ஸ்ரீமத் ராமாநுஜர் (பகுதி - 3)
ராமாநுஜர் தனது குருவான ஆளவந்தாரைத் துதித்து, ஸ்ரீரங்கநாதரைச் சேவித்த பின் 'ஸ்ரீபாஷ்யம்' எனப்படும் பிரம்மசூத்திர தத்துவ விளக்கத்தை எழுத ஆரம்பித்தார். ராமாநுஜர் சொல்லச் சொல்ல கூரத்தாழ்வான் எழுதினார். ராமாநுஜர் விசிஷ்டாத்வைத சித்தாந்தப்படி எழுதிய இந்நூல் 'ஸ்ரீ பாஷ்யம்' எனப்பட்டது. ராமாநுஜர் "பாஷ்யக்காரர்" ஆனார். அவருக்கு ஆசார்ய பட்டம் சூட்டப்பட்டது. உடையவர், எதிராஜர், எம்பெருமானார் இவற்றோடு 'ஸ்ரீ ராமாநுஜாசாரியார்' என்றும் போற்றப்பட்டார். 'வேதாந்த தீபம்', 'வேதாந்த ஸாரம்', 'வேதாந்த ஸங்கிரகம்' போன்ற நூல்களை எழுதினார். பகவத்கீதைக்கு ஒரு பாஷ்யம் எழுதினார். அது 'ஸ்ரீ ராமாநுஜரின் கீதாபாஷ்யம்' என்று அழைக்கப்படுகிறது. இவை தவிர்த்து 'கத்யத்ரயம்' என்று அழைக்கப்படும் 'சரணாகதிகத்யம்', 'ஸ்ரீரங்ககத்யம்', 'ஸ்ரீவைகுந்தகத்யம்' என்ற மூன்று நூல்களையும் தந்தருளினார். மேலும் தனது குருவின் விருப்பமான நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு விசிஷ்டாத்வைத விளக்கவுரை எழுதினார். அவர் சொல்லச் சொல்ல திருக்குறுகைப் பிள்ளான் ஓலைச்சுவடியில் பதிவுசெய்தார்.

இந்தப் பணிகளையெல்லாம் முடித்த ராமாநுஜர், திவ்யதேச யாத்திரை புறப்பட்டார். திருக்குடந்தை, மதுரை, அழகர்மலை, ராமேஸ்வரம், திருப்புல்லாணி, ஆழ்வார் திருநகரி, திருக்குறுங்குடி எனப் பல இடங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார். ஆங்காங்கே நாடிவந்தோரின் விருப்பப்படி அவர்களை வைஷ்ணவர்கள் ஆக்கினார். எதிர்த்து வாதிட்ட சமயவாதிகளை வாதில் வென்று வைஷ்ணவத்தை ஏற்கச்செய்தார். திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று தென்னக யாத்திரையை முடித்தார். பின்னர் மதுரா, பிருந்தாவன், சாலிகிராமம், வாரணாசி, அயோத்யா, நைமிசாரண்யம், பத்ரிநாத், பூரி, அஹோபிலம், ஆய்பாடி, கோவர்த்தனம் என வட இந்தியாவின் பல தலங்களுக்கும் சென்று எம்பெருமானைத் தரிசித்தார். பல இடங்களில் மடங்களை நிர்மாணித்தார்.

பின் திருப்பதிக்குச் சென்றார். அங்கிருப்பது பெருமாளா, சிவனா என்ற ஐயம் சில பக்தர்களுக்கு இருந்தது. ராமாநுஜர் ஸ்ரீவேங்கடவன் செய்த திவ்யலீலையால் அங்கிருப்பது பெருமாளே என எல்லாரையும் ஏற்க வைத்தார். சங்கும் ஆழியும் அளித்து திருமலைவாசனைத் துதித்தார். மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார். தெய்வீகத் தம்பதிகளான கூரத்தாழ்வான், ஆண்டாள் தம்பதியினருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பராசரன், வியாசன் என்று பெயரிட்டு ஆசிர்வதித்தார்.

