கங்கா ஜலம்
நட்டநடுநிசி. நாய்கள் ஊளையிடும் சத்தம். சாவித்திரியின் தூக்கம் கலைந்துபோனது. ஆனால் எரிச்சல் தோன்றவில்லை. அலாதியான ஒரு சந்தோஷம் தான் மனசுக்குள் துளிர் விட்டது. கணினி மேதையாகப் பெரிய நிறுவனத்தில் மாசம் லட்சத்துக்கு மேல் சம்பாதிப்பவள் தான் அவள். ஆனாலும் சில மூடநம்பிக்கைகள் விட்டபாடில்லை. இது அமாவாசை ராத்திரி. நாய்களின் ஊளை! மரணம் நிகழப்போகிறது! பொழுது விடிவதற்குள் கிழம் மண்டையைப் போட்டுவிடும். (ரிடையர்ட்) கார்டு ஜலகண்டபுரம் ஜானகிராமனுக்கு இறங்கவேண்டிய ஸ்டேஷன் வந்துவிடும். "ஐயோ வேண்டாம், நான் இறங்க மாட்டேன்" என்றெல்லாம் சண்டித்தனம் பண்ண முடியாது. அந்த எண்ணம் அவளுக்கு கல்கண்டு போல இனித்தது. மாமனாரைப் பற்றி நினைக்கையில் மனசில் வெறுப்பு கொசுவர்த்திச் சுருளாகப் புகைந்தது.

கிழத்துக்குத் தன் முதல் இரண்டு டில்லிப் பிள்ளைகளையும் மருமகள்களையும் அவர்களது குழந்தைகளையும் தான் (மொத்தம் எட்டு டிக்கட். அதில் ஐந்து லேடீஸ் கம்பார்ட்மெண்ட்) ரொம்பவும் பிடிக்கும். சந்தேகமே கிடையாது. அப்பர் கிளாஸ் பக்கம் சாய்கிற மனசு. பெரிய இடத்துப் பெண்கள் இல்லையா, அதனால் அந்த மருமகள்களிடம் விசேஷமான பற்றுதல். சகிக்கமுடியாத அவர்கள் சமையலை நளபாகம் என்று சொல்ல அவரது நா கூசாது! அது போகட்டும். மருமகள் சாவித்திரி கைநிறைய சம்பாதிப்பதால்தானே, தனது மூன்றாவது புத்திரசிகாமணி - செல்லமணி தினமும் கருப்புக் கோட்டு மாட்டிக்கொண்டு கச்சேரிக்குப் போய்ப் பொழுதுபோக்க முடிகிறது? அந்த நினைப்பே இல்லை மனுஷனுக்கு. தன் வக்கீல் பிள்ளை ராம் ஜெத்மலானி என்ற பிரமை! இறுமாப்பு. தம்பட்டம். ஆனால் ஒன்று. மனுஷன் அதிகம் சென்னைக்கு வந்து முகாம் போட்டுத் தொல்லை கொடுத்ததில்லை. எப்போதாவதுதான் எழுந்தருள்வார். மிஞ்சினால் இரண்டு அல்லது மூன்று வாரம். அப்புறம் டில்லி சலோ என்று ரயில் ஏறிவிடுவார்.

இந்த முறை அதிர்ச்சி! நங்கூரம் போட்டுவிட்டார். நாற்பது நாள் ஆகியும் வந்தவர் நகர்வதாக இல்லை.

பேச்சும் ஓயவில்லை. தாத்தா தாத்தா, என்று சினேகமாய் இருந்த குழந்தைகள் ராஜாவுக்கும் நிஷாவுக்கும்கூட ரயில் கதைகள் போரடிக்க ஆரம்பித்து விட்டன. அன்பு மகன் செல்லமணிக்கும் சலிப்புத் தட்டியது. தினமும் கச்சேரி விஷயங்கள் கேட்டு நச்சரிப்பார். கேஸ் சமாசாரம் என்றால் அவருக்குத் திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா. அப்பாவின் செல்லத்துக்குச் சொந்தமாக ஒரு வழக்கும் இல்லையே. மற்ற வக்கீல்களின் பிரதாபங்களை எத்தனை நாள் அளப்பது! ஒருநாள் ராஜாதான் சாமர்த்தியமாகக் கேட்டான். "தாத்தா, இந்த தபா நானும் டில்லி வரேனே!" (தாத்தாவின் அதே குறுக்கு புத்தி அவனுக்கும்.)

மறுகணம் தேள் கொட்டினாற் போல் பதறி எழுந்தார் ஜஜாரா (ஜலகண்டபுரம் ஜானகிராமன்). "ஓ, மறந்தே போனேனே!" குரல் வருந்தியது. டில்லி வாலாக்களை ரொம்பநாள் பிரிந்துவிட்ட ஆற்றாமை அந்தக் கரகரப்பிரியாவில் தொனிப்பது போல் தோன்றியது சாவித்திரிக்கு.

