மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: ராமனைக் கேளுங்கள்
வால்மீகி ராமாயணத்தில் ராமனைக் காட்டுக்குப் போகையில் சீதையிடம் விடைபெற்றுக்கொள்ளும் சமயத்தில் 'நானும் உன்னுடன் வருகிறேன்' என்று சீதை அவனிடம் வாதிடும் கட்டம் மூன்று சர்க்க நீளம் கொண்டது. கம்பன் இந்தக் கட்டத்தை நான்கைந்து பாடல்களில் சுருக்கிவிட்டான். வால்மீகியில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களுக்குக் கம்பனில் இடமில்லை. காட்டுக்கு நானும் உடன்வருவேன் என்று சீதை வாதிடும் கட்டத்தில் ஒரு வாக்கியம் மிக அதிகமாகப் பேசப்படுவதும் விவாதிக்கப்படுவதும் ஆகும். "குமாரியாயும் பார்யையாயும் வெகு காலமாக உடன் உறைபவளாயும் பதிவிரதையாயும் இருக்கும் என்னை, மனைவியைப் பிறருக்குக் கொடுத்து ஜீவிப்பவரைப் போல் மற்றவருக்குக் கொடுக்க விரும்புகின்றீர்களே!" என்பதே அது. "ஷைலூஷா இவா" என்ற அந்தச் சொற்கள் பலவிதமாக மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. 'நடிகனைப்போல்' என்று மொழிபெயர்த்தவர்களும் உண்டு. இங்கே நாம் மகாபாரதத் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்ட அதே பதிப்பகத்தாருடைய வான்மீக மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தியிருக்கிறோம். சீதையின் சொற்கள் மிகக் கடுமையானவை என்ற பேச்சு எழும்போதெல்லாம் அவர்களுக்கு ஒரு மறுமொழியைத்தான் சொல்வோம். 'சீதையின் பேச்சு கடுமையானதா இல்லையா என்பதை நிர்ணயிக்க வேண்டியது நீங்களும் நானுமல்லர். அவள் யாரை அவ்வாறு பேசினாளோ அந்த ராமன்தான் அதைப்பற்றிப் பேசவேண்டியவன். கணவனும் மனைவியுமான இருவரில் அவள் திட்டினால் அவன் எப்படி உணர்ந்தான் என்பதுதான் இங்கே முக்கியமேயொழிய, நாம் எப்படி உணர்கிறோம் என்பதைப் பார்ப்பதற்கு இங்கே சற்றும் இடமில்லை.'

இந்தச் சொற்களைக் கேட்ட ராமன் என்ன சொன்னான் என்பதே இங்கு முக்கியம். சீதை தன் உறுதியில் சற்றும் தளராமல் நிற்பதைப் பார்த்த ராமன் தன் பேச்சின் இறுதியில் இவ்வாறு சொல்கிறான்: "உனக்குத் துயரம் விளைவதாயிருப்பின் நான் ஸ்வர்க்கத்தையும் விரும்பேன். சுயம்புவான கடவுளுக்கு எவ்வாறு ஒருவரிடத்திலிருந்தும் அச்சமில்லையோ, அவ்வாறே எனக்கும் அச்சமில்லை. அழகிய முகத்தையுடையவளே, உன்னைப் பாதுகாப்பதில் எனக்குத் திறமிருந்தாலும், உனது அபிப்பிராயத்தை அறியாமல் காட்டில் நீ வசித்தலை நான் விரும்பவில்லை. நீ என்னுடன் காட்டில் வசிப்பதற்காகப் பிறந்திருக்கிறபடியால், நற்குலத்துதித்தவன் கீர்த்தியை விடாதவாறுபோல் இனி நான் உன்னைவிட்டுப் போக வல்லேனல்லேன். சுவர்ச்சலா தேவி சூரிய பகவானைத் தொடர்வதுபோல நீயும் என்னுடன் காட்டுக்கு வரலாம்" என்றெல்லாம் பேசும் ராமன், சீதை ஜனக வம்சத்துக்கும் இக்ஷ்வாகு வம்சத்துக்கும் ஒரேசமயத்தில் பெருமை சேர்த்திருப்பதாகப் பேசும்போது, சீதை சொன்னது கடுஞ்சொல் என்று பேச நாம் யார்!