ராமாநுஜரின் புகழ் சோழமன்னன் கவனத்துக்குச் சென்றது. சீற்றத்துடன் அவரைக் கையோடு அழைத்துவரும்படி மடத்துக்கு ஆட்களை அனுப்பினான். மன்னனின் எண்ணத்தை அறிந்து கொண்டார் சீடரான கூரத்தாழ்வான். "மன்னனால் ராமாநுஜருக்கு ஆபத்து விளையும்" என்று ஊகித்த அவர், தன்னை ராமாநுஜர்போல உருமாற்றிக் கொண்டு புறப்பட்டார். குருவான பெரியநம்பியும் உடன் புறப்பட்டார். நீராடச் சென்றிருந்த ராமாநுஜருக்கு விஷயம் வெகுநேரத்துக்குப் பின்னரே தெரியவந்தது. தானே மன்னனை நேரில் சந்திக்கப் புறப்பட்டார். ஆனால் பிற சீடர்கள் அவர் காலில் விழுந்து, உடனடியாக அவர் ஸ்ரீரங்கத்தை விட்டு நீங்கவேண்டும்; நிலைமை சரியானதும் திரும்பலாம் என்று வேண்டிக் கொண்டனர். ராமாநுஜர் அதனை ஏற்க மறுத்தார். சீடர்கள் வற்புறுத்தவே ஸ்ரீவைஷ்ணவ தீபம் தொடர்ந்து எரியவேண்டும் என்ற எண்ணத்தில் சம்மதித்தார். மைசூரைச் சென்றடைந்தார்.

மைசூரருகே உள்ள தொண்டனூரை விட்டலதேவன் என்ற மன்னன் ஆண்டுவந்தான். அவன் சமணன். அவன் மகளின் மனநோயை நீக்கியருளிய ராமாநுஜர் அவனை வைஷ்ணவத்தை ஏற்கச்செய்து விஷ்ணுவர்த்தனன் ஆக்கினார். எதிர்த்த சமண சாதுக்களை வாதில் வென்று அவர்களையும் வைஷ்ணவத்தை ஏற்கச் செய்தார். யதுகிரி என்று அழைக்கப்படும் ஸ்ரீநாராயணபுரம் என்னும் மேலக்கோட்டையில் மண்ணுக்குள் மறைந்திருந்த விஷ்ணுவின் சிலையைக் கண்டெடுத்து புதியதோர் ஆலயத்தை நிர்மாணித்தார். ஆனால் உற்சவர் சிலை கிடைக்காததால் அதைத் தேடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சோழமன்னனின் தண்டனையால் கூரத்தாழ்வான் கண்களை இழந்த செய்தியும், பெரியநம்பி கண்களை இழந்ததுடன் இன்னுயிரைத் துறந்த செய்தியும் வந்து சேர்ந்தது. மனம் வருந்தினார். ராமாநுஜரின் கனவில் விஷ்ணு தோன்றி தாம் டெல்லி மன்னனின் மாளிகையில் இருப்பதாகத் தெரிவித்தார். உடன் டெல்லி சென்ற ராமாநுஜர் டெல்லி பாதுஷாவிடம் உரையாடி, இளவரசியின் அந்தப்புரத்தில், அவளுக்கு விளையாட்டுத் தோழனாக இருந்த உற்சவர் சிலையை எடுத்துக்கொள்ள அனுமதி பெற்றார். அந்தப்புரத்தில் இருந்த சிலையைக் கண்டு அதன் பேரழகில் மயங்கி நின்றார். பின் "என்னோடு வாருங்கள்" என்று கூப்பிட, அந்தச் சிலையும், உயிர் பெற்றதுபோல், குழந்தை துள்ளிக் குதித்து வந்து எப்படித் தன் தாயின் கரங்களை அடையுமோ அவ்வாறே ராமாநுஜரின் நீட்டிய கரங்களுக்குள் சென்று அணைந்தது. மன்னனிடமிருந்து விடைபெற்று நாராயணபுரம் சென்றார். "செல்வப்பிள்ளை"யாகிய அவ்வுற்சவரை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தார். ஆனால், தனது விளையாட்டுத் தோழனைப் பிரிந்ததை இளவரசியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஸ்ரீராமாநுஜர் சென்ற வழியைப் பின்பற்றி தனது வீரர்களுடன் புறப்பட்டு வந்த அவள், ஆலயத்தை அடைந்தாள். சன்னதிக்குச் சென்றவள் ஸ்ரீவிஷ்ணுவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள். அவருடனே ஐக்கியமானாள். அவளும் வணங்கத்தக்கவள் ஆனாள்.

