மே 2007: வாசகர் கடிதம்
'திருமணம் என்பது யாருடன் வாழலாம் என்பதைக் கண்டுபிடிப்பதல்ல, யாரில்லாமல் வாழமுடியாது என்பதை அறிவதுதான் என்கிறார் ஜேம்ஸ் டாப்சன்.' சிரிக்க, சிந்திக்க பகுதியில் டி.எஸ்.பத்மநாபன் எழுதிய 'யாருக்கு மாப்பிள்ளை யாரோ' ரசிக்கும்படியாக இருந்தது.

சென்னை-நவின்,
இர்வைன் (கலி.)

*****


நியூஜெர்சி மாநிலத்தின் தமிழ்ச் சங்கத் தலைவர் கணபதி முத்துக்குமார் அவர்கள் மூலம் கலிபோர்னியாவிலிருந்து தென்றல் எனும் தமிழ்த் திங்களிதழ் வெளிவருகின்றது என்று கடந்த வாரம் அறிந்தேன். ஓரிரு தினங்களில் தென்றலை என் மகளிடம் இருந்து பெற்றேன். வெளியுறையில் பேரா. வி. இராமநாதன் அவர்களின் உருவப்படம் என்னை மிகவும் கவர்ந்தது. மேல்புறம் இடதுமுனையில் வீ.ப.கா.சுந்தரம் என்ற பெயரைக் கண்டதும் வியப்பு. அவர் 1962 முதல் 1965 வரை நான் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்ற போது எனக்குத் தமிழ் கற்பித்த ஆசான். புன்முறுவல் தவழும் முகம், நிமிர்நடை, உயர்ந்த உருவம் கொண்ட அய்யா வீ.ப.கா.சு. அவர்கள் செய்யுட்பாக்களை இராகத்துடன் பாடிக் கற்பித்த பாங்கை இன்றும் நான் நினைவு கூருகிறேன்.

அய்யா அவர்களின் ஆழ்ந்த தமிழ்ப் புலமை பற்றி தெ. மதுசூதனன் அவர்கள் தந்திருந்த விரிவான கட்டுரையை வாசித்தேன். கட்டுரையாளர் தந்துள்ள செய்திகள் என்னை வியப்பிலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்துகின்றன. 'தமிழிசை ஆய்வுத்தூண்' தனது 88ஆம் வயதில் பூமியில் புதையுண்டது என்ற துன்பச் செய்தியறிந்து என் கண்களில் நீர் மல்கியது.

சொ. எழிலரசு,
வத்தலக்குண்டு, தமிழ்நாடு

© TamilOnline.com