இங்கே எதற்காக இதைச் சொல்லப் புகுந்தோம் என்றால், பாதிப்பா இல்லையா என்று பாதிக்கப்பட்டவர்களிடம் கேளுங்கள் என்கிறேன். சீதை பேசியது கடுஞ்சொல்லா என்று ராமனிடம் கேட்பதைப்போல இதைப் பாஞ்சாலியிடத்திலே கேளுங்கள் என்கிறேன். 'சூதிலே வைத்தாடுவதற்கு மனைவியென்ன உடைமைப் பொருளா?' என்றொரு பேச்சு பலசமயம் எழுவதைப் பார்க்கிறோம். மனைவி ஒரு உடைமைப் பொருள்தான் என்று வாதிடுபவன் கர்ணன்தான். வேறு யார் இவ்வாறு வாதிடுவார்கள்! விகர்ணன் எழுப்பும் கேள்விக்கு விடையாக அவனுடைய வாதத்தைப் பாருங்கள்: "பாண்டவர்களில் மூத்தவனாகிய யுதிஷ்டிரன் எல்லாப் பொருள்களையும் சபையில் வைத்துவிட்டபோது திரெளபதி மட்டும் ஜயிக்கப்படவில்லையென்று நீ நினைப்பது எப்படி? பரத சிரேஷ்டனே! அந்தத் திரெளபதியும் எல்லாச் சொத்திலும் அடக்கம்தானே? இப்படி நியாயமாக ஜயிக்கப்பட்ட திரெளபதியை ஜயிக்கப்படவில்லை என்று நீ நினைப்பது எப்படி?" (ஸபா பர்வம், த்யூத பர்வம் அத். 90; பக். 290).

'மனைவி ஒரு உடைமைப் பொருள், அதனால் எப்போது யுதிஷ்டிரன் வெல்லப்பட்டானோ அப்போதே பாஞ்சாலியும் வெல்லப்பட்டுவிட்டாள்' என்ற கர்ணனுடைய தரப்பில் உண்மை இருந்திருக்குமானால், 'பாஞ்சாலியை வைத்தாடு' என்று யுதிஷ்டிரனிடத்திலே கேட்டிருக்கவேண்டிய அவசியமே இல்லை! அதுதான் யுதிஷ்டிரனை வென்றதும் இவளையும் வென்றாகிவிட்டதே! அதற்கு ஏன் தனியாக ஒரு ஆட்டம்! இப்படித் தன் வாதத்தைத் தன் செயலே நியாயப்படுத்தாத வாதத்தைத்தான் கர்ணன் வைத்தான். எழுப்பப்பட்ட இந்தக் கேள்விக்கு அவனிடம் மட்டுமல்லாமல் வேறு யாரிடமும் விடையில்லை.

கர்ணன் இவ்வாறு பேசினால், பீஷ்மருடைய பார்வையோ வேறு வகையில் இருக்கிறது. "சூதாடி உன்னை யுதிட்டிரனே தோற்றுவிட்டான்; வாதாடி நீயவன்றன் செய்கை மறுக்கின்றாய்" என்று பாரதி பாடுவதெல்லாம் இதற்குப் பின்னால் வருபவை. இந்தக் கட்டத்தில் பீஷ்மர் சொல்கிறார்: "பாக்கியமுள்ளவளே! தனக்குத்தான் சுதந்திரமில்லாதவன் அயலானுடைய பொருளைப் பந்தயம் வைக்கமுடியாது என்பதையும்; பெண்ணானவள் கணவனுக்குட்பட்டவள் என்பதையும் பார்க்கும்போது, தர்மம் அறியக்கூடாது இருப்பதனால் நீ கேட்ட இந்த கேள்விக்குச் சரியாகப் பகுத்து மறுமொழி சொல்ல என்னால் முடியவில்லை. யுதிஷ்டிரன் செல்வம் நிறைந்த பூமியனைத்தையும் விட்டாலும் விடுவானேயன்றித் தர்மத்தை விடான். நான் ஜயிக்கப்பட்டேன் என்று அவனே சொன்னான். அதனால் இதில் ஒரு நிச்சயமும் என்னால் சொல்ல முடியவில்லை. சகுனி சூதாட்டத்தில் மனிதர்களுக்குள் ஒப்பற்றவன். குந்தி புத்திரனாகிய யுதிஷ்டிரன் அவனால் இஷ்டப்படி விடப்பட்டான். அந்த வஞ்சகத்தை யுதிஷ்டிரன் அறியவில்லை. அதனால் உன் இந்தக் கேள்விக்கு நான் மறுமொழி கூறாமல் இருக்கிறேன்' என்று சொன்னார்". (மேற்படி, அத். 89; பக். 286).