மேலக்கோட்டை ஆலயத்தில் மலைச்சாதியினரும் பிற்பட்ட வகுப்பினரும் கூடக் கருவறை சென்று வழிபட மன்னனிடம் அனுமதி பெற்றுத்தந்தார். அவர்களுக்குத் 'திருக்குலத்தார்' (திரு = மகாலக்ஷ்மி) என்ற மரியாதைக்குரிய பெயரைச் சூட்டி கௌரவப்படுத்தினார். அவர்கள் எல்லா உரிமைகளையும் சலுகைகளையும் பெற உதவினார். இறைவனை சாதி, வேறுபாடின்றி அனைவரும் வணங்க ஏற்பாடு செய்த அவரது இந்தச் செயல் அனைவராலும் போற்றப்பட்டது. அங்கே சில மடங்களை நிர்மாணித்த ராமாநுஜர் அவற்றைக் காப்பதற்காக தனது சீடர்கள் சிலரையும் நியமித்தார். இவ்வாறு சிலகாலம் மைசூரில் வாழ்ந்த அவர் சோழமன்னன் மறைவுக்குப் பின்னர், தனது பணிகளுக்கு இடையூறோ, எதிர்ப்போ அங்கே இனி எழாது என்று அறிந்தபின், மீண்டும் ஸ்ரீரங்கம் செல்ல முடிவுசெய்தார்.

அதனை அங்குள்ளவர்களிடம் தெரிவிக்க, அவர்கள் ராமாநுஜரைப் பிரிய மனமில்லாது வருந்திக் கண்ணீர் சிந்தினர். அவர்கள் வருத்தத்தைப் போக்குவதற்காக தன்னைப் போலவே ஒரு சிலையை நிர்மாணிக்கச் சொன்ன ராமாநுஜர், அச்சிலையை ஆரத்தழுவி அதில் அவரது சக்தியைப் பிரதிஷ்டை செய்தார். பின் அங்குள்ளவர்களிடம், "இதை நானாகவே கருதி வழிபடுவீர்களாக!" என்று சொல்லி ஆசிர்வதித்தார். இதுவே "தமர் உகந்த திருமேனி" ஆகும்.

ராமாநுஜர் ஸ்ரீரங்கம் வந்து சேருவதற்கு முன்னதாகக் கூரத்தாழ்வானும் அங்கு வந்து சேர்ந்திருந்தார். இருவரும் ஒருவரையொருவர் சந்தித்தனர். தன்னைக் காக்கும் பொருட்டுக் கண்களை இழந்த கூரத்தாழ்வானைக் கண்டு கலங்கினார் ராமாநுஜர். கூரத்தாழ்வானோ, "இந்தப் புறக்கண்களை விட நீங்கள் எனக்களித்த ஞானக்கண் அல்லவா உயர்ந்தது? எனக்கு அதுவே போதும்" என்று சொல்லி ராமாநுஜரைத் தேற்றினார். பின் வைஷ்ணவ குலம் தழைக்கவும், ஆசாரியப்பணி தடையறாது நடக்கவும் 74 ஆசாரியார்களை ராமாநுஜர் நியமித்தார். இந்நிலையில் நோய்வாய்ப்பட்டார் கூரேசர். அவரது இறுதிக்காலமும் நெருங்கியது. ஸ்ரீராமாநுஜரின் கண்முன்னர் அவர் பரமபதம் அடைந்தார்.

