தை ஆதாரமாக வைத்து, நகைச்சுவை கலந்து இந்த நாடகம் நான்கே வாரத்தில் எழுதி, ஒத்திகை பார்த்து, மேடையேறியது ஒரு சாதனைதான்.

விரிகுடாப்பகுதியில் வாழும் வாசுவுக்கு, பிரதமர் நரேந்திர மோதியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. தன் மனைவி பூரணியோடு வாஷிங்டன் கிளம்புகிறார். இருவரிடையே நடக்கும் விவாதங்கள், அமெரிக்க வாழ்க்கையின் அன்றாடச் சலிப்புகள், வருகை தரும் உறவினர்களின் எதிர்பார்ப்பு எல்லாவற்றையும் கலந்து கலகலப்பாகச் சொல்கிறது நாடகம் வாசுவின் மறதி, பூரணியின் அதிகாரம், சம்பந்தி மாமியின் பாலக்காட்டுத் தமிழ் எல்லாவற்றையும் நடிகர்கள் சிறப்பாகச் செய்தனர். பெண்பார்க்க வரும் சங்கரும் வேலைதேடி வரும் சங்கரும் மாறிவிட அந்தக் குழப்பத்தில் ஒரே சிரிப்பு மழை. இறுதியில் வரும் மோதியின் இந்தி உரை ஏற்படுத்தும் கலாட்டாவும் உண்டு.

முக்கியப் பாத்திரங்களில் முரளி ஜம்பு, காஞ்சனா முரளி சிறப்பாக நடித்தனர். உடன் நடித்த வசந்த் பாலகரே, சுஜாதா கோபால், ஷங்கர் பிரசன்னன், ரமேஷ் சதியம், ராஜலஷ்மி சுப்ரமணியம், ரகு வெங்கடேஷ், பத்மராஜன், லக்ஷ்மி ராதாகிருஷ்ணன், கார்த்திக், அனுஷா எல்லோருமே பிரமாதமாக நடித்தனர். குழந்தை நட்சத்திரங்கள் கீர்த்தனா, வைஷ்ணவி கைதட்டல் பெற்றனர். வசந்தி, சந்திரசேகர், சூரஜ், சரண்யா, விஜய், பத்மராஜன், கார்த்திக் பல துறைகளை நிர்வகித்தனர். முருகன் முத்தையா பேராதரவு அளித்தது குறிப்பிடத் தக்கது.

காஞ்சனா முரளி,
சான் ஹோசே

© TamilOnline.com