திருக்காளத்தீஸ்வரர் ஆலயம்
ஆந்திராவின் சித்தூர் ஜில்லாவில் திருப்பதி-விஜயவாடா ரயில் பாதையில், ரேணிகுண்டாவிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ளது காளஹஸ்தி. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து பேருந்துகள் உள்ளன. இத்தலம் பஞ்சபூதத் தலங்களில் வாயு ஸ்தலமாகும். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் ஆகியோரது தேவாரப்பாடல் பெற்ற தலம். பாடல்பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் இது 19வது தலம்.

தல வரலாறு: முன்னொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் 'தம்மில் யார் பெரியவன்?' என்ற போட்டி ஏற்பட்டது. ஆதிசேஷன் "எனது பலத்தால் கைலாய மலையை இறுக்கச் சுற்றி மூடிக்கொள்வேன். நீ உன் பலத்தால் மலைச் சிகரங்களைத் தகர்த்து எறிந்தால் நீ பெரியவன் என ஒத்துக் கொள்வேன்" என்று சொல்லிவிட்டு, மலை வெளியே தெரியாதவாறு சுற்றிக்கொண்டார். வாயுதேவனும் பலம் கொண்ட மட்டும் காற்று வீசியும், மலையை அசைக்க முடியவில்லை. இப்படியே பல நூறாண்டுகள் கழிந்தன. ஒரு சமயம் ஆதிசேஷன் இலேசாக அசைவதைப் பார்த்த வாயுதேவன், தன் முழு பலத்துடன் காற்று வீசினார். அதனால் கைலாய மலையிலிருந்து மூன்று சிகரங்கள் தெறித்து தெற்கே வந்து விழுந்தன. அவற்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணம்.

இக்கோவில் மிகப்பழமை வாய்ந்தது. சோழ அரசர்களால் ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இறைவன் பெயர்: சீகாளத்தி, திருக்காளத்தி, காளத்தியப்பர், காளத்தீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர். இறைவியின் பெயர்: ஞானப்ரசூனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை உடையது இத்தலம். தலவிருட்சம்: மகிழமரம். தீர்த்தம்: பொன்முகலியாறு, ஸ்வர்ணமுகி ஆறு.

ராகு-கேது தோஷமுள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்டகாலப் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இத்தலம் வந்து நிவாரணம் பெறப் பிரார்த்தனை செய்கின்றனர். இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகளுக்கு நன்கு பேச்சுவரும் என்பது நம்பிக்கை.

கோயில் ராஜகோபுரம் 120 அடி உயரம் உடையது. சிலந்தி, பாம்பு, யானை மூன்றும் இங்கே சிவபெருமானை பக்தியோடு வணங்கி, வாயுலிங்கமாக விளங்கும் சிவபெருமானுடன் இணைந்தன. "சீ" என்பது சிலந்தியையும், "காள" என்பது பாம்பினையும், "ஹஸ்தி" என்பது யானையையும் குறிப்பதாலும், மூன்றும் இணைந்துள்ளதாலும் இறைவன் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வெண்ணிறத்துடன், சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் இருக்கும் தீபச்சுடர் காற்றில் அசைந்துகொண்டே இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். ஆரத்தியின்போது இறைவனின் தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு, அடிப்பாகத்தில் சிலந்தி, நடுவில் யானையின் இரு கொம்புகளையும் உச்சியில் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலதுபக்கம் கண்ணப்பர் பெயர்த்துவைத்த ஒரு கண்ணின் வடுவையும் காணலாம்.

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை, மூலவரின் எதிரே வெள்ளைக்கல் நந்தி, பித்தளை நந்தியும் உள்ளது. கருவறை அகழி போன்ற அமைப்புடன் உள்ளது. கோஷ்டத்தில் பிரம்மா, துர்க்கை, லிங்கோத்பவர் உள்ளனர். கோயிலின் நுழைவாயிலில் 60 அடி உயரமுடைய ஒரே கல்லாலான கொடிமரம், அருகே பலிபீடம், நந்தி உள்ளன. கண்ணப்பர் வாயமுதமாக முகலிநீர் கொண்டுவந்து இறைவனுக்கு அபிஷேகம் செய்ததால் இங்கே பக்தர்களுக்கு திருநீற்றுப் பிரசாதம் இல்லை. சங்கு ஒன்றில் வைத்துப் புனிததீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவித்த பின்பு அதன்மீது தும்பைப் பூ மாலை சாத்துகின்றனர். அம்மனின் இடுப்பு ஒட்டியாணத்தில் கேதுவின் உருவம் காணப்படுவது விசேஷம். 51 சக்தி பீடங்களில் இது ஞானபீடம். கிரகதோஷ பரிகாரத்தலம் என்பதால் தனியாக நவக்கிரக சன்னதி இல்லை. இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன. சனீஸ்வரர் தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். ஆலயத்தைச் சுற்றி துர்க்கை அம்மன் கோயில் வடக்கிலும், கண்ணப்பேஸ்வரர் கோயில் தெற்கிலும் அமைந்துள்ளன. சிவராத்திரி விழா, ஆனித்திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மாசித்திருநாள் என விழாக்கள் யாவும் சிறப்புற நடைபெறுகின்றன.

கொண்டாடும் விடையாய் சிவனே என்செழுஞ்சுடரே
வண்டாரும் குழலாள் உமைபாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எங்காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்தேத்த மாட்டேனே.

- சுந்தரர்


சீதாதுரைராஜ்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com