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பக்தர்கள் ஸ்ரீராமாநுஜரைப் பிரிய வருந்தியபோது, தன்னைப் போலவே சிலை ஒன்றை உருவாக்கச் செய்து அதனைக் கட்டித்தழுவித் தன் தேஜஸை அதில் சேர்த்தருளினார். பின்னர் அங்குள்ள சீடர்களை நோக்கி, "இந்தச் சிலைக்குள் என் அம்சம் உள்ளது" என்று கூறி ஆசிர்வதித்தார். இதுவே "தான் உகந்த திருமேனி" என்று அழைக்கப்படுகிறது.

ராமனுஜருக்கு 120 வயது ஆனது. உடல் தளர்ந்தது. உடலை உகுக்கும் காலம் நெருங்கியது. சீடர்கள் மனம் வருந்தினர். ராமாநுஜர் ஆறுதல் வார்த்தைகள் சொல்லித் தேற்றினார். தன் மறைவுக்குப் பின்னால் ஸ்ரீரங்கம் ஆலயப்பணிகள் தொய்வில்லாமல் நடக்கவேண்டும் என்று ஆணையிட்டார். மேலும் தன்னைப் போலவே சிலை ஒன்றைச் செய்வித்து, அதனை காவிரியில் நீராட்டி, தன் மறைவிற்குப் பின் ஆலயத்திற்குள் ஒரு சன்னதியாகப் பிரதிஷ்டை செய்யச் சொன்னார். மடத்தின் தலைமைப் பதவி பராசரபட்டருக்கு அளிக்கப்பட்டது. இறுதிநாள் நெருங்கியது. அந்நாளில் சீடர்களுக்கு மேலும் பல அறிவுரைகளைக் கூறிய ஸ்ரீராமாநுஜர், தள்ளாத நிலையிலும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்திற்குச் சென்று எம்பெருமானைச் சேவித்தார் பின், எம்பார் மடியில் தலையையும், வடுக நம்பி மடியில் திருவடிகளையும் வைத்து, எட்டெழுத்து மந்திரத்தை ஓதி, 1137ம் ஆண்டில் பரமபதம் அடைந்தார்.

ஆலயத்துள் ஓரிடத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பெற்றது. அங்கே ராமாநுஜர் முன்பே சொல்லியிருந்தபடி சிலாரூபம் ஸ்தாபிக்கப்பட்டது. அதற்குத் "தானான திருமேனி" என்று பெயர். அச்சிலை முனிவர் ஆளவந்தாரிடம் இருந்த பூதபவிஷ்ய விக்கிரகமாக இருக்கலாம் என்ற ஓர் கருத்தும் உண்டு. அது, ராமாநுஜர் அவதாரம் எடுப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கப்பெற்று, நாதமுனிகள் மூலமாக அவரது பேரன் ஆளவந்தாரிடம் வந்து சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. உடையவர் சன்னிதியில் இருந்துகொண்டு இன்றும் உயிர்ப்புடன் தம்மை நாடிவரும் மக்களுக்கு அருள்புரிந்து வருகிறார் எம்பெருமானார், உடையவர் ஸ்ரீராமாநுஜர்.

செறுகலியைச் சிறிதுமறத் தீர்த்து விட்டான் வாழியே
தென்னரங்கர் செல்வமுற்றும் திருத்தி வைத்தான் வாழியே
மறை அதனில் பொருள் அனைத்தும் வாய் மொழிந்தோன் வாழியே
மாறன் உரை செய்த தமிழ் மறை வளர்த்தோன் வாழியே
அற மிகு நற்பெரும்பூதூர் அவதரித்தான் வாழியே
அழகாரும் எதிராசர் அடியிணைகள் வாழியே!


பா.சு. ரமணன்

© TamilOnline.com