தெரியுமா?: ரவிகிரணுக்கு சங்கீத கலாநிதி விருது
பிரபல சித்ரவீணை இசைக்கலைஞர் ரவிகிரண் இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த வருடம் வயலின் ஏ. கன்யாகுமாரி இதனைப் பெற்றார். இந்த வருடமும் ஒரு கருவிக் கலைஞருக்கே இவ்விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. ‘கோட்டு வாத்தியம்’ என்ற அழைக்கப்பட்டதை ‘சித்ரவீணை’ ஆகப் பெயர்மாற்றம் செய்ய உழைத்தவர் ரவிகிரண். இவர் கருவிலேயே திருவுடையவர். தனது இரண்டாம் வயதிலேயே பல ராகங்களை அடையாளம் கண்டுபிடித்து மூத்த கலைஞர்கள் உட்படப் பலரையும் அதிசயிக்க வைத்தவர். இன்றைக்கு இவரது வயது 50. தேர்ந்த இசைஞானம் கொண்ட ரவிகிரண், புதிய ராகங்களையும் உருவாக்கியிருக்கிறார். 750க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியிருக்கிறார்.

பழமையை அடித்தளமாகக் கொண்ட புதுமை இவரது பலம். உலகம் முழுவதும் கச்சேரிகள் செய்கிறார். இவரது மெல்ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ரா மிகப் பிரபலம். மொசார்ட், பீத்தோவன் தொடங்கி தியாகராஜர், தீட்சிதர், சியாமா சாஸ்திரி, ஊத்துக்காடு வேங்கடகவி வரை அனைத்திலும் பயிற்சி அளித்து அக்குழுவை இசைக்கச் செய்கிறார். 1330 குறட்பாக்களுக்கும் இசையமைத்து, பல்வேறு இசைக் கலைஞர்களின் குரலில் வழங்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். வாய்ப்பாட்டிலும் வல்ல இவர், இளையோர் பலருக்குக் குருவாக விளங்குகிறார். அக்கரை சுப்புலட்சுமி உள்ளிட்ட பலர் இவரது சீடர்களே.

தென்றலின் வாழ்த்துக்கள்!

© TamilOnline.com