மறுகணம் அவர் யானையிடம் சென்றார். நிஜயானை அல்ல. பிரும்ம்மாண்டமான லக்கேஜ் பெட்டி. அதன்மேல் JJR என்று கொட்டை எழுத்து! நிஷாதான் அதற்கு 'யானை' என்று பெயர் சூட்டியிருந்தாள். எப்போதும் ஜஜாரா பிரயாணம் யானையுடன் தான். அனாயாசமாய் இழுத்துக் கொண்டு போவார். ஓ, உடனடியாகக் கிளம்பி விடுவாரோ! சாவித்திரியும் குழந்தைகளும் மனம் மகிழ்ந்து பார்த்தார்கள். ஜிப்பை இழுத்து யானையின் வாயைப்பிளந்து ஜஜாரா வெளியே எடுத்தது மகாலட்சுமி படம். ரவிவர்மா படம் அல்ல. பூவும் பொட்டுமாய்ப் போன அவரது தர்மபத்தினி மகாலட்சுமியின் ஃப்ரேம் போட்ட ஃபோட்டோ.

"ராஜா! அந்த ஆனந்தம் ஸ்டோர்ஸ் காலண்டரை மாத்தி, பாட்டி படத்தை மாட்டு! வெள்ளிக்கிழமை தோறும் மல்லிகைப் பூமாலை போடணும். அங்கே படீ பஹு சலிச்சிண்டது கண்ணில பட்டுது. எடுத்துண்டு வந்துட்டேன். ஹ்ஹ்ஹா!" ஆக்ரோஷமாகச் சிரித்தாரே ஒரு சிரிப்பு. எல்லாருக்கும் தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது.

ஒவ்வொரு வெள்ளியும் ஜானகிராமன் மகாலட்சுமிக்கு ஆசையாய் யானைமேல் ஏறி நின்று மாலை சூட்டுவார். அவரே அதிகாலையில் வெளியே போய் மாலை வாங்கி வருவார். நான்கு வாரம் மங்களமாய் சென்றது.

ஐந்தாவது வெள்ளிக்கிழமை ஆக்சிடண்ட்!

பக்கத்தில் அருணாசலம் ரோடிலிருந்து திரும்பியவர் அபார்ட்மெண்ட் வாசலில் மாலையும் கையுமாய் அடிபட்டுக்கிடந்தார். ஒரு ஆட்டோ அவரை மோதித் தள்ளிவிட்டு ஓடிவிட்டது. ரங்கா க்ளினிக்கில் இரண்டு வாரம் முனகலும் பொருமலுமாய்க் கிடந்தது அந்த எண்சாண் உடம்பு. பெரிய காயம் ஒன்றும் இல்லை. ஆனால் மனுஷனுக்கு மரணபயம் பிடித்துவிட்டது. எந்நேரமும் அரற்றல்.

"உடம்புக்கு ஒண்ணும் இல்லை. மனசுல கிலி. வீட்டிலேயே பாத்துக்கலாம்! ரொம்பவும் நெருக்கடின்னா ஃபோன் பண்ணுங்க!" என்றுதான் டாக்டர் ரங்காவும் சொன்னார்.

செல்லமணி, சாவித்திரி, ராஜா, நிஷா! பங்கு போட்டுக்கொண்டு ராத்திரி கண்காணித்தார்கள். அடுத்த அறையில் படுக்கையில் ஜஜாரா காலன்ரதம் வருவதற்காகக் காத்துக்கிடந்தார்.

அப்பர் கிளாஸ் வெய்ட்டிங்தான். சொகுசான படுக்கை. குளுகுளு ஏஸி. யானையும் மகாலட்சுமி படமும் அதே அறையில். காலை ஐந்து மணியிலிருந்து மாலை ஆறுவரை கவனித்துக்கொள்ள நல்ல பொறுப்பான ஆண் நர்ஸ். வேறென்ன வேண்டும் கடைசி நேரத்தில்? டில்லிப் பிள்ளைகள் தாராளமாகவே சின்னத்தம்பிக்குப் பணம் அனுப்பினார்கள். தங்களது போஷான வீடுகளுக்கு வந்து அசிங்கம் பண்ணாமல் மயிலாப்பூரிலேயே அப்பா மண்டையைப் போடட்டுமே.

டில்லி வாலாக்களின் தாராளம் ஏன் என்று சாவித்திரிக்கு நன்றாகத்தான் புரிந்திருந்தது. அவளுக்கு ஆத்திரமாகவும் இருந்தது. நாட்கள் உதிர்ந்தனவே தவிரப் பெரியவர் உயிர் பிரியக் காணோம். கார்டு ஜஜாராவுக்கான பரமபதம் ஸ்பெஷல் எப்போது வரும் என்று தெரியவில்லை.

*****


அந்த இரவு சாவித்திரியின் காவல் இரவு. பரமபதம் ஸ்பெஷல் வந்துகொண்டிருப்பதாகத் தோன்றியது. நாய்களின் ஊளையில் மனமகிழ்ந்து உறங்கினாள் அவள். காலையில் பிணத்தின் முகத்தில் விழிக்கலாம் என்று ஒரு நம்பிக்கை.