பீஷ்மருடைய பேச்சில் 'தர்மம் அறியக்கூடாது இருப்பதனால்' என்பதற்கு, என்னால் அறியமுடியாமல் இருப்பதனால் என்று பொருள். அவர் சொல்வது என்னவென்றால், 'இந்த இடத்திலே தர்மம் வெகு நுட்பமானதாய் இருக்கிறது; தருமன் அடிமையானதன் பிறகு (தனக்குத் தான் சுதந்திரமில்லாத போது) உன்னைப் பந்தயமாக வைக்க முடியுமா என்பது ஒருபக்கமிருக்க, கணவனுக்கு மனைவி கட்டுப்பட்டவள் என்பதையும் பார்க்கவேண்டியிருக்கிறது. (உடைமையோ உடைமையில்லையோ, அவன் செய்ததற்கு நீ கட்டுப்படவேண்டிய அவசியமிருக்கிறது). தருமனோ என்ன ஆனாலும் தருமத்தை மட்டும் கைவிடாதவன். ஆகவே அவனே இதைச் செய்திருக்கிறான் என்றால் இது தருமமாகத்தான் இருக்கவேண்டும்.' இந்தப் பேச்சின் இடையில் 'தருமன் அவன் இஷ்டப்படி விடப்பட்டான்' என்றொரு பேச்சு வேறு! 'சூதிலே வை' என்று சொன்னது சகுனியென்றால், வைத்தாடியது தருமனுடைய இஷ்டமல்லவா' என்ற பொருளை உடைய கேள்வி இது. இதற்கும் சேர்த்துதான் பாஞ்சாலி விடை சொல்லப் போகிறாள்.

இப்படிச் சொல்கின்ற பீஷ்மர் பின்னாலும் இதைப் போலவே பேசி, உலகத்தில் தர்மத்தின் சிறந்த வழியை அறிவது, மிகத் தெரிந்த மகாத்மாக்களுக்கும் முடியாது. உலகத்தில் பலவானான மனிதன் எதைத் தர்மமாக நினைக்கிறானோ அதுதான் தர்மமாகிறது. மற்றது தர்மத்தின் கரையில் நிற்கிறது. மேலும் இந்தத் தர்மம் சூட்சுமமாயிருப்பதனாலும் அறிவதற்கு அரிதாய் இருப்பதனாலும் உன்னுடைய இந்தக் கேள்விக்கு நிச்சயமாகப் பகுத்து மறுமொழி கூற என்னால் முடியவில்லை..... துரோணர் முதலானோர்களும் உயிர்போனவர்கள் போலத் தலைகுனிந்து வெறும் தேகங்களோடு இருக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு நிச்சயம் சொல்லவேண்டியவன் யுதிஷ்டிரன் என்பது என்னுடைய அபிப்பிராயம். நீ ஜயிக்கப்பட்டவள் என்றாவது, ஜயிக்கப்படாதவள் என்றாவது தானே வியக்தமாகச் சொல்லவேண்டியவன் அவன் என்று சொன்னார்." (அத். 91, பக். 296). கேள்வியை இவரிடத்திலே கேட்டால், தருமனை வெகுவாக (மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் உட்பொருளில்லாமலும்) புகழ்ந்துவிட்டு, 'இதற்கு பதில் சொல்லவேண்டியவன் யுதிஷ்டிரனே' என்று சொன்னால் என்னதான் செய்வது! பெரியவர்களாய் இருப்பவர்கள் தருமத்தை எடுத்துச் சொல்லாமல் இருப்பது தவறு என்றால் பேசவேண்டிய இடத்தில் தருமத்தை எடுத்துப் பேசாமலும் எதிலும் பட்டுக்கொள்ளாமலும் பதில் சொல்வது அதைவிடவும் தவறு. பீஷ்மர் பெரியவர். பிதாமகர். அவரே இப்படித் தடுமாறுகிறார் என்றால் என்னசெய்வது!

அதைத்தான் சொன்னேன். பாதிப்பா இல்லையா என்று பாதிக்கப்பட்டவர்களைக் கேளுங்கள். இதற்குப் பாஞ்சாலி சொல்லும் பதிலால் அந்தச் சபையிலே நல்ல நோக்கங்கள் நிறைவேறாவிட்டாலும் சபை உறைந்து போனது என்னவோ உண்மை. தருமனைப் பற்றிய அவளுடைய கருத்து என்ன என்பது வெளிப்படும் இடம் இது. பாஞ்சாலி என்ன பதில் சொன்னாள்?

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com