FeTNA வழங்கும் தமிழ் விழா 2007
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை (FeTNA - Federation of Tamil Sangams of North America) வட கரோலினா தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து 'தமிழ் விழா 2007' என்பதை ஜூலை மாதத்தில் ராலே நகரத்தில் நடத்த உள்ளது.

இந்த விழாவில் தமிழகத்திலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் கலை, அரசியல், கல்வி மற்றும் பல துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்ப் பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் சேரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக வர உள்ளார்கள். திரை இயக்கத்தில் ஆர்வம் உள்ளோருக்குப் பயிற்சிப் பட்டறையொன்றை நடத்த உள்ளார்கள்.

பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அவர்களுடன் இணைந்து தமிழகத்தின் முன்னணி மெல்லிசைக்குழு லஷ்மன் ஸ்ருதி மாபெரும் இசை நிகழ்ச்சி ஒன்றை அளிக்கவுள்ளது. பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், 'Pop' ஷாலினி, மாலதி ஆகியோர் இதில் கலந்துகொண்டு பாடி மகிழ்விப்பர்.

இசைக்குயில் கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மகாகவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன் ஆகியோர் பாடல்களுடன் தேவாரம், திருவாசகம், சிலப்பதிகாரத்தில் ஆகியவற்றில் இருந்து பாடல்கள் இசைக்க உள்ளார்கள்.

நகைச்சுவைப் பேச்சாளர் திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம். தலைப்பு: 'புலம் பெயர்ந்து தமிழர்கள் காண்பது இன்பமா? இன்னலா?'

திருச்சிராப்பள்ளியில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்து திருக்குறள் புகழ் பரப்பிவரும் தமிழ் மாமணி முனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள் தலைமையில் சிறப்புக் கவியரங்கம் நடைபெறும். தலைப்பு: 'நிலம் என்னும் நல்லாள்'

சிறப்பு இலக்கியச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் ஒன்றும் நடைபெறும். அதில் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் 'பழம் பெரும் இலக்கியம் காட்டும் தமிழர் பண்பாடு' என்ற தலைப்பில் உரையாற்றுவார்கள். அதில் பங்கேற்க இருப்போர்:

பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட், தமிழ்ப் பேராசிரியர், கலிபோர்னியப் பல்கலைக்கழகம், பெர்க்லி
முனைவர் P. மருதநாயகம், முன்னாள் தமிழ்ப் பேராசிரியர், புதுச்சேரிப் பல்கலைக்கழகம்
வெ. இறையன்பு, IAS, செயலாளர், தகவல் மற்றும் சுற்றுலாத் துறை, தமிழக அரசு

இந்த ஆண்டும் Matrimonial Forum நடைபெறும். www.tamilmatrimonial.com இதை மிகச்சிறப்பாகக் கொண்டாட உள்ளது.

இவற்றைத் தவிரப் பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் வழங்கும் நடனங்கள், நாடகங்கள், குழந்தைகள் நிகழ்ச்சிகள்.

கீழ்க்கண்ட தமிழ்த் தேனிப் போட்டிகளும் உண்டு:

திருக்குறள் தேனி (திருக்குறள் ஒப்புவித்தல்)
சொற்பொழிவுத் தேனி
தமிழறிவுத் தேனி (Tamil Jeopardy)

அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிகள் ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் 'அமெரிக்கத் தமிழ்ப் பள்ளிச் சீரமைப்பு' என்கிற தலைப்பில் அனைத்துத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள்/ஆர்வலர்கள் கலந்துக் கொள்ளும் கலந்துரையாடல் நடைபெறும்.

வண்ணப்படங்களுடன், மனதைக்கவரும் கதைகள், கட்டுரைகள், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் சிறுகதைகள், முக்கியப் பிரமுகர்களின் பேட்டிகள், கவிதைகளுடன் மாநாட்டு விழா மலர் உருவாகிக் கொண்டிருக்கிறது மலர்!

இங்கேயே பிறந்து வளரும் தமிழ் இளைஞர்கள், தங்களது தமிழ்ப் பாரம் பரியத்தை அடையாளப் படுத்திக்கொள்ளும் வண்ணம் இம்மாநாட்டில் தாங்களாகவே தனி நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர். விவரங்களுக்கு www.ntyo.org

பிரபல மருத்துவர்கள் வழங்கும் தொடர் மருத்துவக் கல்வி கருத்தரங்கு (Continuing Medical Education) இடம் பெறுகிறது. மருதாணி (மெஹந்தி) வரைதல், நகைகள், ஆடைகள், புத்தகங்கள், தேநீர், சிற்றுண்டி ஆகியவற்றுக்கான கடைகள் உண்டு.

உங்கள் பெயரைப் பதிவு செய்து, பயணத்துக்காக இன்றே திட்டமிடுங்கள். மேலும் விவரங்களுக்குப் பார்க்க வேண்டிய தளம்: www.fetna.org

இந்த மாநாட்டின் கோட்பாடு 'புலம் பெயர்ந்த தமிழர் வாழ்வு'. அதற்கேற்ப இந்த மண்ணில் தடம் பதித்து வரும் தமிழ்த் தொழிலதிபர் களைக் கவுரவிக்கும் சிறப்பு நிகழ்வு திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த மாபெரும் தமிழ்த் திருவிழாவில் வட அமெரிக்கா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவர் திரு. தில்லை குமரன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் தணி குமார் சேரன் மற்றும் விழாக் குழுவினர் வேண்டுகிறார்கள்.

விழா சிறப்புற நடக்க உங்கள் பொருளுதவி யை அனுப்ப வேண்டிய முகவரி:
FeTNA Convention 2007
516 Carriage Woods Circle
Raleigh, North Carolina 27607, USA

தொடர்புகொள்ள:
Dr. தணி குமார் சேரன் - (919) 467-4350 cherans@earthlink.net
வேதா வேதையன் - (919) 816-0629 vedaiyan@yahoo.com
தில்லை க. குமரன் - (408) 267-8006 president@fetna.org
S. சுப்பிரமணியன் - (954) 675-6883 treasurer@fetna.org

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் விழாக்குழுவினர்

© TamilOnline.com