"குக்கூ.கூஊஊஊஊ!" ஜஜாரா ரயில்போல் கூவுவது கேட்டது. "தடக்படக் தடகள படக்!" தண்டவாளத்தில் ஓடும் ஓசை.

பேஷ்! கார்டுக்கு அக்கிலி பிக்கிலி. கிழம் ரெயிலாய்க் கிளம்பி சுவரில் மோதிக்கோள்ளும். அந்த வேடிக்கையை மிஸ் பண்ணக்கூட கூடாது. சாவித்திரி அவசரமாக மாமனார் அறைக்கு விரைந்தாள்.

ட்யூப் லைட் ஸ்விட்சைப் போட்டாள். பளீர் வெளிச்சம்! ஜஜாரா சின்ன மருமகளை சினேகமாகப் பார்த்தார். கங்காஜலம் குடம், தங்காயங்களம் என்று என்னவெல்லாமோ நா குழறினார். ஆள்காட்டி விரலால் யானைப் பெட்டியைக் காட்டி என்னவோ சொன்னார். தாகம் என்று சொல்வது போலவும் இருந்தது அவரது கை அசைவு.

சாவித்திரி ஜிப்பை இழுத்து யானையின் வாயைப் பிளந்து பார்த்தாள். குர்தா, பைஜாமா, பேன்ட், வேஷ்டி .அதன் கீழே இருந்தது மூன்று குடம் கங்காஜலம்! வெளியே எடுத்தாள். ரொம்பவும் சின்னதான குடங்கள் இல்லை. வழக்கத்தைவிடக் கொஞ்சம் பெரிசு. சற்றுக் கனமாகவும் இருந்தது. செப்புக் குடங்கள்!

மாமனாரைப் பார்த்தாள். கிழட்டு முகத்தில் ஆனந்தரேகை நெளிந்தது. மறுகணம் அவளுக்கு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

"ஓகோ! மூணு குடம் கங்காஜலம் வேணுமாக்கும். சாகும்போதும் பந்தாவா? என்ன பண்றேன் பாரு!" மனசுக்குள் சொல்லிக்கொண்டு அவள் அவரை நோக்கிச் சிரித்தாள்.

மனுஷன் முகத்தில் அலாதியான சந்தோஷம். கங்காஜல சந்தோஷமோ!

*****


பொழுது புலர்ந்தது. மூன்று கங்காஜலக் குடங்களையும் ஒரு பையில் போட்டுக்கொண்டு சாவித்திரி வீட்டுக்கு வெளியே வந்தாள். ரோட்டில் எதிர்ப்புறம் இருந்த குப்பைத்தொட்டியில் அந்தப் பையைத் போட்டுவிட்டு திரும்பி நடந்தாள். அதற்குள் ஜஜாரா மண்டையைப் போட்டிருந்தார். கங்காஜலம் பருகாமலேயே உயிர் பிரிந்து போயிருந்தது. எல்லாரும் அழுதார்கள். ராஜா டில்லிக்கு ஃபோன் பண்ணலானான்.

*****


சாரங்க் என்க்ளேவ் முன் இருந்த குப்பைத் தொட்டியைக் கிளறிய சாமிநாதனுக்கு அந்தப் பை கிடைத்தது. மூன்று செப்புக்குடங்கள். குலுக்கிப் பார்த்தான். ஜிலீர் ஜிலீரென்று ஒலித்தது. அவனுக்கு ஆவலானது. சுற்றுமுற்றும் பார்த்தான். நல்லவேளை யாரும் அவனைக் கவனிக்கவில்லை. ஆனால் கார்ப்பரேஷன் ஆட்கள் எந்த நிமிஷமும் வந்துவிடுவார்கள். குடங்களைத் தன் பெரிய பையில் போட்டுக்கொண்டான். சைக்கிளில் வீடுநோக்கிப் பறந்தான்.

மனசு திக்திக்கென்று அடித்துக்கொண்டது. எதிரே பாய்ந்துவரும் பூதாகாரமான லாரிகள் முறைத்தன. மிகவும் கவனமாகச் சென்றான். ஆதம்பாக்கம் அருகே புறம்போக்கில் ஒரு குடிசை. சாமிநாதனும் பெஞ்சாதி சுந்தரியும் மலைத்துப் போனார்கள். அந்த மூன்று கங்காஜலக் குடங்களிலிருந்தும் தங்க நாணயங்கள் கொட்டின! அவை யாவும் நகைக்கடைக்காரர்கள் விற்கும் சாமி படம்போட்ட பொற்காசுகள். வெங்கடாசலபதியும், முருகனும், வினாயகனும், மகாலட்சுமியும் கலகலவென்று நகைத்து வாழ்த்துவது போல் இருந்தது சாமிநாதனுக்கும் சுந்தரிக்கும்.

ஷிவா கிருஷ்ணமூர்த்தி,
ப்ளேனோ, டெக்சஸ்

© TamilOnline.com