விழுப்புரம் அருகே வெடிச் சம்பவம்
ஏப்ரல் 7ம் தேதி அன்று விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் கிராமத்தில், ஜீப்பில் ஏற்றிச் சென்ற வெடிமருந்து வெடித்துச் சிதறி, சம்பவ இடத்திலேயே 17 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும், வெடித்தது ஆர்.டி.எக்ஸ்தான் என்றும் கூறினார். உடனடியாக மத்திய அரசு தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். விபத்தில் இறந்தவர்களுக்கு அ.தி.மு.க. சார்பாகத் தலா 25 ஆயிரம் ரூபாயும், காயம்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.

ஜெயலலிதாவின் குற்றச்சாட்டை வன்மை யாக மறுத்த அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி, 'திண்டிவனத்தில் ஏற்பட்ட விபத்தை ஏதோ பயங்கரவாதம் என்று சொல்லி, தமிழக மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் ஜெய லலிதா இறங்கியுள்ளார்' என்று குற்றம் சாட்டினார்.

வெடிவிபத்தில் இறந்த 17 பேரின் குடும்ப வாரிசுகளுக்குச் சத்துணைவுப் பணியாளர் வேலையும், இறந்தவர்களின் குடும்பங் களுக்குத் தலா 1 லட்சம் ரூபாயும் பலத்த காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாயும் தமிழக அரசு வழங்கியது.

சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டதோடு, விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விஜயகாந்த், வைகோ மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வரிசையாக வெடிவிபத்து நடந்த செண்டூர் கிராமத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தனர்.

வெடிமருந்துக்கான பொருட்கள், மனித வெடிகுண்டுகளாக மாறுவோர் அணியும் அங்கிகள், அலுமினிய குண்டுகள் ஆகியவை அண்மையில் தமிழகத்தின் பல இடங்களில் கைப்பற்றப்படுவதைச் சுட்டிக்காட்டிய பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் இல. கணேசன் செண்டூர் சம்பவம் குறித்து முழுமையான விசாரணையைத் தமிழக அரசு மேற்கொள்ளாமல், இது 'விபத்து' எனக் காவல்துறை டிஜிபி அவசரமாக அறிக்கை விடுத்திருப்பது ஏன் என்று கேள்வி ஒன்றையும் எழுப்பியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த கவனஈர்ப்பு தீர்மானத் தின் மீதான சட்டப்பேரவை விவாதத்தின் போது முதல்வர், இறந்தோர் குடும்பத்தை அரசே தத்தெடுக்கும் என்றும் குடும்பத்தில் அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்று கூறினார். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியும் வருவாய் நிர்வாக ஆணையருமான எம்.எ·ப். ·பரூக்கி தலைமையில் விசாரணை ஒன்று நடத்தப்படும் என்றும் அறிவித்தார்.

இதன் எதிரொலியாகத் தமிழகம் முழுவதும் வெடிமருந்துக் கிடங்குகளில் காவல்துறை யினர் அதிரடி சோதனையை மேற்கொள்ள தமிழக டிஜிபி முகர்ஜி உத்தரவிட்டார். வெடிமருந்தைப் பதுக்குவோர் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் அவர்எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வெடிவிபத்து நடைபெற்ற இடத்தை மத்திய அரசு வெடிமருந்து கட்டு பாடு அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com